தலையங்கம்

tm logo
Sunday, May 6th, 2012

செல்வந்தர்கள் தொடர்ந்து தங்கள் வளங்களைப் பெருக்கிக் கொள்வதும், வசதி குறைந்தோர் அதே நிலையில் தொடர்வதும் உழல்வதும் உலக நாடுகள் அனைத்திலும் காணப்படும் பிரச்சினை. சிங்கப்பூர் அதற்கு விதிவிலக்கல்ல. 

தனது மக்களிடையே வருமான இடைவெளியைக் குறைத்து நிலைமையை சரிசெய்வது ஒரு நல்ல அரசாங்கத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். அது முடியாத காரியம் என்று சொல்வி விட முடியாது. வசதிகளைப் பெருக்கும் நோக்கோடு ‘கிரமீன் வங்கி’ என்ற வித்தியாசமான சிறுகடன் வங்கியை உலகிற்குத் தந்து அதற்காக நோபெல் பரிசு வென்ற முகமது யூனுஸ் “அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் ஒன்றாக ஏழ்மை நிச்சயம் மாறும்,” என்று என்று நம்பிக்கை ததும்ப கூறுகிறார்.

அவரது இந்த நம்பிக்கை மெய்ப்பட தனிமனித முயற்சியும் தேவை, அரசாங்கக் கடப்பாடும் தேவை.
சம்பள இடைவெளியைக் குறைத்து வசதிகளைப் பெருக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசாங்கம் தற்பொழுது முனைப்பாக ஈடுபட்டுள்ளது.

இதற்கு உதாரணமாக, குறைந்த வருவாய் ஊழியர்களின் உண்மையான சம்பளங்களை 30 விழுக்காடு வரை உயரச் செய்வதே தமது அரசாங்கத்தின் நீண்டகால இலக்கு என்று நிதியமைச்சர் தர்மன் சண்முகரத்னம் ஏற்கனவே அறிவித்திருப்பதைக் கூறலாம்.

இதற்கிடையில், சம்பள இடைவெளியைக் குறைக்க, குறைந்த வருவாய் பெறுவோரின் ஊதியத்தை மூன்றே ஆண்டுகளில் 50 விழுக்காடு உயர்த்தலாம் என்று தேசியச் சம்பள மன்றத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் லிம் சோங் யா கடந்த மாதம் யோசனை கூறியுள்ளார்.

மிக நல்ல எண்ணத்தோடு கூறப்பட்ட ஆலோசனைதான் அது என்றாலும் அது சரியான அணுகுமுறை ஆகாது என்று தொழிற்சங்கத் தலைவர்களும், இந்த வாரம் பிரதமரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

உற்பத்தித் திறன் உயராமல் சம்பளத்தை மட்டும் உயர்த்துவது பொருளியல் நலனுக்கு எதிரானது என்பதே பிரதமரின், சிங்கப்பூர் அரசாங்கத்தின் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. அதிகரித்து வரும் வருமான இடைவெளி என்பது எப்போதுமே ஒரு நெருடலான பிரச்சினைதான். அதுவே பணவீக்கம் அதிகமாகும் போது இன்னும் அதிக நெருடலை ஏற்படுத்துகிறது.
மார்ச் மாதத்திற்கான பணவீக்கம் ஆக அதிகமாக 5.2 விழுக்காட்டைத் தொட்டிருக்கிறது. ஆனால் அத்தியாவசியப் பொருள்கள், சேவைகளின் விலைகள் சுமார் 3 விழுக்காடுதான் உயர்ந்திருக்கின்றன என்று நிதியமைச்சர் கூறுகிறார்.
இருப்பினும் பணவீக்கத்தை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும், தேவையேற்படும் பட்சத்தில் தகுந்த உதவித் திட்டங்களை அது அறிமுகம் செய்யும் என்றும் துணைப்பிரதமர் தர்மனும் பிரதமர் லீ சியன் லூங்கும் உறுதியளித்துள்ளனர்.

ஆகக் கடைசியாக கடந்த புதன்கிழமை தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் ஒரு கோரிக்கையை விடுத்தது. குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு வழக்கம் போல் ஆண்டுக்கொரு முறை ஒரு தொகை என்றல்லாமல், அவர்களின் அடிப்படைச் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கூட்டிக் கொடுக்க வேண்டும் என்று அது கேட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த குறிப்பிட்ட தொகை பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்யும் அளவுக்காவது இருக்க வேண்டும் என்றும் அது கூறியிருக்கிறது. சிங்கப்பூரில் அரசாங்கம் - தொழிலாளர் அமைப்பு - ஊழியர்கள் என்ற முத்தரப்பு கூட்டணி வலுவாக இருப்பதால் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் இந்தப் பரிந்துரையை அரசாங்கமும் நிறுவனங்களும் நிச்சயம் பரிசீலிக்கும் என்று நம்பலாம். அப்படிப் பரிசீலித்து குறிப்பிடத்தக்க அளவிலான ஊதிய உயர்வு வழங்கப்பட்டால் அது குறைந்த வருமானம் பெறுவோரின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இல்லாவிட்டாலும் நல்ல இடைக்கால தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சரியான தீர்வுகளைக் கண்டறிவதில் இந்த அரசாங்கம் பின்வாங்கியதில்லை. அதனால் இனிவரும் ஆண்டுகளில் சிங்கப்பூரில் வருமான இடைவெளி நிச்சயம் குறையும் என்று எதிர்பார்க்கலாம். எந்த வேகத்தில் அது குறைய வேண்டும் என்பதில்தான் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
கார் ஜாம்பவான் ஹென்ரி ஃபோர்ட் கூறியதை இந்த நேரத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும், அதாவது வசதி குறைந்தவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுப்பதை விட, அவர்கள் அதிகம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்காக நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதே சாலச் சிறந்தது. அதைத்தான் சிங்கப்பூர் அரசாங்கமும் செய்ய முனைகிறது. அது கைமேல் பலன் தரும் என்று நம்புவோம்.

tm logo
Sunday, April 29th, 2012

முன்னோர் போற்ற, மூதுரையாளர்கள் வாழ்த்த, பொதிகை தனில் பிறந்து, மன்னர் மடி தவழ்ந்து, அரியணை ஏறி ஆட்சிமொழி ஆகி செம்மொழியாக சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தமிழுக்கு ஒரு விழா.

முப்பது நாட்கள், நான்கு வாரங்கள், அமைச்சர் முதல் ஆன்றோர் வரை, மழலை தொடங்கி முனைவர் வரை பலதரப்பட்ட தமிழ் சொந்தங்கள் பங்கேற்க வீடு முதல் வீதி வரை, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் முழங்க தமிழுக்கு எடுக்கப்பட்ட விழா சிங்கையில் மட்டுமே காணப்படக்கூடிய உலக அதிசயம்.
இளையர்களிடையே தமிழ் மொழி ஆர்வத்தைத் தூண்டவும் அவர் தம் சிந்தையில் தமிழ் மொழி உணர்வை தக்க வைக்கவும் மாதம் முழுதும் விழாக்கள், நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், போட்டிகள், வெளியீடுகள் என நடத்தப்பட்டன. இவை அனைத்தும் தமிழை வாழும் மொழியாக நிலைக்க வைக்க தமிழ் நெஞ்சங்கள் மேற்கொண்டு வரும் உன்னத முயற்சிகள்.

