fontsize: 60% 70% 80% 90%

ம‌லேசியா

அரசாங்கத்துக்கு எதிராக கேலிச்சித்திர எழுத்தாளர் வழக்கு

மலேசியாவில் அரசியல் கேலிச்சித்திர புத்தகங்களை வரையும் ஓவியர் ஒருவர் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கிறார்.

ஸுனர் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஸுல்கிஃப்லி அன்வர் உல்ஹக் என்ற கேலிச்சித்திரப் புத்தகங்களை வரைபவர் மலேசியாவில் ஓரினப் புணர்ச்சிக்காக வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் அன்வர் இப்ராஹிம், போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் போன்ற பிரச்சினைகளைத் தமது கேலிச்சித்திர புத்தகங்களில் கையாள்பவர்.
இவருடைய கேலிச்சித்திரப் புத்தகங்கள் படிக்கத்தகாதவை, சட்ட ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்று கூறி மலேசிய அரசாங்கம் சென்ற மாதம் அவற்றுக்குத் தடைவிதித்தது.

இது அரசியல் விவாதத்தை நசுக்கும் நோக்கம் கொண்டது என தற்பொழுது ஸŸனர் மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடுத் துள்ளார் என்று ஏஎப்பி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.

இதன் மூலம் அரசாங்கம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்து வதாகவும் ஸŸனர் தமது வழக்கில் அராசங்கத்துக்கு எதிராகக் குற்றம் சாட்டியுள்ளார்.

“நாட்டில் சுதந்தரமான பேச்சுரிமையை அரசியல் சாசனம் உறுதி செய்துள்ளது.
“ஆனால் எனது கேலிச்சித்திரங்களை நான் விநியோகம் செய்ய முற்பட்டபோது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடியது என்று அரசாங்கம் கூறியது,” என அவர் கூறினார்.

சிறுவர்களுக்கு ஆலோசனை கூறிய முகமூடி கொள்ளைக்காரர்கள்

மலேசியாவில் ஒரு வீட்டிற்குள் புகுந்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்த முகமூடி கொள்ளைக்காரர்கள் அங்கிருந்த சிறுவர்களுக்கு ஆலோசனையும் கூறியிருக்கின்றனர்.

“ எங்களைப் போல் கொள்ளைக்காரர்களாக ஆகாதீர்கள். நன்றாகப் படித்து மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக ஆகி பெற்றோருக்குப் பெருமை சேருங்கள்,” என்பதே அந்த கொள்ளையர்கள் சிறார்களுக்கு கூறிய ஆலோசனை.

தாமான் பாத்தாங் மலாக்காவில் உள்ள ஒரு வீட்டில் ஆசிரியர் ஒருவர் தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆறு பேருக்கு டியூசன் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தபோது அந்தக் கொள்ளையர்கள் அரிவாள்களுடன் அந்த வீட்டிற்குள் புகுந்ததாக மலேசியப் போலிசார் கூறினர்.

அந்த ஆசிரியர்(சசி), அவரின் மனைவி, அவரின் தாயார் ஆகிய மூவரையும் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளையர்கள் 150,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகளையும் ரொக்கத்தையும் கொள்ளயடித்துச் சென்றனர்.

கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அந்த மூதாட்டியிடம் “எங்களை தவறாக நினைக்காதீர்கள். உங்கள் பிள்ளைகள் போல் நினைத்துக் கொள்ளுங்கள். உயிர் வாழ நாங்கள் கொள்ளையடிக்க வேண்டியதாயிற்று.

எங்களை மன்னியுங்கள்,” என்று கூறிவிட்டுச் சென்றனராம். அந்தக் கொள்ளையர்களைப் போலிசார் தேடி வருகின்றனர்.

அன்வர் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2-க்கு தள்ளிவைப்பு

மலேசியாவில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கு விசாரணையை கோலாலம்பூர் நீதிமன்றம் ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

அன்வரின் மூத்த வழக்கறிஞர் கர்பால் சிங் 15 நாள் மருத்துவ விடுப்பில் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்குமாறு அன்வரின் வழக்கறிஞர் பரம் குமாரசாமி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி முகம்மது ஜபிடின் முகம்மது டியா கூறினார்.

“ஆகஸ்ட் 2-ம் தேதி கர்பால் சிங் வந்தாலும் வராவிட்டாலும் வழக்கைத் தொடரலாம் என்று பரம் குமாரசாமி உறுதி கூறியிருப்பதால் அவருடைய மனு ஏற்கப்படுகிறது”, என்று நீதிபதி தெரிவித்தார்.

