தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண்ணனும் மேடைப்பேச்சும்

2 mins read
c2cbb0f0-b40e-4e3f-a4b7-a52ab75854c8
கண்ணனின் பழைய நினைவலைகள். - படம்: இந்திய ஊடகம்

ஆசிரியர் கண்ணன் மேடையில் பேசி முடித்ததும் மாணவர்களிடமிருந்து பலத்த கைதட்டல்கள் தொடர்ந்தன. அவர் சிரித்துக்கொண்டே தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.

அவர் ஆசிரியராக இருக்கும் அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போது நடந்த நினைவலைகள் அவர் கண் முன்னே படம்போல ஓடியது.

ஆசிரியர் பாலா வகுப்பிற்குள் நுழைந்ததும் மாணவர்களை வரிசையாக பாடப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்கச் சொல்வது வழக்கம்.

அன்றும் ஒரு மாணவன் படித்து முடித்ததும் கண்ணன் படிக்கவேண்டிய நேரம் வந்தது. கண்ணன் படிப்பில் கெட்டிக்காரன். ஆனால், வகுப்பின் முன் நின்று படிக்க, பேசத் தயங்குவான். அன்றும் அவனுக்கு நாக்கு நடனமாடத் தொடங்கியது. வியர்த்துக் கொட்டியது. மயக்கம் வருவதுபோல் இருந்தது.

அவனுடைய நிலையைப் பார்த்த ஆசிரியர் பாலா, பலரின் முன்னால் பேசுவதற்கு கண்ணனால் முடியவில்லை. அதற்குக் காரணம் கண்ணனின் பயம் என்பதைப் புரிந்துகொண்டார்.

மறுநாள் முதல் மாணவன் விட்ட இடத்திலிருந்து கண்ணன் படிக்கவேண்டிய நேரம் நெருங்கியது. கண்ணனுக்கு மீண்டும் அதே பயம், வியர்வை, கால் நடுக்கம் எல்லாம் வரத் தொடங்கியது.

அதைக் கவனித்துக்கொண்டு இருந்த ஆசிரியர் பாலா, மற்ற மாணவர்களைப் பார்த்து, “நீங்கள் அனைவரும் பக்கத்து அறையில் போய் காத்திருங்கள். நான் வருகிறேன். அதுவரை கண்ணன் இந்தப் புத்கத்தை வேகமாக படித்துக்கொண்டு இருப்பான்,” என்று கூறி மற்ற மாணவர்களை அழைத்துக்கொண்டு பக்கத்து வகுப்பறைக்குச் சென்றார்.

வகுப்பறையில் தான் மட்டும்தான் இருப்பதை உணர்ந்த கண்ணன், பயமின்றி சரளமாகப் படிக்கத் தொடங்கினான்.

சிறிது நேரத்தில் ஒவ்வொரு மாணவராக வகுப்பறைக்குள் வந்து அவரவர் இடத்தில் அமரத் தொடங்கினர். ஆசிரியர் பாலாவும் இறுதியாக வந்தார்.

ஆனால், கண்ணன் முகத்தில் ஒரு பயமோ சலனமோ இல்லாமல் இறுதி வரிகளை முடித்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.

அவன் இருக்கையில் அமர்ந்ததும், மாணவர்களும் ஆசிரியரும் கைதட்டத் தொடங்கினார்கள். அப்போதுதான் கண்ணனுக்கு சுயநினைவு வந்தது.

ஆசிரியர் பாலா, கண்ணனை நெருங்கி, “கண்ணா, நீ தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்குகிறாய். ஆனால் பேசும்போது மட்டும் கூட்டத்தைப் பார்த்து பயப்படுகிறாய். இப்போது கணீரென்று எவ்வளவு சத்தமாக படித்தாய். இதுபோல் நீ தினமும் வீட்டிலும் தைரியத்துடன் பேசிப் பயிற்சி செய். உன்னுடைய பலவீனம் மறைந்து உனக்குள் தன்னம்பிக்கை பிறக்கும்,” என்று கூறிப் பாராட்டினார்.

அன்று முதல் கண்ணன் தன் வீட்டிலும் அறையின் கதவை மூடிக்கொண்டு பயிற்சி பெற்றான்.

அதே கண்ணன் தற்பொழுது அதே பள்ளியில் தமிழாசிரியராக பொறுப்பேற்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கதைகளைக் கூறி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

“கண்ணன் ஆசிரியர் உங்களை மேடைக்கு அழைக்கிறார் தலைமையாசிரியர்,” என்று அவருடைய மாணவன் சொல்வது காதில் விழுந்ததும் தன்னுடைய பழைய நினைவுகளில் இருந்து மீண்டு, சிரித்துக்கொண்டே மேடையை நோக்கிச் சென்றார் ஆசிரியர் கண்ணன்.

குறிப்புச் சொற்கள்