அன்னைத் தமிழை அவையில் ஏற்றி கொண்டாடிய  இவ்விழா இன்றோடு முடிந்தாலும், ஆண்டு முழுதும் வாழ்நாள் முழுவதும் நாம் தமிழை மறக்காமல் இருக்க வேண்டும் என்ற முரசை நம் மனதில் நீங்காது ஒலிக்கச் செய்யும் என்பதுதான் உண்மை.

வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக் கட்டும் என்ற திண்ணிய எண்ணம் கொண்ட முன்னோர் வளர்த்தது தமிழ். அத்தகைய பைந்தமிழை அரசும் அமைச்சும் ஆசிரியரும் ஆன்றோரும்தான் வளர்க்க வேண்டும் என்று நினைக்காமல், அன்றாடம் நாமும் வளர்க்க வேண்டும் என்று நினைத்தால், அதன்படி நடந்தால் நலம்.

காலப்பரிணாம சுழற்சியில் அந்நிய மொழியை ஆராதிப்பவர்கள் அன்னை மொழியை அங்கீகரிக்கவும் மறக்கக்கூடாது. பிறமொழிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை.

நம் மொழியைச் சிதைக்க வேண்டாம் என்பதுதான் கோரிக்கை. தமிழன் வாழ மொழி கொடுத்த தமிழுக்கு, தமிழ் வாழ நல்லிடம் கொடுக்க வேண்டுவதுதான் தமிழ் சொந்தங்களின் வேண்டுகோள்.
இனம், மதம், இடம் கடந்து அனைத்துத் தரப்பின ரையும் வலுவாக இணைக்கும் வாழும் மொழி தமிழ் என்று தமிழ் மொழி மாத விழா தொடக்கத்தில் புகழாரம் சூட்டப்பட்டது நினைவுகூரத்தக்கது.

 ‘வாழும் மொழி’ என்று வர்ணிக்கப்படும் தமிழ் மொழி நம் ஒவ்வொருவரிடையே வாழ்கிறதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டியதும் அவசியம்.

அன்று தமிழ் விதை நட்டு வைத்த முன்னோர் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவர் வழிவந்த தமிழ் பேசும் மக்கள் இன்றும் நம்மிடையே உள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே  ஏற்றி வைக்கப்பட்ட தமிழ்ச் சுடரை அவர்களுடன்  இணைந்து அணையாமல் பாதுகாக்க வேண்டியதுதான் நம் கடமை.

அரங்கங்களில் மட்டுமல்ல, மேடைப் பேச்சுகளாக மட்டுமல்ல, அலுவலகம் தொடங்கி அன்னை இல்லம் வரைக்கும் தமிழ் கொஞ்சி விளையாட வேண்டும்.

சிறார்களுக்கு தெவிட்டாத குறள் சுவையும், குறையாத தமிழ்ச் சுவையும் தவறாது வழங்கிடல் வேண்டும்.

வருங்காலத் தலைவர்களாம் நிகழ்கால சிங்கை செல்வங்களுக்குத் தமிழைக் கற்பிக்க வேண்டும்.
கருவறையில் தொடங்கும் பழக்கமே கல்லறை வரை நீடிக்கும் என்பது முதுமொழி.
தமிழைக் கற்பிக்க பல்கலைக்கழகங்களைவிட
பெற்றோரே சிறந்த ஆசான்கள் என்றால் அது மிகை யாகாது. அடிப்படைகளை நீங்கள் கற்றுத் தாருங்கள். ஆதாரங்களை அவர்கள் உருவாக்குவார்கள்.
உங்கள் இல்லமே அவர்கள் தமிழ் கற்கும் முதல்
கூடமாக மாறட்டும்.

குறளாக, காப்பியமாக, காவியமாக, கலையாக கல்வெட்டாக பரந்து, விரிந்து பள்ளி கொண்டிருக்கும் தமிழ் மொழியை வளர்க்க வேண்டாம்.

வாழும் மொழியாகப் பார்த்துக் கொண்டால், நம்மை விட்டு போகாமல் காத்துக் கொண்டால், அதுவே போதுமானது. அப்போது தமிழ் வாழும். தமிழனும் வாழ்வான்.

தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!

tm logo
Sunday, April 22nd, 2012

ஆஃப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதைத் தடுத்துவிடும் நோக்கில் கடந்த செவ்வாயன்று அவர்கள் படிக்கும் பள்ளிக் குடிநீரில் நஞ்சைக் கலந்தது ஒரு கொடுங் கும்பல்.
அடக்குமுறைக்கு ஆட்படுவதுதான் பெண்ணுக்கான வாழ்க்கைமுறை என்று பெண்ணுள்ளத்தில் விதைத்த நம்பிக்கை, கல்வியால் ஆட்டம் கண்டு போகுமோ என்ற பதற்றம் அதற்கான முக்கிய காரணம்.

பெண்ணாய்ப் பிறந்த குற்றத்துக்காக, பெற்ற தந்தையால் சிகரெட்டால் சுடப்பட்டு, தலையணையால் அமுக்கப்பட்டு, மேலும் பலவித சித்திரவதைகளுக்கு ஆளாகிக் கடந்த வாரத்தில் பெங்களூரு மருத்துவ மனையில் உயிரை விட்டது அஃப்ரீன் என்ற 3 மாதக் குழந்தை. அந்தக் குழந்தையின் தாயை இரண்டாவதாக மணம்புரிந்த அந்த தந்தை, முதல் மனைவியை மணவிலக்கு செய்ததற்குக் காரணம் அப்பெண் மேற்படிப்பு படிக்க அனுமதி கேட்டதுதான்!

பன்னெடுங்கால அடக்குமுறை வரலாற்றை மலை போன்ற மன உறுதியாலும் மனித நேயத்தாலும் மக்கள் சக்தியாலும் ஆங் சான் சூச்சி போன்ற பெண்கள் மாற்றக் கூடியதொரு யுகத்தில், பெண் மீதான வன்முறைகள் எல்லாம் பழங்கதைகள் என்று பலரும் நினைக்கக்கூடும். அப்படியே நடந்தாலும், ஆஃப்கானிஸ்தானிலோ, இந்தியாவிலோ, வேறு ஏதாவது பின்தங்கிய நாட்டிலோதான் நடக்கும் என்றும் நினைக்கக்கூடும்.

ஆனால், வாழ்வதற்குப் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் சிங்கப்பூரில்கூட, வாழ்க்கைத் துணையாலேயே பாலியல் கொடுமைகள் உள்ளிட்ட பலவித வன்முறைகளுக்கும் ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் போலிஸ் படை வெளியிட்ட புள்ளி விவரத் தகவலை அண்மையில் சுட்டிக் காட்டியது, பெண்கள் நல அமைப்பான ‘அவேர்.’

குடும்பத்தினராலேயே அடித்துத் துன்புறுத்தப் பட்டும், மானபங்கப்படுத்தப்பட்டும், பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டும், தகாத வார்த்தைகள் வீசப்பட்டும் உடலும் மனமும் புண்ணாகித் தங்களை நாடி வரும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைச் சுட்டிய அந்த அமைப்பு, இத்தகைய வன்முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க, பெண்கள் தினத்தன்று அறைகூவலும் விடுத்தது.