கர்பால் சிங் கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகியிருப்பது ஜூலை 9 ஆம் நாள் அவர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது தெரியவந்தது.

அவர் ஜூலை 15-ம் தேதி மருத்துமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும் இப்போது அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் அன்வரின் மற்றொரு வழக்கறிஞரான நாயர் கூறினார்.

அன்வர், 2008-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி தன் முன்னாள் உதவியாளர் முகம்மது சைபுல் புகாரியைக் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத சந்தேகப்பேர்வழி மலேசியாவில் கைது

அல்-காய்தாவுடன் தொடர்புடைய ஜமா இஸ்லாமியா அமைப்புக்கு மாணவர்களை சேர்த்து வந்தவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டிருப்பதை மலேசிய உள்துறை அமைச்சர் ஹிசாமுதீன் ஹுசேன் உறுதிப்படுத்தியுள்ளார்.

28 வயதான முகம்மது ஃபட்ஜூலா அப்துல் ரசாக்கின் நடவடிக்கைகளை பல மாதங்களாக கண்காணித்து வந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்திருப்பதாக அமைச்சர் கூறினார்.

மலேசியா: பெட்ரோல், டீசல், சீனி விலை உயர்வு

மலேசிய அரசாங்கம், எரிபொருள் மற்றும் சீனி விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவிலிருந்து நடப்புக்கு வந்துள்ளது.பெட்ரோல், டீசல், பெட்ரோலியம் எரிவாயு மற்றும் சீனி ஆகியவற்றுக்கு வழங்கி வந்த மானியத் தொகையை அரசாங்கம் குறைக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு நடப்புக்கு வந்துள்ளது.நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக எரிபொருள் மற்றும் சீனிக்கு வழங்கப்படும் மானியத் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இருப்பினும் இவற்றுக்கு இந்த ஆண்டு மானியத் தொகை 750 மில்லியன் ரிங்கிட்(321 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) வழங்க வேண்டியிருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.மானியத் தொகை குறைப்பின் முதல் கட்டமாக ரோன் 95 ரக பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு அரசாங்கம் வழங்கி வந்த மானியத் தொகை லிட்டருக்கு 5 காசு வீதம் குறைக்கப்பட்டுள்ளது. எல்பிஜி எரிவாயுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை ஒரு கிலோவுக்கு 10 காசு வீதம் குறைக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து ரோன் 95, ரோன் 97 ரக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் ஒரு லிட்டருக்கு 5 காசு ஏறியுள்ளது. முன்பு ஒரு லிட்டர் ரோன் 95 ரக பெட்ரோல் 1 ரிங்கிட் 80 காசுக்கு விற்கப்பட்டது. இனி இந்த ரக பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 85 காசுக்கு விற்கப்படும். அதே வேளையில் திரவ பெட்ரோலிய எரிவாயு விலை ஒரு கிலோகிராமுக்கு 10 காசு அதிகரிக்கப்படுகிறது.ரோன் 97 ரக பெட்ரோலுக்கு இனிமேல் உதவித் தொகை கிடையாது. அது சந்தை விலைக்குத் தக்கவாறு நிர்ணயிக்கப்படும்.உலக எண்ணெய் விலைக்கேற்ப மாதந்தோறும் சரிசெய்யப்படும். விலை அதிகரிப்பு எவ்வளவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கணிசமானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.சீனி விலை ஒரு கிலோவுக்கு 25 காசு கூடுகிறது. இந்த விலை ஏற்றம் பயனீட்டாளர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.பெட்ரோல் விலை அதிகரிக்கப்படலாம் என்ற பேச்சு சமீபகாலமாக அடிபட்டு வந்த வேளையில் இந்த விலையேற்றம் நடப்புக்கு வந்துள்ளது.கடந்த முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டபோது அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறி நடுத்தர வர்க்கத்தினர் சிரமப்பட நேர்ந்ததாக பயனீட்டாளர்கள் கூறுகின்றனர்.

சாமிவேலுவுக்கு அமோக ஆதரவு

மலேசியாவில் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் பதவியில் நீடிப்பார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

சென்ற வார இறுதியில் நடந்த மஇகா ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் திரு சாமிவேலுக்கு கிடைத்த அமோக ஆதரவு இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

திரு சாமிவேலுவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்த கட்சிப் பேராளர்கள், அவர் முன்னதாகவே பதவி விலக வேண்டும் என்று கூறுபவர்களை கடுமையாகக் குறை கூறினர்.

