கிராப்-கோட்டூ நிறுவனங்கள் இணைப்பு: இதுவரை அதிகாரத்துவ அறிவிப்பு ஏதுமில்லை

2 mins read
40c5e673-e637-418a-b6f6-4e851aeee9f7
கிராப் -கோட்டூ நிறுவனங்கள் இணைவது தொடர்பாக கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிராப்-கோட்டூ (Grab-GoTo) நிறுவனங்கள் இணைவது குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இரு நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருப்பதாகவும் ஆணையம் கூறியது.

கிராப்-கோட்டூ நிறுவனங்கள் இணைவது தொடர்பாகக் கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தொடர்புகொண்டு பேசியது.

“நிறுவனங்கள் இணைவது குறித்து எங்களுக்கு இதுவரை எந்த ஓர் அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வரவில்லை,” என்று ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சொன்னது.

கோட்டூ நிறுவனத்திலும் சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்டுள்ள கிராப் நிறுவனத்திலும் ஊபர் தொழில்நுட்ப நிறுவனம் பேரளவில் பங்குகளை வைத்துள்ளது. இரு நிறுவனங்களை ஒன்றுசேர்ப்பது தொடர்பாகப் பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

கோஜெக் (Gojek) நிறுவனமும் இந்தோனீசியாவின் டோக்கோபீடியா (Tokopedia) நிறுவனமும் இணைந்து உருவானதுதான் கோட்டூ நிறுவனம்.

கிராப்-கோட்டூ நிறுவனங்கள் இணைந்தால் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் பணிபுரியும் மில்லியன்கணக்கான தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே கிராப்-கோட்டூ நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. ஆனால் இம்மாதத் தொடக்கத்திலிருந்து நிறுவனங்களின் பேச்சுவார்த்தை தீவிரமாக உள்ளது. இதை இந்தோனீசிய உள்துறை அமைச்சும் நவம்பர் 7ஆம் தேதி உறுதி செய்துள்ளது.

இருப்பினும் இரு நிறுவனங்கள் இணைவதற்குச் சிங்கப்பூர் எதிராக உள்ளதாக இந்தோனீசியச் சமூக ஊடகங்களில் கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன. பல பதிவுகள் வதந்தியாகவும் உள்ளன.

கிராப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டனி டான், இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. திரு ஆண்டனி, நிறுவனங்கள் இணைவதற்கு அதிபர் பிரபோவோவிடம் உதவி கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்