மண வாழ்க்கையில் மட்டுமல்ல, நட்புக்கும் காதலுக்கும் இடையில் மறுகிடும் பதின்ம வயதுகளிலேயே, சக நண்பனிடமிருந்து ஒரு பெண் ஒதுங்கிப் போக நினைத்தால் அடி, உதை, கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் மூலம் மிரட்டல் உள்ளிட்ட அதிநவீன அட்டகாசங்களுக்கு ஆட்படுகிறாள்.

மணமாகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகுகூட, வாழ்க்கைத் துணையின் நடவடிக்கைகள் பொறுத்துக் கொள்ள முடியாமல் போகும்போது மண விலக்குப் பெற சட்டத்தில் இடமுள்ளது.
ஆனால் பதின்ம வயதில் சக நண்பனின் போக்கில் மாறுதல்களைக் கண்டு ஒரு பெண் இயல்பாய் ஒதுங்கிச் செல்வதுகூட முடியாத சூழல் நிலவுகிறது.

இன்னும் மலரக்கூட மலராத அரும்புகளை அணுக அரிவாள்கள் கொடுத்தனுப்புவது யார்?
‘அடிடா அவள; உதைடா அவள; விட்றா அவள, தேவையேயில்ல,’ என்பன போன்ற அதிர்ச்சிகரமான, நாகரீக சமுதாயத்திற்கு அவமானகரமான வரிகளைத் தாங்கி வெளிவருகின்றன திரைப்படப் பாடல்கள்; ஊடகங்கள் எந்த உறுத்தலும் இன்றி அவற்றை ஒலி, ஒளிபரப்புகின்றன; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சின்னஞ்சிறுவர்கள் அருகிலிருக்கும் சிறுமிகளை அடிப்பதுபோல் கையை ஓங்கியபடி இப்பாடலைப் பாடுகின்றனர்; இதை ரசித்துக் கைதட்டி மகிழ்கின்றனர், பெற்றோரும் மற்றோரும்!

‘மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்ற பாரதி வரிகள் முழங்கிட வேண்டிய வாய்களில் இத்தகைய ‘கொலவெறி’ பாடல்கள் ஒலிப்பது குறித்த பிரக்ஞை நமக்கு இல்லாவிட்டால் பிறகு, அதிகரிக்கும் மணவிலக்குகளுக்கோ, தனியாக வாழ்வோர் அதிகரிப்பதற்கோ, மக்கள் தொகை குறைவதற்கோ அடிப்படைக் காரணமான பாலின ஏற்றத்தாழ்வுப் பிரச்சினைகளைச் சீர்செய்திட முடியுமா?

உயிரற்ற ஓர் ஐஃபோனையோ, இசை வட்டையோ, கணினியையோகூட சிறு கீறலும் விழுந்து விடாமல் எவ்வளவு நறுவிசாக மென்மையாகக் கையாள வேண்டும் என நம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரும் நாம், அவற்றைவிட மென்மையாகவும், உயிரும் உணர்வுமுள்ள ஜீவனாகவும் உள்ள சக மனுஷியிடம் எப்படி பரஸ்பர மரியாதையுடனும் அன்புடனும் பழக வேண்டும் என்று சரியாகச் சொல்லித் தருகிறோமா?

tm logo
Monday, April 16th, 2012

இந்தியாவின் அறிவுசார் திறன்களை ஆசிய எல்லைக்கும் அப்பால் கொண்டு சென்று தரணியெங்கும் நட்டுவைத்த இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) மாணவர்கள் மதிப்புமிக்க சொத்து போன்றவர்கள் என்பது அண்மையில் சிங்கப்பூரில் நடந்து முடிந்த ஐஐடியின் ஆசிய பசிபிக் மாநாட்டில் உதிர்க்கப்பட்ட கருத்து.

மேற்கூறிய கருத்தை கூறிய அதே நேரத்தில் பல்வேறு திசைகளில் சாதித்துள்ள ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் சிங்கப்பூரை நுழைவாயிலாகக் கொண்டு இந்தியாவுக்கும் கிழக்காசியாவுக்கும் இடையில் கட்டமைப்புகளை வளர்ப்பதற்கும் உதவி செய்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் துணைப் பிரதமரும் நிதி மற்றும் மனிதவள அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம்.

இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்க தொடங்கிய பிறகு இந்தியாவின் பொருளியல் மற்றும் சமூக வளர்ச்சிக்காக திறன்மிக்க மனிதவளத்தை பெற்றெடுக்கவும் மேன்மைமிக்க அறிவியலாளர்களையும் பொறியியல் வல்லுநர்களையும் உருவாக்கிடவும் தோன்றினவை ஐஐடி கழகங்கள் என்பது வரலாறு.
அத்தகைய சிறப்புமிகுந்த கல்விக் கழகங்களில் பயின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை சிங்கப்பூரிலும் ஆசியாவிலும் அதிகரித்து வருவது உலகப் பொருளியல் மேற்கில் இருந்து  கிழக்கில் மையம் கொள்வதை பிரதிபலிக்கிறது என்று மாநாட்டின் துவக்க நாளன்று  கூறியிருந்தார், பிரதமர் அலுவலக அமைச்சரும், இரண்டாம் உள்துறை மற்றும் இரண்டாம் வர்த்தக தொழில் அமைச்சருமான    எஸ்.ஈஸ்வரன்.

இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக முதன்முதலாக கடந்த வாரம் சிங்கப்பூரில் களம் கண்ட ஐஐடியின் ஆசிய பசிபிக் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்ட இக்கருத்துகள் உலக அரங்கில், ஆசிய மேடையில் அறிவுசார் சமூகத்தின் பார்வை சிங்கப்பூரை நோக்கி நகர்வதை புலப்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது.

அறிவுசார் மற்றும் கலாசார அளவில் சிங்கப்பூர் இந்தியா உடனான உறவுகள் மேலும் சிறந்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட அதேநேரத்தில் பரந்துகிடக்கும் ஆசியாவைப் பற்றிய ஆழமான புரிந்துகொள்ளுதலை சிங்கப்பூரர்கள் பெறவேண்டும் என்பதும் அந்நிகழ்வில் ஊக்குவிக்கப்பட்ட கூறுகளில் ஒன்று.

கல்வியை பொறுத்தமட்டில் சுமார் பதினைந்து விழுக்காடு சிங்கப்பூர் உயர்நிலை பள்ளிகள் இந்தியாவுடன் இணக்கம் கொண்டுள்ளபோதும் இன்னும் ஏராளமான புரிந்துணர்வுகள் செயல்பட்டால் இருதரப்புக்கும் நன்மை மிகுந்திடும்.

ஆசியக் கல்வி முறையில் செயல்முறை பயிற்சியுடன் கூடிய புழக்கம் பெருமளவில் இல்லாதது வருத்தத்திற்குரியது என்றாலும் தொழில்முறை கல்வியுடன் சேர்த்து தொழில்நுட்பக் கல்வியையும் கற்பதே அனைவருக்கும் நலம் பயக்கும்.

