பிள்ளைகளிடையே ஆரோக்கியமான மின்னிலக்கப் பழக்கங்களை வளர்க்க பெற்றோருக்கு ஆதரவளிக்கும் விரிவான வளங்களின் தொகுப்பு அறிமுகம் கண்டுள்ளது.
தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் அறிமுகம் செய்துள்ள இத்தொகுப்பு தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் பெற்றோருக்கான, மின்னிலக்கப் பழக்கங்கள் தொடர்பான பிள்ளை வளர்ப்பு ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.
இது, சனிக்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற ‘வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் இயக்கம்’ (Digital For Life) திருவிழாவின் ஓர் அங்கமாக வெளியீடு கண்டது.
கடந்த செப்டம்பர் மாதம் மின்னிலக்கப் பிள்ளை வளர்ப்பு ஆய்வு முடிவுகள் வெளியானபோது, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அத்துறையின் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் ஆகியோர் பெற்றோருக்குத் தேவையான மின்னிலக்கம் சார்ந்த பிள்ளை வளர்ப்புக்கான வளங்களை மேலும் செயல்பாட்டைச் சார்ந்ததாகவும், அணுகக்கூடியதாகவும் ஆக்குவதாக உறுதியளித்தனர்.
அது, பிள்ளைகளின் ஆரோக்கியமான மின்னிலக்கப் பழக்கங்களை வளர்க்கும் என்றும் கூறியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இந்த வளங்கள் தொடர்பில் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜோசஃபின் டியோ, “ஆரோக்கியமான மின்னிலக்கப் பழக்கங்கள் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளின் மின்னிலக்கப் பழக்கங்கள் குறித்து கவலையும் அக்கறையும் கொண்டிருந்தாலும் 40 விழுக்காட்டுக்கும் குறைவான பெற்றோர் மட்டுமே பிள்ளைகளுக்கு வழிகாட்டுதல் குறித்த தெளிவையும் தன்னம்பிக்கையையும் கொண்டுள்ளனர்,” என்றார்.
எனவே, இந்த மின்னிலக்கத் திருவிழாவின் வழியே, அவர்களுக்கான வளங்களை அறிமுகம் செய்வதுடன், வழிகாட்டுதலைத் தொடர ஏதுவாகப் பிள்ளைகளிடையே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய உறவு குறித்தும் ஆதரவளிப்பதாகச் சொன்னார்.
இந்தத் திருவிழா இவ்வகை ஆதரவுகளுக்கான தொடக்கம் என்று கூறிய அவர், இது பள்ளிகள் உள்ளிட்ட பிற வழிகளின் மூலம் பெற்றோரைச் சென்றடைய வழிவகுக்கப்படும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
அமைச்சின் சார்பில் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் இந்த முன்னெடுப்புகளைத் தலைமையேற்று வழிநடத்துவார் என்றும் குறிப்பிட்டார் அமைச்சர் ஜோசஃபின் டியோ.
மின்னிலக்கப் பிள்ளை வளர்ப்பு வளங்கள்
பெற்றோர், இளையர்கள், ஊடக அறிவு மன்றம் உள்ளிட்ட முக்கியப் பங்காளிகளுடனான ஆலோசனைகளுக்கேற்ப இந்த வளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இணையவழிகளில் உரிய எல்லைகளை வகுத்தல், சிந்தித்துச் செயல்படுதல், முறையற்ற உள்ளடக்கங்கள் குறித்துப் புகாரளித்தல், பிள்ளைகளின் இணையவழிப் பயணத்தில் ஆதரவளித்தல் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களை இவ்வளங்கள் உள்ளடக்கும்.
இவை பிள்ளைகளின் வயதுக்கேற்றவாறு, முதல் திரை அனுபவம், முதல் திறன்பேசி, முதல் சமூக ஊடகக் கணக்குகள் உள்ளிட்ட முக்கிய நிலைகளுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.
