‘வெள்ளைத் தங்கம்’: வேட்டை ஆரம்பம்

4 mins read
3b90517d-5e97-40ec-ba72-77619b41c009
தமிழகத்தில் ஹைட்ரஜனை வீட்டுக்கும் தொழிலகங்களுக்கும் எரிபொருளாக்கும் புது முயற்சி ஒன்று அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது. - படம்: இணையம்
multi-img1 of 3

புவி வெப்பமாதல் குறித்து கவலைப்படாத நாடு இருக்க முடியாது.

அடுத்த சில ஆண்டுகளில், குறிப்பாக, 2030ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமாதலை குறைக்காவிடில் உலகின் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆனால், மனிதன் எதையும் கேட்பதாக இல்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் புவி 1.5 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பமாகும் என்பதால் உடனடியாக இதற்குக் காரணமான கரிம உமிழ்வை உலக நாடுகள் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிளாஸ்கோ ‘ஒப்பந்தம்’ வலியுறுத்துகிறது.

கரிம வெளிப்பாடுதான் புவி வெப்பமாதலுக்கு முக்கியமான காரணம். மேலும், மின் உற்பத்தியும் மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.

நிலக்கரி, பெட்ரோல் ஆகிய புதைபடிம எரிபொருள்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதாவது, மொத்த கரிம உமிழ்வில் 75 விழுக்காட்டிற்கு இவைதான் காரணம்.

கச்சா எண்ணெய்க்குப் பெரும்போட்டி நிலவுகிறது. அடுத்த உலகப் போருக்கு தண்ணீர் அல்லது எண்ணெய்தான் காரணியாக இருக்கும் என்கிறார்கள். இந்தச் சூழலில் இந்தியா குறைந்த விலைக்கு எண்ணெய் கிடைக்குமா என்று நோட்டம்விட்டால், ரஷ்யாவுடன் இதற்காக உடன்பாடு கொண்டால், அமெரிக்கா கோபித்துக்கொண்டு கூடுதல் வரி விதிக்கிறது.

எனவே, கச்சா எண்ணெய்க்கு மாற்று சக்தியை உருவாக்காவிட்டால் போர் மட்டுமன்று, புவி வெப்பமாதலையும் தவிர்க்க முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஹைட்ரஜனை எரிக்கும்போது அது நீராக மாறுவதால் கரிம உமிழ்வுக்கு வாய்ப்பில்லை. எனவே, ஹைட்ரஜனை மாசின்றிப் பிரித்துவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடும். ஆனால் சொல்வது எளிது, செயல்படுத்துவது கடினம். தற்போது பூமிக்கு அடியில் உள்ள ஹைட்ரோகார்பன் மூலத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜனைப் பிரித்தெடுப்பதே குறைந்த செலவில் கடைப்பிடிக்கப்படும் மாற்றுவழி. இந்த முறையில் ஆண்டுதோறும் 12 கோடி டன் ஹைட்ரஜன் உலகெங்கும் தயாரிக்கப்படுகிறது. இதை கறுப்பு ஹைட்ரஜன் என்கிறார்கள்.

“ஹைட்ரஜன் எத்தகைய ஆற்றல் மூலம் தயாரிக்கப்படுகிறது என்பதைக் கொண்டு அதன் பெயர் வேறுபடுகிறது. சாம்பல் ஹைட்ரஜன், நீல ஹைட்ரஜன், பசுமை ஹைட்ரஜன் என பலவகைப்படும்.

காற்று, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க வளங்கள்மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தினால் பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரஜன்தான் பசுமை ஹைட்ரஜன் என்கிறார்கள். இது மாசற்றது. இதுதான் உலகம் எதிர்கொண்டுள்ள பெருஞ்சவால்.