அவ்வகையில் பள்ளிப்படிப்பை முடிக்கும் நம் மாணவர்களில் கிட்டத்தட்ட 65 விழுக்காட்டினர் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் மூலமாகவோ அல்லது பலதுறை தொழில் கல்விக்கூடங்கள் மூலமாகவோ தொழில்நுட்ப கல்விப் பாதையை தேர்ந்தெடுத்து அவர்களது மதிநுட்பத்தை மேலும் மெருகேற்றிக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நடந்து முடிந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்தபோதும் பெரிதும் கவனிக்கத்தக்கது, இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான பல்வேறு கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த, வளப்படுத்த உதவுவார்கள் என்று எண்ணப்படும் ஐஐடியின் முன்னாள் மாணவர்களுடன் துணைப் பிரதமர் தர்மன் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி.
நீர், சுகாதாரம், போன்ற முக்கிய  துறைகளில் இந்தியா சந்தித்து வரும் சவால்களை சமாளிக்க தொலைநோக்குடன் கூடிய நகர்ப்புற தீர்வுகள் காணவேண்டும்  என்று அந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

கல்வி, கலாசாரம், வர்த்தகம், மனிதவளம், பொருளியல் என பற்பல துறைகளில் சிங்கப்பூரும் இந்தியாவும் பரஸ்பரம் எவ்வாறு உதவிக்கொள்ளலாம், ஆசியாவின் முக்கிய முகப்பாக சிங்கப்பூர் திகழ ஐஐடி பட்டதாரிகள் எவ்வாறு பங்காற்றலாம் என்பன போன்ற கேள்விகள் மாநாட்டில் கேட்கப்பட்டு பதிலும் சொல்லியாகிவிட்ட நேரத்தில் அமைதியாக வந்து சேர்ந்தது சிங்கப்பூரின் சிறப்பு நிலைகுறித்து கேட்கப்பட்டதற்கு துணைப் பிரதமர் தர்மன் கூறிய பதில்.

“சிங்கப்பூரில் நீர்வீழ்ச்சி இல்லை; பெரிய அளவிலான இயற்கை ஈர்ப்புகள் இல்லை; குன்றுகள் கூட இல்லை எனலாம்; இருப்பதெல்லாம் சிறப்பாகச் செயல்படும் முறைகள். இவைகள்தான் உலக அரங்கில் நமது வெற்றியைக் குறிக்கின்றன,” என்று அவர் கூறியபோது ஆசியாவின் பொருளியல் மையமாக சிங்கப்பூர் உருப்பெறும் காலம் தொடும் தூரத்தில் உள்ளது என்பது மட்டும் தொனித்தது தீர்க்கமாக.  

tm logo
Sunday, April 1st, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் என்று பாடினார் கவிர் பாரதிதாசன். ஆனால் அந்தத் தமிழை பள்ளித் தேர்வுகள் முடிந்தவுடன் மறக்கும் போக்கு நம் இளையரிடையே உள்ளதை நாம் மறுக்க முடியாது.
சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை அங்கீகரித்துள்ளது அரசாங்கம். பள்ளிகளில் இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தி தாய் மொழியைச் சீராகக் கற்க அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி நன்கு பயில வேண்டிய மாணவர்களிடையே தயக்கம் காணப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தை முதன் மொழியாகக் கொண்ட நாம் வாழும்  சூழல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

எனினும் தமிழ் மொழியினால் பொருளியல் பயன் இல்லை என்று கூறிவிட முடியாது.
தமிழ்நாட்டில் தற்பொழுது வர்த்தகம் செய்வதற்கு தமிழ் மொழி ஆற்றல் தேவையில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்   தமிழ் மொழி அறிவும் தமிழரின் பண்பாடு,  அவர்தம் பழக்க வழக்கங்களில் ஈடுபாடு இருந்தாலன்றி அதில் ஊறி வளர்ந்தவர்களுடன் சுமூக உறவுகள் வைத்துக்கொள்வது கடினம் என்பதே நிதர்சனம்.

அனைத்து இனங்களுக்கும் இது பொருந்தும்.  உலகின் மிகப் பெரிய பொருளியல் சக்தியாக வளர்ந்து வரும் சீன நாட்டினருடன் அவர்களுடைய மொழியை சரிசமமாகப் பேசி அவர்களுடன் தொழில்முறை உறவுகள் வைத்துக்கொள்ள ஏதுவாகவே சிங்கப்பூரில் ‘சேப்’ பள்ளிகள் எனப்படும் ஆங்கிலத்தையும் சீனப் பொது மொழியான மாண்டரின் மொழியையும் ஒரு சேர முக்கிய மொழிகளாகக் கற்றுத் தருகின்ற பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சிங்கப்பூரின் பள்ளிகளில் தமிழ் கற்பிக்க, தகவல் சாதன ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் படைக்க, நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்ற, தமிழ்ப் பத்திரிகைகளில் பணிபுரிய தமிழ் மொழி இன்றியமையாதது. எனவே தமிழ் மொழியை செவ்வனே கற்பதில் பொருளியல் ரீதியாகவும் இந்நாட்டில் நிறைந்த, நீடித்த பலன் உண்டு.
இவற்றுக்கும் மேலாக அண்மைய ஆண்டுகளில் தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் என்ற முழக்க வரிகளுடன் ஒரு மாத காலத்துக்கு விழா எடுக்கப்படுகிறது.
பேச்சுத் திறன் வளர்க்கும் போட்டிகள், திருக்குறள் விழா, சிறுகதைப் பயிலரங்கு, கருத்தரங்கு, பட்டிமன்றம், நாடக அரங்கம், சொற்பொழிவு என அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் கவர்ந்திழுக்கக்கூடிய பல அங்கங்களைக் கொண்ட தமிழ் விழா இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டைத் தவிர சிங்கப்பூரில் மட்டுமே தமிழுக்கு இத்துணை சிறப்பு வழங்கப்படுகிறது. அதற்குக் காரணம் ஒருவர் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் அவர்தம் தாய்மொழி கற்றுத் தரக்கூடிய நற்பண்புகளை பெற்று அவர் மற்ற இனத்தவர், மற்ற மொழி பேசுபவர்களை அனுசரித்து ஒரு சமூகமாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் விருப்பம்.
இன்றைய நிலையில் பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் பெரும்பாலும் ஆங்கிலமே வீட்டு மொழியாக உள்ளது. அக்கம் பக்கத் தமிழ்க் குடும்பங்களுடனும் தமிழ் மொழியில் பேசுவது குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். பேசப் பேசத்தான் தமிழ் மொழிப் புழக்கம் அதிகரிக்கும். படிக்கப் படிக்கத்தான் தமிழின் இனிமை நமக்கு புரியும். தமிழ் படங்களில் வரும் நகைச்சுவை வசனங்களை விழுந்து விழுந்து ரசிக்கும் நம்மால், திரைப் பாடல்களை விரும்பிக் கேட்கும் நம்மால், தமிழ் மொழியின் மற்ற பல கூறுகளையும்  உணர்ந்து ரசிக்க முடியும். நமது அடையாளமாக விளங்கும் நம் தாய் மொழி, நமக்கு வெறும் தொடர்பு மொழி மட்டுமன்று. தமிழ் மொழி மூலம் நமது பண்பாட்டையும், பாரம்பரியச் சிறப்புகளையும் நாம் பெறுகிறோம்.
அதேநேரத்தில், தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் இளம் தலைமுறையினர் சிலர் எடுத்து வரும் முயற்சிகள் நம்பிக்கை தருகின்றன. குறிப்பாக, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் உலகத் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களின் மாநாடு ஒன்றை எதிர்வரும் ஜூலை மாதம் கூட்டவுள்ளனர்.
இத்தகைய முயற்சிகளை வரவேற்று ஆதரவு அளிப்போம். புதிய யுகத்தில், புதிய வளர்ச்சிகளோடு செம்மொழியான தமிழ் மொழி தழைத்து வளர்வதற்கான நம்பிக்கையை ஒவ்வொரு தமிழரும் தமது பங்களிப்பின் மூலம் விதைப்போம்.

tm logo
Sunday, March 25th, 2012

இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியும் சோவியத் அதிபராக இருந்த கோர்பச்சேவும் 1988ல் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

அதன்படி, தமிழ்நாட்டின் தென் பக்கம் கூடங்குளம் என்ற ஊரில் இரண்டு அணு உலைகளை அமைக்க இரண்டு அரசாங்கங்களும் இணங்கின.  