காணொளிகள், தகவல் வரைகலை (Infographics), இருவழித் தொடர்புள்ள விளையாட்டுகள் கொண்ட இவ்வளங்கள் பெற்றோர்களின் பயன்பாட்டுக்காக ‘வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் இயக்கம்’ இணையத்தளத்தில் பதிவேற்றப்படும்.
‘வாழ்வுக்கான மின்னிலக்கப் பயன்பாடு’ (Digital For Life) நிகழ்ச்சி
இவ்வாண்டின் வாழ்வுக்கான மின்னிலக்கப் பயன்பாடு நிகழ்ச்சி இரு வாரயிறுதிகளில் நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சி அக்டோபர் 25, 26 தேதிகளில் ‘விவோ சிட்டி’ கடைத்தொகுதியில் நடைபெற்றது. இரண்டாவது நிகழ்ச்சி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது.
‘ஹார்ட் பீட் @ பிடோக்கில்’ நடைபெறும் இவ்விழாவில், வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் இயக்கத்தின் புரவலரான அதிபர் தர்மன் சண்முகரத்னம், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அத்துறையின் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் 110 க்கும் மேற்பட்ட பங்காளித்துவ நிறுவனங்கள் பங்கேற்றன. அனைத்து வயதினருக்கும் மின்னிலக்க முன்னேற்றங்கள் தொடர்பான அனுபவங்களை இவ்விழா வழங்கியது.
கூகல், ஓப்பன் ஏஐ, கோபைலட் உள்ளிட்ட அனைத்துலக நிறுவனங்களும், அரசாங்க அமைப்புகளும், சமூக அமைப்புகளும் இதில் பங்கேற்று, அவரவர் நிறுவனங்களின் புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்தனர்.
மூத்தோருக்கு, அடிப்படை செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைக் கற்றுக்கொடுத்தார் இளையரும், சிங்கப்பூர்க் கணினி மன்றத்தின் தொண்டூழியருமான ஷஃபீக் முகமது ஹாஜா முகைதீன், 24.
இணையப் பாதுகாப்புத் துறை ஊழியரான இவர், “அன்றாடப் பணிகளை எளிதாக்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை மூத்தோர் அறிவதும் பயன்படுத்துவதும் அவர்களுக்கு உதவும். ஆனால், அவற்றைக் கற்பிக்க குடும்பத்தினருக்கு நேரம் இருக்காது. இந்த நிகழ்ச்சிமூலம் அதனைச் செய்வதில் மகிழ்ச்சி,” என்றார்.
மூத்தோர் பலரும் ஆர்வத்துடன் இவற்றைக் கற்பதாகவும் திரு ஷஃபீக் குறிப்பிட்டார்.
இணையத்தில் நடக்கும் பிரச்சினைகள், அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதை விளக்கினர் ‘யுனைட்டெட் வுமன் சிங்கப்பூர்’ (United women singapore) அமைப்பினர்.
“இணையத்தில் வரும் சிறு சிறு கருத்துகளும் சிலரைப் பாதிக்கலாம். இணையவழியில் ஏற்படும் உறவுகள் மூலம் மனநலனைப் பாதிக்கும் சம்பவங்கள் நடக்கலாம். மோசடிகள் நடக்கலாம். இவை குறித்து இளையர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்,” என்றார் அமைப்பில் மூத்த மேலாளராகப் பணியாற்றும் அனுபமா கண்ணன், 52.
தங்களுக்கு மட்டுமன்றி நண்பர்களுக்கு நடந்தால் என்ன செய்ய வேண்டும், ஆரோக்கியமான இணையப் பயன்பாடு என்றால் என்ன என்பது குறித்து அவர்கள் விளக்கினர். மேலும், தங்களுக்குத் தெரியாமலேயே, இளையர்கள் பிறரைப் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளதைக் குறிப்பிட்ட அவர், அது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறினார்.
“நிகழ்ச்சியில் இளையர்களுடன் மூத்தோரும் ஆர்வத்துடன் பங்கேற்று தெரிந்துகொள்வதில் மகிழ்ச்சி,” என்றார் அனுபமா.

