மும்பை : காபி உறைக்குள் ரூ.47 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து பேரை மும்பை விமான நிலையத்தில் காவல்துறை கைது செய்தது.
இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட விமானத்தில் போதைப் பொருள் கடத்தி வரப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானப் பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டபோது அதில் இருந்து ஒன்பது காபி உறைகளுக்குள் ‘கொகைன்’ போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. 47 கிலோ எடை கொண்ட அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.47 கோடி ஆகும்.
இதையடுத்து, அதைக் கடத்தி வந்த பெண்ணும் அவரை வரவேற்க விமான நிலையம் வந்த ஆடவர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