ஆனால்,  சோவியத் யூனியன் 1991க்குப் பிறகு உடைந்தது. அமெரிக்காவும் எதிர்த்தது. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பும் எதிர்த்தது.

அதனால் கூடங்குளம் திட்டம் 10 ஆண்டுகளுக்கு முடங்கியது. கட்டுமானப் பணிகளைத் தொடங்க முடியவில்லை.

கடைசியாக, 1997ல் பணிகள் தொடங்கின. 2001ல் உலை திட்டத்தின் மதிப்பு 3,000 பில்லியன் டாலர் (13,615 கோடி ரூபாய்). அணு உலை திட்டத்துக்காக கூடங்குளத்தில் சிறு துறைமுகமே உருவானது.
கூடுதலாக நான்கு உலைகளை அங்கு அமைக்க 2008ல் இந்தியா-ரஷ்யா மறுபடியும் பேச்சு தொடங்கின. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த பல்வேறு அம்சங்களும் அந்தப் பேச்சில் இடம்பெற்றன.
அதன்படி, 2009 டிசம்பரில் முதல் உலை, 2010 மார்ச்சில் இரண்டாவது உலை இயங்க திட்டமிடப்பட்டது.
மறுபடியும் தாமதங்கள் காரணமாக இந்தத் தேதிகள் அதிகாரபூர்வமான முறையில், முறையே 2011 ஜூன், 2012 மார்ச் என்று மாற்றி வைக்கப்பட்டன. திட்ட மதிப்பும் 14,000 கோடி ரூபாய்க்கு உயர்ந்தது.
இந்த நிலையில், கூடங்குளம் அணுஉலைகளை வடி வமைத்த ரஷ்ய தலைமை வடிவமைப்பாளர் செர்கி ரிட்ஜ்யாவ் 2011 ஜூன் 11ம் தேதி விமான விபத்தில் மரணமடைந்தார்.

பல எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து உலைகள் இயங்க இருந்த வேளையில், 2011 அக்டோபரில் பெரிய அளவில் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது.

இதற்கிடையே, இந்தியாவின் மிக முக்கிய அமைப்புகள் அனைத்தும் கூடங்குளத்தை சோதனையிட்டு அந்த உலைகள் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக்கொண்டு இருப்பதாக வும் நிலடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய  இடத்தில், வகையில் உலை வடிவமைக்கப் பட்டு அமைக்கப்பட்டு உள்ளது என்றும் சான்றிதழ் வழங்கின.

இந்தியாவின் உயர் அறிவியல் மேதைகளில் ஒருவரான அப்துல் கலாம் உள்ளிட்ட பெரியவர்கள் சான்றிதழ் அளித்தனர்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 1980களில் நிகழ்ந்த போபால் விஷ வாயு சம்பவம் போல் பேரிடர் நிகழ வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் ஜப்பானில் கொடிய நிலநடுக்கம் நிகழ்ந்த போதும் அங்கு அணு உலை கதிரியக்கப் பேரிடர் பெரிய அளவில் எழவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
மத்திய அரசும் தமிழக அரசும் நியமித்த குழுக்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டன. ஆனாலும் அணுசக்திக்கு எதிரான இயக்கம் மக்கள் சக்தியை திரட்டிக்கொண்டு இன்னமும் போராடுகிறது.
போராட்டத்துக்கு அமெரிக்க அரசு சாரா அமைப்புகள் காரணம் என்று பிரதமர்  மன்மோகன் சிங் புகார் சொன்னார்.
கூடங்குளம் அமைந்துள்ள சங்கரன் கோவில் தொகுதியில் இடைத் தேர்தல் வந்ததால் தமிழக ஆளும் தரப்பு தாமதமாக உலைக்கு ஆதரவு தெரிவித்தது என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு எல்லா அம்சங்களிலும் உலகக் கண்ணோட்டத் துடன் கூடிய மக்களைக் கொண்டு இருந்தாலும் இயற்கை வளங்களைப் பொறுத்தவரை பூகோள ரீதியில் பழிவாங்கப்பட்ட மாநிலம். மிக முக்கியமாக நீர் வளம், மின் வளம் போதிய அளவுக்கு இல்லை.
ஆற்று நீருக்காக அடுத்த மாநிலங்களைச் சார்ந்து இருக்கும் மாநிலம். அதேபோல், மின்சாரத்துக்கும் கொடுக்கல் வாங்கல் அணுகுமுறையில் காலம் தள்ளுகிறது.

தன்னிறைவு பெறா மாநிலம். மின்சாரத்தைப் பொறுத்தவரை அண்மைய பல ஆண்டுகளாகவே மாநிலம் பெரும் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகிறது.

இந்த நிலையில், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக கூடங்குளம் ஆகி இருக்கிறது. கூடங்குளம், தண்ணீர்ப் பிரச்சினையில் இருந்து வேறுபட்டது.

கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய பக்கத்து மாநிலங்கள் மறுப்பதால் தமிழகம் தண்ணீர் இன்றி வாடுகிறது. ஆனால் கூடங்குளம் அப்படி அல்ல. இது தமிழ்நாட்டின் உள்ளுக்குள் இருந்தே கிளம்பி இருக்கும் பிரச்சினை.

அரசியல்வாதிகள், போராட்டக்காரர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரும் இதை உணர்ந்துகொண்டு செயல்பட்டால் கூடங் குளம் ஒளிரும் என்பது திண்ணம்.

சம்சாரம் இல்லாமல் குடும்பம் இல்லை, மின்சாரம் இல்லா மல் உலகம் இல்லை என்ற நிலைதான் இன்றைய உண்மை. மின்சாரத்துக்கு இயற்கை வளங்களும் குறைந்து வரும் சூழலில் அணுசக்தியை விட்டால் வேறு வழி இல்லாத நிலை வேகமாக உருவாகிவருகிறது.