சாமிவேலு டிசம்பர் மாதத்திற்குள் பலவந்தமாக பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று சிலர் கூறுவது நடைமுறைக்கு வராது என்பது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

அக்கூட்டத்தில் திரு சாமிவேலு, தனக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் ஜி. பழனிவேல் ஏற்பார் என்பதை கோடி காட்டியுள்ளார்.

ஆனால் தலைமைப் பொறுப்பை எப்போது அவரிடம் ஒப்படைப்பார் என்பதுதான் முக்கிய கேள்விக்குறியாக உள்ளது.
இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்தின் முடிவில் அவர் எப்போது பதவி ஓய்வு பெறுவார் என்று கேட்டதற்கு அவர் பதில் கூற மறுத்து விட்டதாக தகவல்கள் கூறின.

கெஅடிலானின் புதிய செய்தித்தாள்

மலேசியாவில் கெஅடிலான் கட்சியின் புதிய செய்தித்தாள் நேற்று கோலாலம்பூர் தெருக்களில் விநியோகிக்கப்பட்டது.
கெஅடிலான் என்ற பெயரில் அந்த புதிய பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின் முந்தைய ஏடான சுவாரா கெஅடிலானுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்ததை அடுத்து அக்கட்சி, புதிய பத்திரிகையைத் துவங்கியுள்ளது.

கெஅடிலானின் இளைஞர் அணியால் வெளியிடப்படும் இவ்வேடு நேற்று பல இடங்களில் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
எல்லா 400 பிரதிகளும் 20 நிமிடத்தில் கொடுத்து முடிக்கப்பட்டன- அந்த அளவுக்கு அதற்கு அமோக ஆதரவு இருந்ததாக கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரைப் பார்த்து பயப்பட வேண்டாம்: நஜிப்

ஜோகூரில் மேற்கொள்ளப்படவிருக்கும் இஸ்கந்தர் வளர்ச்சி வட்டாரத் திட்டத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடுகள் செய்யவிருப்பது குறித்து பயப்படத் தேவையில்லை என்று மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக், அம்னோ தலைவர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

ஜோகூர் வளர்ச்சி வட்டாரத்தில் சிங்கப்பூர் முதலீடுகளை ஈர்க்க தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளை கெடுக்க வேண்டாம் என்றும் திரு நஜிப், கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜோகூரில் அம்னோ கிளை ஆண்டுக் கூட்டத்தை நேற்று அவர் தொடங்கி வைத்துப் பேசினார்.
இஸ்கந்தர் வளர்ச்சி வட்டாரம், அங்கு செய்யப்பட்டவிருக்கும் எல்லா முதலீடுகளால் சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளும் நன்மை அடைவதை உறுதிப்படுத்திக்கொள்ளும் என்றும் திரு நஜிப் கூறினார்.

திரு நஜிப், சென்ற ஆண்டு மலேசியப் பிரதமராக பதவி ஏற்றது முதல் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை மூன்று தடவை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இரு நாடுகளும் எதிர்நோக்கும் இருதரப்பு பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினை ஒன்று இந்தப் பேச்சுவார்த்தைகளால் தீர்வு காணப்பட்டுள்ளது. கேடிஎம் தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற மலேசியா இணங்கியிருப்பதன் மூலம் முக்கிய பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

திரு அப்துல்லா படாவி பிரதமராக இருந்தபோது ரத்து செய்யப்பட்ட வளைவு பாலத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஜோகூர் மாநிலத் தலைவர்கள் திரு நஜிப்பை நெருக்கி வருகின்றனர். அத்திட்டம் மீண்டும் தொடங்கப்படுவதற்கு மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவும் ஜோகூர் முதலமைச்சரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜோகூர் பாலத்திற்குப் பதிலாக புதிய பாலத்தை கட்டுவது குறித்து சிங்கப்பூருடன் கலந்து பேசவிருப்பதாக ஜோகூர் முதலமைச்சர் அப்துல் கனி உதுமான் கூறியுள்ளார். ஆனால் அந்தப் பாலத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு சிங்கப்பூர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.

இந்நிலையில் ஜோகூர் இஸ்கந்தர் திட்டம் பற்றிப் பேசிய திரு நஜிப், சிங்கப்பூர் முதலீடுகளை மற்ற நாடுகளின் முதலீடுகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது என்று கூறினார்.

