சிறுவர்களுக்கான புத்தக வெளியீடு லீ கொங் சியன் தேசிய நூலகத்தில் ஜூன் 14ஆம் தேதி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.
இந்தப் புத்தக வெளியீடு நிகழ்ச்சிக்கு ‘KriyaiD’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது. உயிர் எழுத்துகளைப் பற்றிய புத்தகத் தொடரில் இந்த ‘ஊர் சுற்றும் ஊ’ என்ற புத்தகம் ‘KriyaiD’ வெளியிடும் 8வது புத்தகம். ‘ஊர் சுற்றும் ஊ’ என்ற புத்தகத்தின் கதை சொல்லும் அங்கம், பிள்ளைகளுக்கான ஊடாடும் நடவடிக்கைகள் போன்ற ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதுதான் இப்புத்தக வெளியீடு.
இந்த உயிர் எழுத்துகளைப் பற்றிய புத்தகத் தொடரின்வழி அடுத்த தலைமுறையிடம் இளம் வயதிலேயே தமிழை விதைக்க வேண்டும் என்பதே இப்புத்தக வெளியீட்டின் நோக்கமாகும்.
இப்புத்தகத் தொடர் இளம் சிறுவர்களுக்காக முக்கியமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது.
‘KriyaiD’ அமைப்பின் துணை நிறுவனர், திருவாட்டி தேவி விஜயன் தான் உயிர் எழுத்துகளை பற்றிய புத்தகத் தொடரை உருவாக்க வேண்டும் என்ற யோசனை உருவாக காரணமானவர்.
“ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதற்கான அடிப்படை என்பது ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொள்வதுதான். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழி என்ற அஸ்திவாரத்தை பிள்ளைகள் மனத்தில் விதைப்பதற்கு எந்தவிதப் படைப்புகளோ புத்தகங்களோ இல்லை. அதனால், பிள்ளைகளுக்கு எளிமையாக கதைகளின் மூலம் தமிழை கொண்டுசேர்க்க வேண்டும் என்று நான் நினைத்தேன்,” என்றார் திருவாட்டி தேவி விஜயன்.
“ உயிர் எழுத்துகளைப் பற்றிய புத்தகத் தொடரில் இதுவரை வெளிவந்த ஒவ்வொரு புத்தகமும் வேறுபட்ட கருப்பொருளைக் கொண்டுள்ளது. அதுபோல, ‘ஊர் சுற்றும் ஊ’ என்ற இந்த 8வது புத்தகம் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் பொருள்கள் வாங்குவதை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது,” என்றார் இப்புத்தகத்தின் எழுத்தாளர் திருவாட்டி கனகேஸ்வரி முத்துகுமரன்.
“எனக்கு அந்தக் கதை சொல்லும் அங்கம் மிகவும் பிடித்திருந்தது. ஆசிரியை கனகேஸ்வரி முத்துகுமரன் கதையை சுவாரஸ்யமான முறையில் சொன்னார்,” என்று மாணவி வேதவள்ளி வடிவேலன், 10, பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் தமிழில் பேச ஊக்குவித்த நடவடிக்கைகள் என்னை கவர்ந்தன,” என்றார் வேதவள்ளியின் தாயார் திருவாட்டி துர்காதேவி சிவாஜி, 38.
“ஊதா பூ, ஊறுகாய், ஊதுபத்தி போன்ற புதிய சொற்களை நான் இக்கதையின்வழி கற்றுக்கொண்டேன்,” என்றார் கிஷா ஜெயராஜ், 3.
“தமிழை சரளமாகப் பேசுவதற்கும் படிப்பதற்கும் இந்நிகழ்ச்சி ஒரு நல்ல பாலமாக அமைந்தது,” என்றார் பெற்றோர் சிவகாமி கணேசன், 37.