சிங்கப்பூரின் புகழ்பெற்ற உணவு வகைகளை மையப்படுத்தி, சிறுவர் அரும்பொருளகத்தில் இருக்கும் ‘கண்டுபிடிப்பகம்’ (Discovery Room) சிறுவர்களுக்கான துடிப்பான தளமாக உருமாற்றப்பட்டுள்ளது.
சிறுவர்கள் விளையாட்டின் மூலம் பயின்று, உணவின் மரபை ஆராய்ந்து, புத்தாக்கமிக்க அனுபவத்தைப் பெற ஊக்குவிக்கும் வகையில் இத்தளம் அமைந்துள்ளது.
மாணவர்களோடும் சிறுவர் அரும்பொருளகத்தின் இளைய தூதர்களோடும் இணைந்து, ‘ஆடுவோம் ஆக்குவோம்’ (Play + Make) என்ற இத்தளத்தைச் சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம் வடிவமைத்துள்ளது.
ஜூலை 20 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை சிறுவர் அரும்பொருளகத்தில் அமைந்திருக்கும் இத்தளத்திற்கு வருகையாளர்கள், குறிப்பாகச் சிறுவர்கள் செல்லலாம்.
பாரம்பரிய உணவுகள் முதல் உள்ளூர் உணவங்காடிகளில் விற்கப்படும் உணவு வகைகள் வரை, நம் அடையாளத்தை உருவாக்கி, சமூகங்களை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றிவரும் உணவைக் கொண்டாடும் தளமாகவும் இது விளங்குகிறது.
ஜூலை 16ஆம் தேதி நடந்த ‘ஆடுவோம் ஆக்குவோம்’ தளத்தின் முன்னோட்டக் காட்சியில் மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பங்கேற்ற சிறுவர்களோடு கலந்துரையாடினார்.
இத்தளத்தின் ஓர் அங்கமாக உள்ளூர் கலைஞர்கள் உருவாக்கிய உணவுசார்ந்த பொருள்கள் ‘படைப்பாளர் அவை’யில் (Maker’s Cabinet) காட்சிப்படுத்தப்பட்டன.
உள்ளூர் உணவை மையப்படுத்தி ‘டக்ஷாப் (Tuckshop)’ நிறுவனம் வடிவமைத்த காலணிகள், டுரியான் பழ உருவத்தைக் கொண்டு ‘ரெக்லஸ் எரிக்கா’ நிறுவனம் வடிவமைத்த ஆடை போன்ற கலைப்பொருள்களும் அவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
சிறுவர்களின் கற்பனைத்திறனைத் தூண்டும் வகையில் நயம்பட ஒரு ‘படைப்பாளர் அவை’யை வடிவமைக்க, பல்வேறு கலைஞர்களின் எண்ணங்களையும் கருத்தில்கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஆடைகளைப் பொம்மைகளுக்கு அணிவித்துப் பார்த்தல், உணவு தயாரிக்க தேவைப்படும் பொருள்களை உருவாக்குதல், வெவ்வேறு துணிகளைக் கொண்டு பொம்மைகளுக்கான ஆடைகளை நெய்தல் போன்ற பல நடவடிக்கைகளில் சிறுவர்கள் கலந்துகொள்ளலாம்.
அத்துடன், சிறுவர்களைக் கவரும் வண்ணம் கைவினைப் பொருள்களும் சிறிய ஆவணங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதால், ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் ‘ஆடுவோம் ஆக்குவோம்’ தளத்தைச் சிறுவர்கள் அனுபவித்து, தங்களின் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளலாம்.