அதனால் நமது நாடு நன்மை அடையும் என்றால் அதிகமாக சிங்கப்பூர் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் நாம் நன்மை அடைவோம் என்று திரு நஜிப் கூறினார்.

அன்வரின் பத்திரிகை தொடர்ந்து விற்பனை

மலேசியாவில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் நடத்தும் கெஅடிலான் கட்சியின் அதிகாரத்துவ ஏடான சுவாரா கெஅடிலானுக்கு கடந்த வாரம் உள்துறை அமைச்சு தடை விதித்திருந்த போதிலும் நேற்று அந்த ஏடு விற்பனைக்கு வந்தது.
அதன் வெளியீட்டு அனுமதி புதுப்பிக்கப்படாமல் போனதைத் தொடர்ந்து அதனை அச்சிடக் கூடாது என உள்துறை அமைச்சு வெளியிட்ட உத்தரவை அந்த நாளேடு மீறியிருப்பதால் அது மூடப்படக் கூடிய அபாயத்தை அந்த ஏடும் கட்சியும் எதிர்நோக்கியுள்ளன.

காரணம் உள்துறை அமைச்சின் உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் அமைச்சர் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

அச்சிடுவதை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட போதிலும் சுவாரா கெஅடிலான் தொடர்ந்து அச்சிடப்பட்டு வெளியிடப்படும் என்று கெஅடிலானின் அரசியல், வியூக இயக்குநர் தியான் சுவா உட்பட பல தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
எல்லா வெளியீடுகளும் அமைச்சு, தங்களது வெளியீட்டு அனுமதிகளைப் புதுப்பிப்பதற்குக் காத்திருக்கும் வேளையில் தொடர்ந்து அச்சிடப்படுவது வழக்கமாகும் என்றும் சுவா தெரிவித்தார்.

மஇகா பொதுக் கூட்டத்தில் சாமிவேலு முக்கிய அறிவிப்பு

மலேசியாவில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் (மஇகா) ஆண்டுப் பொதுக்கூட்டம் இன்று தொடங்குகிறது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் 3,000 பேராளர்களிடம் முக்கிய கேள்விக்குறியாக இருப்பது திரு சாமிவேலு எப்போது பதவி விலகுவார்? அவருக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பது யாராக இருக்கும்? என்பதுதான்.
இக்கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் விதத்தில் திரு சாமிவேலு இக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி விலகுவது பற்றி திரு சாமிவேலு அறிவிப்பார் என்றும் ஆனால் எந்தத் தேதி என்பதை அவர் குறிப்பிட மாட்டார் என்றும் ஓய்வு பெற்ற மஇகா தலைவர் ஒருவர் கூறியதாக மலேசிய இணையப் பக்கத் தகவல் கூறியது.

திரு சாமிவேலு பதவி விலகிய பின்னர் மஇகா தலைவர் பொறுப்பை ஏற்பவர் கட்சியை ஒற்றுமைப்படுத்தி, நல்லவிதமாக வழிநடத்திச் சென்று அடுத்த தேர்தலில் வலுவான கட்சியாக விளங்க வழிவகுப்பாரா? அல்லது கட்சி பிளவு படுமா? அல்லது அரசியலிலிருந்து அக்கட்சி மறைந்து போகுமா? என்ற பல்வேறு கேள்விகள் கட்சிப் பேராளர்களிடம் நிலவுவதாகத் தெரிகிறது.
2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி விலகப் போவதாக மூன்று மாதங்களுக்கு முன்பு திரு சாமிவேலு அறிவித்திருந்தார்.
ஆனால் இது நடைமுறைக்கு வருமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அக்கட்சியை புதிப் பொலிவு பெறச் செய்வதற்கும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் இந்தியர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் சில காலம் பிடிக்கும் என்பதால் திரு சாமிவேலு குறிப்பிட்டுள்ள காலக் கட்டத்தில் அவர் பதவி விலகுவது சாத்தியமாகுமா என்ற ஐயம் பலரிடம் நிலவுகிறது.

திரு சாமிவேலு முன்னதாகவே பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருவதால் அவர் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே பதவி விலக ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அக்கட்சியின் துணைத் தலைவர் ஜி. பழனிவேல், திரு சாமிவேலு பதவி விலகிய பிறகு அக்கட்சியை புதுப் பொலிவு பெறச் செய்ய திட்டம் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838