இந்தியா இதில் விதிவிலக்கல்ல. தமிழ்நாடும் இதில் இருந்து ஒதுங்க முடியாது என்பதே உண்மை.

tm logo
Sunday, March 18th, 2012
தன்னை வளர்த்துவிட்ட சமூகத்துக்குத் திருப்பிச் செய்வது என்பது, ஈன்று வளர்த்து ஆளாக்கிய தாயைப் பேணிக் காப்பதற்கு ஒப்பானதொரு புனிதமான காரியம். அப்படி, தாம் சார்ந்த சமூகத்துக்கு நன்மை செய்வது, கொடையளிப்பது என்பது சிலரால் மட்டும் முடியும் என்ற நிலை மாறி, பலராலும் முடியும் என்று நம் குடியரசில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
‘நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?’ என்ற வினா இன்னும் கொஞ்ச காலத்தில் இங்கு செல்லாததாகிவிடும் என்றுகூட நம்பலாம். அங்ஙனம் நம்புவதற்கு ஏதுவாக, சிங்கப்பூரர்கள் அறநிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நன்கொடையின் அளவு வளர்ந்துள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அவர்களால் வழங்கப்பட்ட நன்கொடையின் அளவு இரட்டிப்பாகி இருக்கிறது. 2001ம் ஆண்டில் $381 மில்லியனாகத் திரண்ட நன்கொடை தொகை 2010ம் ஆண்டில் $776 மில்லியனுக்கு உயர்ந்திருப்பதாகச் சொல்கிறது அந்த ஆய்வு.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலுள்ள சமூக முனைப்பு, கொடையாளருக்கான ஆசிய மையத்தின் இயக்குநர் துணைப் பேராசிரியர் லாம் சுவீ சம் மேற்கொண்ட ஆய்வு அது.
சமூகத்தின்பால் அக்கறை கொண்ட - தன்னை அடையாளம் காட்ட விரும்பாத மாமனிதர் ஒருவர் மாதந் தோறும் 60,000 வெள்ளியை கொடையாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூர் தோங் சாய் மருத்துவக் கழகத்தில் உள்ள உண்டியலில், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் செலுத்திய வெவ்வேறு மதிப்பிலான தொகை மட்டும் $2 மில்லியனைத் தாண்டும். வசதி குறைந்தோருக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது இந்த மருத்துவக் கழகம்.
தேசிய சிறுநீரக அறநிறுவன சம்பவத்திற்குப் பின்னர் நன்கொடை வழங்குதலில் ஏற்பட்ட சிறு பின்னடைவு - எங்கே தவறு என்று தெளிவானதற்குப் பின்- நீங்கி, நன்கொடையாளர்கள் பெருகி வருவதையே ஆய்வு காட்டுகிறது. வருங்காலப் பொருளியல் நிச்சயமற்றதாகத் தோன்றும்  காலகட்டத்தில் சிங்கப்பூரர்கள் தாராளமாகக் கொடுக்க முன்வந்துள்ளார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
இல்லாதாரின் இடர் துடைக்கும் இத்தகைய கொடுக்கும் மனம் மட்டுமின்றி, இதர நற்பண்புகளையும் தனதாக்க விரும்புகிறார்கள் சிங்கப்பூரர்கள். அண்மையில் ‘ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் நடத்திய ஆய்வில் நேர்மை, கனிவு ஆகிய இரண்டும் தங்களது பிரதானம் என்று சொல்லியிருக்கிறார்கள் அவர்கள். அதற்கு அடுத்த நிலையில் நன்றி பாராட்டுதல், நியாயமான போக்கு, பிழை பொறுத்தல் ஆகியவற்றையும் தங்களுக்குரிய நற்பண்புகளாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
‘கருணைமிக்க சமுதாயத்திற்கு இத்தகைய நற்பண்புகள் இன்றியமையாதவை. இவற்றை கடைப்பிடித்து நடக்கும்போது, வாழச்சிறந்த நாடாக சிங்கப்பூர் மென்மேலும் திகழும்’ என்கிறார் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வில்லியம் வான்.
“ஒரு பிடி படியும் சீறிடம் எழு களிறு புரக்கும் நாடு” என்று வேளாண்வளம் புகழ்ந்துரைக்கப்பட்ட புறநானூற்று காலத் திலேயே வறியோர் எண்ணிக்கை மிகுதி என்கிறது வரலாறு. இல்லாதார் என்பதற்காக இயற்கை எதையும் மாற்றிக் கொள்ளாது. மாலைத் தென்றலும் மஞ்சள் நிலாவும் ஏழைக்கும் சொந்தம் என்பதுதான் நியதி. நாமும் அந்த நியதியோடு ஒத்துப்போகப் பழகி இருக்கிறோம்.
வசதி மிக்கவர்கள்தான் நன்கொடை கொடுத்திருப்பர் என்று நினைக்கலாகாது. சுமாரான ஊதியம் ஈட்டுவோரும் சமூகத்தின் துன்ப ரேகைகளைப் போக்க தங்களாலான உதவியைச் செய்திருப்பர்-கொடையாளர் எண்ணிக்கையில் அவர்களும் அடக்கம் என்று நம்பலாம்.
ஆக, பிறருக்குக் கொடுக்கும் போக்கும் உதவும் எண்ண மும் ஏழை பணக்காரர் என்ற பேதமின்றி சிங்கப்பூரர்களிடம் பரவலாகியிருப்பதையே மேற்கண்ட ஆய்வுகள் உணர்த்து கின்றன.
நாம் வாழும் சமூகத்தில் ஆங்காங்கே உதவி தேவைப் படுவோர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கு நாம் இயன்றதைச் செய்து உதவுவோம். வாழும் காலம்  பொற்காலம். சிலருக்கு அது சிரமமான காலம். சிரமத்திலிருப்போருக்கு பொருளீந்து மகிழும் சிறப்பைத் தொடர்வோம்.
பட்டத்திலே, பதவி உயர்வதிலே இன்பம் கிட்டுகிறதோ இல்லையோ பட்டுப்போன முகங்களை மலரச் செய்வதில் உண்மையான இன்பம் உளமெல்லாம் நிரம்பும் எனலாம்.
    “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு”.

Sunday, March 11th, 2012

“முப்பது வயதுக்கு முன் மனிதன் நோய்களைத் தேடுகிறான்; முப்பதுக்குப் பிறகு நோய்களே மனிதனைத் தேடுகின்றன,” என்கிறது சீனப் பழமொழி.
வயது ஆக ஆக சுகாதாரப் பிரச்சினைகளும் அதிகரிக்கும் என்ற பொது விதிக்கு சிங்கப்பூர் விதிவிலக்கல்ல.

இப்போது 350,000 ஆக உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர் களின் எண்ணிக்கை 2030க்குள் 960,000த்தைத் தொடும் என்றும், அந்தப் பிரிவினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சாத்தியம் இளையர்களோடு ஒப்பிடும் போது 4 மடங்கு அதிகம் என்றும் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெருக்கெடுத்து வரும் இந்த முதியோர் பேரலையை எதிர் கொள்ள சிங்கப்பூரின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பெருந்திட்டத்தை செவ்வாய்க்கிழமை அறிவித்தார் சுகாதார அமைச்சர்.
சுகாதாரத் துறையைப் போட்டித்தன்மை மிக்கதாக வைத்திருப்பதோடு, சுகாதார ஊழியர்கள் வழங்கும் மிக அரிய சேவைகளுக்கு அங்கீகாரமும் அளிக்கும் அருந்திட்டம் அது.

பொதுத்துறை மருத்துவர்களின் சம்பளங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 20 விழுக்காடு வரை உயரவிருப்பதும், அதற்கு மேல் மறுபரிசீலனை செய்யப் படவிருப்பதும் வரவேற்கத்தக்க அறிவிப்புகள்.

