மாணவர்களின் கற்றல் பயணம்

2 mins read
25086fad-bc52-477c-9f7f-edf7d9d8f506
தமிழ் முரசு அலுவலகத்திற்கு வந்திருந்த டாமாய் தொடக்கப்பள்ளி மாணவர்கள். - படம்: ரவி சிங்காரம்

தமிழ் முரசு பத்திரிகையாளரின் அன்றாட வாழ்வு எப்படி இருக்கும் எனச் சிந்தித்துள்ளீர்களா மாணவர்களே?

பத்திரிகை அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக இருக்கும். அடுத்து என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாததால் அந்தச் சுவாரசியம் இருந்துகொண்டே இருக்கும்! 

அன்றாடம் அச்சிடப்படும் நாளிதழின் பின்னணியில் என்னென்ன நடக்கிறது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள டாமாய் தொடக்கப்பள்ளியில் இருந்து 13 மாணவர்களை ஆசிரியர்கள் திரு மலையரசன், ஆசிரியை திருமதி பிரேமா ஆகியோர் தமிழ் முரசு அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

தமிழ் முரசு செய்தியாளர் கீர்த்திகா ரவீந்திரன் தன் அனுபவத்தை மாணவர்களுடன் பகிர்ந்தார்.

“செய்தியாளராக உங்கள் எழுத்து, ஒருவருடன் ஒருவர் பேசும் திறன், மக்கள் முன்னிலையில் பேசும் திறன் ஆகியவற்றால் தன்னம்பிக்கை மேம்படும்,” என்றார் செல்வி கீர்த்திகா.

அவர் யாரையெல்லாம் பேட்டி கண்டுள்ளார், எத்தகைய செய்திகள் எழுதியுள்ளார் அல்லது காணொளிகளாக வெளியிட்டுள்ளார் போன்றவற்றை மாணவர்கள் அறிந்துகொண்டனர்.

திங்கட்கிழமைகளில் வெளிவரும் ‘மாணவர் முரசு’ அங்கத்தையும் ஆசிரியர் வகுப்பறையில் பயன்படுத்துவதாக கூறினர் மாணவர்கள்.

“நாங்களும் கட்டுரை எழுதிக் கொடுக்கலாமா?” என்று கேள்வி கேட்டனர் மாணவர்கள். தேசிய தினக் கொண்டாட்டம் களைகட்டி வருவதால் நாட்டைப் பற்றியும் தங்களுக்கு தேசிய தின அணிவகுப்பில் பிடித்த அங்கங்கள் பற்றியும் மாணவர் முரசுக்கு எழுதி அனுப்பலாம் என்று கூறினார் மாணவர் முரசு ஆசிரியர் பட்டு.

அதன்பின், மாணவர்கள் செய்தியறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தமிழ் முரசின் மற்ற செய்தியாளர்கள், ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடினர்.

“எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் மாணவர் முரசும் தமிழ் முரசும் படிப்பேன். இன்று எங்களுக்குப் புதிய அனுபவம். செய்தியாளர்கள், புகைப்படம் எடுப்பவர்கள் எப்படிப் பணியாற்றுகிறார்கள், தமிழ் முரசுக்கு என்ன வயது போன்றவற்றை நான் கற்றுக்கொண்டேன்,” என்றார் மித்ரா ஹர்‌‌ஷணா, 11.

“நிருபராக என்ன செய்கிறார்கள், எப்படி நேர்காணல் செய்வது எனக் கற்றுக்கொண்டேன்,” என்றார் மித்ரா சந்திரசேகர், 11.

மாணவர்களுக்கும் கேள்விகள் இருக்கும் அல்லவா? “யார் தமிழ் முரசை நிறுவினார்? ஏன் நாளிதழுக்கு ‘முரசு’ என்ற பெயர் வந்தது? இப்போது சிங்கப்பூருக்கு வயது 60தான் எனும்போது எப்படி தமிழ் முரசுக்கு வயது 90ஆக இருக்கமுடியும்?” என மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

உங்களுக்கும் அத்தகைய கேள்விகள் உள்ளனவா? பதில் தெரிந்துகொள்ள தமிழ் முரசு அலுவலகம் உங்களை வரவேற்கிறது!

குறிப்புச் சொற்கள்