சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: பாஜக கூட்டணி வசமானது பீகார்

3 mins read
805d3666-1f6d-4c04-8774-2092d4d42402
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை பாஜகவினர் தலைநகர் பாட்னாவில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர். - படம்: பிடிஐ

பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெருவெற்றி பெற்றுள்ளது. அக்கூட்டணி ஏறக்குறைய 190 இடங்களில் முன்னிலையில் இருந்ததாகச் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

பீகார் தேர்தலுக்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அன்று மாலை நிலவரப்படி, ஏறக்குறைய 190 இடங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி முன்னிலை வகித்தது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பீகார் சிறப்பு ஆயுதப்படை, துணை ராணுவப் படை, மத்திய ரிசர்வ் காவல் படைகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.

மொத்தம் 46 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு, 2,600 வேட்பாளர்களின் அரசியல் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியளவில் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றது.

இரண்டாம் கட்டத் தேர்தலில் 67% வாக்குகள் பதிவானது பீகார் மாநில வரலாற்றில் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. மேலும், புது எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி இருந்தது. வாக்குப்பதிவுக்குப் பின்னர் வெளியான 11 கருத்துக்கணிப்புகளில் 10 கணிப்புகள் பாஜக கூட்டணிக்குச் சாதகமாக இருந்தன. அதற்கேற்ப தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி, கணித்ததைவிட மிகுந்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. தேர்தல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு ஓரிடத்தில்கூட வெற்றி கிட்டவில்லை. இம்முறை பாஜகவும் நடப்பு முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்தன. இரு கட்சிகளும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், பாஜக தனிப்பெரும் கட்சியாக 93 இடங்களிலும் ஐக்கிய ஜனதாதளம் 82 இடங்களிலும் முன்னிலை வகித்தன.

கடந்த 20 ஆண்டுகளில் பீகார் அரசியல் களம் மெல்ல மெல்ல பாஜகவுக்கு சாதகமான தளமாக மாறிவிட்டதை இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

எனவே, நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டாலும் அவரை முதல்வராக்க பாஜக தரப்பில் ஒருமித்த ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகத்தை அரசியல் பார்வையாளர்கள் எழுப்பியுள்ளனர்.

இதனிடையே, இது எதிர்பாராத வெற்றி என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி மீதான நம்பிக்கை காரணமாகவே பீகார் மக்கள் தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

‘பீகார் என்றால் நிதிஷ். புலி இன்னும் உயிருடன்தான் உள்ளது’ என்று குறிப்பிட்டு நிதிஷ்குமாரை வாழ்த்தி அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் குடும்ப அரசியலுக்கு எதிராகத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக அரசியல் கவனிப்பாள்கள் கூறியுள்ளனர். பிரசாந்த் கிஷோர் அரசியலைவிட்டு விலகலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.

பீகார் சட்டப்பேரவையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. இவற்றுள் வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் நேரம் இரவு 8 மணி நிலவரப்படி, 202 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் 34 இடங்களில் இண்டியா கூட்டணியும் ஏழு இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை வகித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன்.

குறிப்புச் சொற்கள்