மிகச் சிறந்த பொதுத்துறை மருத்துவர்கள் அதிக வருமானத்தை அள்ளித் தரும் தனியார் துறைக்குப் படையெடுக்காமலிருப்பதை இந்தக் கணிசமான சம்பள உயர்வு உறுதி செய்யும் என்று நிச்சயம் நம்பலாம்.

சுகாதாரத் துறைக்கு முதுகெலும்பாகத் திகழும் தாதியர் அணியையும் அமைச்சர் மறந்துவிடவில்லை. குடும்ப உறுப்பினர்கள் கூட சில நேரங்களில் செய்யத் தயங்கும் பணிவிடைகளை பெரும்பாலான நேரங்களில் புன்னகையுடன் வழங்கும் அந்த உன்னத ஊழியர்களின் சம்பளங்கள் அடுத்த மாதத்திலிருந்து 4 முதல் 17 விழுக்காடு உயரவிருக்கின்றன.

மருத்துவமனைகளில் தங்கியோ அல்லது வெளிநோயாளி களாகவோ தாதியரின் சேவைகளைப் பெற்ற எவரும் இந்தச் சம்பள உயர்வை வரவேற்பர்.  

எந்தத் துறையிலும் உள்ள சிரமங்களும் உளைச்சல்களும்   மருத்துவத் துறைக்கும் உண்டு. எனவே, வாரத்திற்கு 5 நாள் வேலை, குடும்பப் பராமரிப்பு விடுப்பு, பகுதி நேர வேலை வாய்ப்பு போன்றவை மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பும் அவர்களின் முகங்களில் புன்னகையை வரவழைத்திருக்கும்.

உள்ளூர் மருத்துவப் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் தங்கள் கனவை நோக்கி வெளிநாடுகளுக்குச் சென்ற சிங்கப்பூரர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் முயற்சியையும் அமைச்சு முடுக்கி விட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 89 மருத்துவர்கள் அவ்வாறு சிங்கப்பூருக்குத் திரும்பியிருக்கின்றனர்.

மூன்றாவது மருத்துவப்பள்ளி, புதிய மருத்துவமனைகள், கூடுதல் படுக்கைகள், சமூக சுகாதார உதவித் திட்டம், சுகாதாரப் பாதுகாப்பு உதவி பெறுவதற்கான வருமான உச்சவரம்பை எளிமைப்படுத்துவது போன்ற மற்ற பல மாற்றங் களும் சிங்கப்பூரின் சுகாதாரக் கட்டமைப்புக்கு வலிமை சேர்க்கும்.

இவற்றையெல்லாம் விட, தாங்கள் சேவை வழங்கும் பொதுமக்களும் நோயாளிகளும் கூறும் ‘நன்றி’ என்ற சொல்லே தங்கள் பணியை அர்த்தமுள்ளதாக்கும் என சுகாதார ஊழியர்கள் தம்மிடம் சொன்னதாக சுகாதார அமைச்சர் கூறியது சிந்திக்கத்தக்கது.
எத்தனை பேர் மருத்துவச் சேவைகளை வெறும் பரிவர்த்தனைகளாகப் பார்க்காமல் உளப்பூர்வமான சேவையாகப் பார்க்கிறார்கள்?

எப்படிப்பட்ட நோயாளிக்கும் அன்பான வார்த்தைகள் இதமாக இருக்கும். அதே போல், நன்றியுணர்வை வெளிப் படுத்தும் ஒவ்வொருவரும் மருத்துவ ஊழியர்களின் வேலையை இனிமையாக்க உதவுவர்.
“ஆரோக்கியம் உள்ள ஒருவருக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை இருப்பவருக்கு எல்லாமே இருக்கும்,” என்கிறது அரேபியப் பழமொழி.

அந்த ஆரோக்கியத்தை உறுதி செய்யத்தான் சுகாதார அமைச்சு அனைத்தையும் செய்கிறது. சிங்கப்பூரர்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்.

tm logo
Sunday, February 26th, 2012

அனைத்துலக அணுசக்தி அமைப்பைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் இரண்டாம் முறையாக இவ்வாண்டு கடந்த திங்கட்கிழமை ஈரானுக்கு சென்று அதன் அணுவாயுத திட்டத்தை பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் எடுத்த எடுப்பிலேயே அதன் அணுத் திட்டத்தைப் பார்வையிடவும் அதன் விஞ்ஞானிகளுடன் கலந்தோசிக்கவும் தான் அனுமதிக்கப்போவதில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறிவிட்டார். இதனால் அணுசக்தி அமைப்பு கண்காணிப்பாளர்களின் பயணம் வீணில் முடிந்தது.

ஈரானின் அணு உலைத் திட்டம் அமைதி உபயோகத்துக்கான ஒன்று என ஈரான் கூறுவது ஒரு ஏமாற்று வேலை என்றும் அது உண்மையில் அணுவாயுதத் திட்டத்தை மறைப்பதற்காக போடப்படும் வெளிவேடம் என்றும் அனைத்துலக சமூகம் சந்தேகிக்கிறது.

இனி அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் உலகில் நிலவுகிறது. ஏற்கனவே இரண்டாம் உலகப் போரில் ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதல்லாம் கட்டுக்கதை என்றும் இஸ்ரேல் நாட்டை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதே தனது தலையாய பணி எனவும் ஈரான் முழக்கமிட்டு வந்துள்ளது.

இதேபோல், இஸ்ரேல் நாடு என்பது ஒரு புற்றுநோய் வளர்ச்சியைப் போன்றது என்றும் அது வெட்டி எறியப்பட வேண்டும் என்றும் ஈரானின் தலைமை மதகுரு ஆயத்துல்லா அலி காமெனியி கூறியுள்ளார்.

இந்நிலையில், ஈரான் அணுவாயுதக் குண்டு பெறுவதை தடுத்திட அந்நாட்டின் மீது போர் தொடுப்பதை ஒரு உபாயமாக இஸ்ரேல் கொண்டுள்ளது.

அதைச் செய்வதற்கான கால அவகாசமும் வேகமாக குறைந்து கொண்டே வருவதாகவும் அது நம்புகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் இஸ்ரேல் இவ்வாண்டு ஏப்ரல் மாத வாக்கில் ஈரானைத் தாக்கக்கூடும் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லியோன் பனெட்டா எச்சரித்துள்ளார்.

பதிலுக்கு ஈரானும் தனது நலன்களுக்கு அச்சுறுத்தல்  ஏற்படும் எனத் தெரிந்தால் அதைத் தடுக்கும் வகையில் தனது எதிரிகளுக்கு எதிராக தான் முதலில் தாக்குதல் நடத்தும் என்று பறைசாற்றியுள்ளது.
இனி ஈரானும் இஸ்ரேலும் என்ன செய்யப் போகின்றன? இஸ்ரேல் நடத்தக்கூடிய தாக்குதலால் ஈரானின் அணுவாயுதத் திட்டம் சிறிது காலதாமதமாகலாம்.

ஆனால் ஈராக் அணு உலையின் மீது 1981ல் தாக்குதல் நடத்தியதைப் போன்றோ, 2007ல் சிரியாவின் அணு உலையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்றோ ஈரானிய அணு உலைத் திட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டால் அத்துடன் ஈரான் சும்மா இருந்துவிடுமா?

