பிள்ளைகளின் கண்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு பெற்றோர் ஓய்வு நேரத்தின்போது அவர்களுக்குப் பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகம் செய்யலாம்.
தனிமையில் பிள்ளைகளைத் தொலைக்காட்சி பார்க்க வைப்பதற்குப் பதிலாகப் புத்தாக்க நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதில் நீண்டகால நன்மைகள் ஏராளம் உள்ளன.
தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் மின்னிலக்க உலகிற்கு வெளியே, மனிதரிடத்தில் மனிதர்கள் கற்க வேண்டியவை ஏராளமாக உள்ளன.
ஐந்து வயது டான்யா சமிக்-ஷா சுடேஷ், தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பார்.
ஆனால், அளவுக்கு மீறி பார்த்தால் கண்ணாடி அணியும் தேவை ஏற்படும் என்பதால், கைவினைக் கலையில் டான்யாவை ஈடுபடுத்த அவர் தாயார் முடிவு செய்தார்.
“ஏர் கிளே’ என்ற ஒருவகை களிமண்ணால் என் மகள் வண்ண உணவுப் பொருள்களை வடிவமைக்கிறாள்,” என்று தாயார் திருவாட்டி துர்கா சண்முகம், 40, கூறினார்.
“வாழையிலைச் சாப்பாடு, காய்கறிகள், அப்பம் போன்ற உணவுப்பொருள்களின் வடிவங்களை என் மகள் அழகாகச் செய்கிறார்,” என்று அந்தத் தாயார் மகிழ்ச்சியுடன் கூறினார்.
‘ஏர்’ களிமண் மூலம் பொருள்களை வடிவமைப்பது பாதுகாப்பானது. அத்துடன் ஓரளவுக்குத் தூய்மையான நடவடிக்கையாகவும் உள்ளது. ஒரு பொருளின் வடிவத்தையும் வண்ணங்களையும் நன்கு கவனித்து அதனைப் போன்ற ஒன்றை களிமண்ணிலிருந்து வடிவம் கொடுக்க முற்படுவது நல்லது.