பசுமை ஹைட்ரஜனை தயாரிக்க தண்ணீரும் மின்சாரமும் தேவை. இந்தியாவில் நீண்ட கடற்கரைகள், சூரிய ஒளி ஆகிய இருவளங்கள் மிகுந்திருப்பதால் சிக்கல் இருக்காது.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக இந்திய அரசு ரூ.19,744 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனாலும், கரிம உமிழ்வு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

“2030க்குள், ஆண்டுக்கு 50 லட்சம் ஹைட்ரஜன் உற்பத்தித் திறன் என்ற இலக்கை இந்தியா அடைய வேண்டியுள்ளது. இதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் 7,500 கோடி டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் ஒரு கிலோ ஹைட்ரஜன் அதிகபட்சமாக, ரூ.400க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், அதானி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒரு டாலருக்கு விற்கப்போவதாக அறிவித்துள்ளன.

ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரீன்கோ குழுமம், ஜான் கோக்ரில் (பெல்ஜியம்) ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இரண்டு கிகாவாட் திறன்கொண்ட ஹைட்ரஜன் தொழிற்சாலை அமைய உள்ளது.

“எல் அண்ட் டி, பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், கெய்ல், டாட்டா பவர், ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களும் பசுமை ஹைட்ரஜன் ஆலைகளை அமைத்துள்ளன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட தமிழகத்தில் அமைக்கப்படவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது,” என்கிறார் பேராசிரியர் முனைவர் இ.ஜே.சுந்தர்.

அண்மையில் பூமிக்கு அடியில் உள்ள நிலத்தடி தேக்கங்களில் இயற்கையாக உருவாகும் வெள்ளை நிறத்திலான ஹைட்ரஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 1859ல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் டைட்டஸ்வில்லில் தொழிலதிபர் எட்வின் டிரேக் பெட்ரோலியத்தைக் கண்டுபிடித்துப் பெட்ரோல் யுகத்தைத் தொடங்கி வைத்ததாக தமது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“அன்று கண்டுபிடிக்கப்பட்டது கறுப்புத் தங்கம் எனில், இப்போது கண்டுபிடித்து எடுக்கப்போகும் ‘வெள்ளைத் தங்கம்’ மற்றுமோர் புதிய யுகத்தைத் தொடங்கி வைக்கக்கூடும். எனினும், புவியின் ஆழமான இடத்தில் உள்ள வெள்ளைத் தங்கத்தை எடுப்பதற்கு அதிகம் செலவாகிறது என்பதுதான் சிக்கல்.

“இதைக் குறைப்பதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலகெங்கிலும் உள்ள 50 நிறுவனங்கள் வெள்ளைத் தங்கத்தை எடுக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இதற்காக நூறு கோடி டாலருக்கு மேல் செலவழிக்கப்படுகிறது.

“நிலத்தடியில் உள்ள 2% ஹைட்ரஜனை மீட்கத்தான் இந்தப் போராட்டம். இந்த 2% ஹைட்ரஜன் அடுத்த 200 ஆண்டுகளுக்கு உலகின் தேவையை நிறைவு செய்யும்,” என்கிறார் திரு இ.ஜே.சுந்தர்.

அவர் குறிப்பிட்டதுபோல், ஆல்ப்ஸ் முதல் இமயமலை வரையுள்ள மலைச்சிகரங்களில் வெள்ளைத் தங்கத்தைக் கண்டறியும் வேட்டை நீடித்து வருகிறது.

பெட்டிச் செய்தி

தமிழகத்தில் ஹைட்ரஜனை வீட்டுக்கும் தொழிலகங்களுக்கும் எரிபொருளாக்கும் புது முயற்சி ஒன்று அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

சேலம் அருகே பேளூரைச் சேர்ந்த தமிழ் அறிவியலாளர் இராமலிங்கம் கார்த்திக், சேமிக்கும் தேவையில்லாத் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை உடனடியாகப் பிரித்து வீட்டிலும் தொழிலகங்களிலும் பயன்படுத்தும் வகையில் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இப்போதுள்ள சமையல் எரிவாயுவிற்குப் பதில் இக்கருவி உருவாக்கும் பசுமை ஹைட்ரஜன் பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கும் என அவரது நிறுவனத்தார் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்