இன்றைய நிலையில் அதற்கு வாய்ப்பேயில்லை. அதன் பின் வீறுகொண்டு எழும் ஈரான் முன்னிலும் ரகசியமாக தனது அணுவாயுதத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கும். ஒருக்கால் இஸ்ரேல் நடத்தக்கூடிய தாக்குதல் வெற்றி பெறாவிட்டால் அதன் பிறகு கேட்கவே வேண்டாம்.

ஈரான் முன்னிலும் வேகமாக தனது அணுவாயுதத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கும்.
அதன் பின்னர் ஈரானை உலகம் தடுத்து நிறுத்துவதும், அதனை வழிக்கு கொண்டு வருவதும் கிட்டத்தட்ட இயலாத காரியம் என்றே சொல்லலாம்.

அப்படியென்றால் இதற்கு என்னதான் மாற்று வழி?

இன்றைய நிலையில் ஈரான் அணுவாயுத நாடாக மாறினால் அடுத்து சவூதி அரேபியா, எகிப்து, துருக்கி, என பல மத்திய கிழக்கு நாடுகளும் அவ்வழியே  செல்லக்கூடும்.

அத்துடன் பிரேசில் போன்ற மற்ற வளர்ந்து வரும் நாடுகளும் அணுவாயுதப் போட்டா போட்டியில் இறங்கும் சாத்தியம் நிரம்பவே உள்ளது. இதைத் தடுப்பதற்கு தடைகள் மூலமாகவும் அணுவாயுதத் திட்டத்தை கைவிடுதானால் அளப்பரிய சலுகைகளும் காத்திருக்கின்றன என்பதை ஈரானுக்கு தெள்ளத் தெளிவாக புலப்படுத்த வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அணுவாயுதப் போர் ஒன்று மூளுமேயானால் அது இறந்தவர்கள் மீது இறந்துகொண்டிருப்பவர்கள் கொள்ளும் வெற்றியாகவே அமையும் என்பது விளக்கப்பட வேண்டும், அதாவது ஆங்கிலத்தில் கூறுவதுபோல் - it will be a victory of the dying over the dead.

tm logo
Sunday, February 19th, 2012
“He who does not economize will have to agonize - சிக்கனத்தைக் கடைபிடிக்காதோருக்கு வேதனை உறுதி”.
சீனத் தத்துவ மேதை கன்ஃபூசியஸ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உதிர்த்த பொன்மொழி இது.

வரவுக்கு மேல் செலவு செய்வதும் வேதனைக்குத்தான் வழி விடும் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். அந்தக் கசப்பான பாடத்தைத்தான் ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக உணர்ந்து வருகின்றன.

தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியுமா என்ற எதிர்காலச் சிந்தனையின்றி, சமூக நலன் என்ற பெயரில் அந்த நாடுகள் தங்கள் குடிமக்களுக்காக பணத்தை வாரி இறைத்தன. இப்போது கிரீஸ் போன்ற நாடுகள் கிட்டத்தட்ட நொடித்துப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால் சிவப்புப் புள்ளி என்று வர்ணிக்கப்படும் சிங்கப்பூர்  எதிர்காலத் தேவைகளுக்குத் திட்டமிடுவதில் இன்று உலகுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

வெள்ளிக்கிழமையன்று நிதியமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தாக்கல் செய்த இவ்வாண்டின் வரவு-செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தைச் செழிப்பாக்கும் ஒரு செம்மையான திட்டம்.
எந்த ஒரு நாட்டுக்கும் மிகப் பெரிய சொத்து அதன் மூத்த குடிமக்கள். தங்கள் முக்கியமான காலகட்டத்தை நாட்டு நிர்மாணத்தில் செலவிட்ட அவர்களின் முதுமை காலத்தில் நாடு அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டாமா?

அதை உறுதி செய்யும் பல திட்டங்களை திரு தர்மன் அறிவித்தது அவர்களின் உள்ளங்களை குளிர்வித்திருக்கும். 

பல நாடுகளில் இளையர்களே வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். ஆனால் இங்கு 50 வயதுக்கு மேற்பட்ட  குடிமக்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு வேலை நியமன வரவு (Special Employment Credit)  என்ற திட்டத்தை அறிவித்து அசத்தியிருக்கிறார் நிதியமைச்சர். அவர்களின் சம்பளத்தில் 8 விழுக்காடு வரை அரசாங்கமே நிறுவனங்களுக்கு வழங்கும்.

அது மட்டுமா? 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய சேமநிதி சந்தா உயர்த்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நிலவி வந்த கோரிக்கைக்கும் செவிசாய்த்திருக்கிறார் திரு தர்மன். இது முதிய ஊழியர்களுக்கு இரட்டை அனுகூலம்.

இரட்டிப்பு வருவாய் நிவாரணம், முதியோர் வீடு மாறும் போனஸ், முதியவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்களுக்கு 120 வெள்ளி மாத மானியம், வீட்டைப் பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ள உதவித் தொகை, மருத்துவக் காப்பீடு நீட்டிப்பு என முதுமைக்கு முதல் மரியாதை தந்திருக்கிறது இந்த வரவு செலவுத் திட்டம்.

உடற்குறையுடையோரும் மறக்கப்படவில்லை. சிறப்புப் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றோரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 16 விழுக்காடு வரை அரசாங்கம் வழங்கும் என்ற அறிவிப்பு, வரவு செலவு திட்டத்தில் கருணைக்கும் இடமுண்டு என்பதற்கு சான்று.
சென்ற ஆண்டு பொதுத்தேர்தலின் போது மக்களின் அதிருப்திக்குக் காரணமாக இருந்த அம்சங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறார் நிதியமைச்சர். அதனால்தான் பேருந்துச் சேவையை மேம்படுத்த முன்னெப்போதும் இல்லாத அளவு 1.1 பில்லியன் வெள்ளியை அவர் ஒதுக்கியிருக்கிறார்.
பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுத் திட்டத்தை நமது வரவு செலவுத் திட்டத்தின் நிரந்தரக் கூறாக்கியிருப்பதை அனைத்து சிங்கப்பூரர்களும் வரவேற்பர்.

வசதி குறைந்த குடும்பங்களுக்கு பல உதவித் திட்டங்களை அறிவித்து, அவர்களைக் கைதூக்கி விடுவதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார் திரு தர்மன். வருவாய் குறைந்த சிங்கப்பூரர்களின் வருமானத்தைத் தொடர்ந்து உயர்த்தும்  தொலைநோக்கு இந்த வரவு செலவுத் திட்டத்திலும் தென்படுகிறது.

கட்டுக்கோப்பான ஆட்சி, கவனமாகத் திட்டமிடல், மக்கள் வளத்திலும் உள்ளமைப்பு வசதிகளிலும் கவனம் செலுத்துதல் ஆகியவை ஒருங்கே அமைந்திருப்பதால்தான் சிரமமான ஓரிரு ஆண்டுகள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் எப்போதுமே உபரியைக் காட்டி வந்திருக்கிறது இந்த அரசாங்கம். அதனால்தான் நாம் வேதனை நோக்கி வீழாமல் சாதனை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறோம்.
Syndicate content