முதுமைக்கு முதன்மை; நாட்டுக்கு நன்மை
Sunday, February 19th, 2012
சீனத் தத்துவ மேதை கன்ஃபூசியஸ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உதிர்த்த பொன்மொழி இது.
வரவுக்கு மேல் செலவு செய்வதும் வேதனைக்குத்தான் வழி விடும் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். அந்தக் கசப்பான பாடத்தைத்தான் ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக உணர்ந்து வருகின்றன.
தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியுமா என்ற எதிர்காலச் சிந்தனையின்றி, சமூக நலன் என்ற பெயரில் அந்த நாடுகள் தங்கள் குடிமக்களுக்காக பணத்தை வாரி இறைத்தன. இப்போது கிரீஸ் போன்ற நாடுகள் கிட்டத்தட்ட நொடித்துப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால் சிவப்புப் புள்ளி என்று வர்ணிக்கப்படும் சிங்கப்பூர் எதிர்காலத் தேவைகளுக்குத் திட்டமிடுவதில் இன்று உலகுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
வெள்ளிக்கிழமையன்று நிதியமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தாக்கல் செய்த இவ்வாண்டின் வரவு-செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தைச் செழிப்பாக்கும் ஒரு செம்மையான திட்டம்.
எந்த ஒரு நாட்டுக்கும் மிகப் பெரிய சொத்து அதன் மூத்த குடிமக்கள். தங்கள் முக்கியமான காலகட்டத்தை நாட்டு நிர்மாணத்தில் செலவிட்ட அவர்களின் முதுமை காலத்தில் நாடு அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டாமா?
அதை உறுதி செய்யும் பல திட்டங்களை திரு தர்மன் அறிவித்தது அவர்களின் உள்ளங்களை குளிர்வித்திருக்கும்.
பல நாடுகளில் இளையர்களே வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். ஆனால் இங்கு 50 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு வேலை நியமன வரவு (Special Employment Credit) என்ற திட்டத்தை அறிவித்து அசத்தியிருக்கிறார் நிதியமைச்சர். அவர்களின் சம்பளத்தில் 8 விழுக்காடு வரை அரசாங்கமே நிறுவனங்களுக்கு வழங்கும்.
அது மட்டுமா? 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய சேமநிதி சந்தா உயர்த்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நிலவி வந்த கோரிக்கைக்கும் செவிசாய்த்திருக்கிறார் திரு தர்மன். இது முதிய ஊழியர்களுக்கு இரட்டை அனுகூலம்.
இரட்டிப்பு வருவாய் நிவாரணம், முதியோர் வீடு மாறும் போனஸ், முதியவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்களுக்கு 120 வெள்ளி மாத மானியம், வீட்டைப் பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ள உதவித் தொகை, மருத்துவக் காப்பீடு நீட்டிப்பு என முதுமைக்கு முதல் மரியாதை தந்திருக்கிறது இந்த வரவு செலவுத் திட்டம்.
உடற்குறையுடையோரும் மறக்கப்படவில்லை. சிறப்புப் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றோரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 16 விழுக்காடு வரை அரசாங்கம் வழங்கும் என்ற அறிவிப்பு, வரவு செலவு திட்டத்தில் கருணைக்கும் இடமுண்டு என்பதற்கு சான்று.
சென்ற ஆண்டு பொதுத்தேர்தலின் போது மக்களின் அதிருப்திக்குக் காரணமாக இருந்த அம்சங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறார் நிதியமைச்சர். அதனால்தான் பேருந்துச் சேவையை மேம்படுத்த முன்னெப்போதும் இல்லாத அளவு 1.1 பில்லியன் வெள்ளியை அவர் ஒதுக்கியிருக்கிறார்.
பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுத் திட்டத்தை நமது வரவு செலவுத் திட்டத்தின் நிரந்தரக் கூறாக்கியிருப்பதை அனைத்து சிங்கப்பூரர்களும் வரவேற்பர்.
வசதி குறைந்த குடும்பங்களுக்கு பல உதவித் திட்டங்களை அறிவித்து, அவர்களைக் கைதூக்கி விடுவதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார் திரு தர்மன். வருவாய் குறைந்த சிங்கப்பூரர்களின் வருமானத்தைத் தொடர்ந்து உயர்த்தும் தொலைநோக்கு இந்த வரவு செலவுத் திட்டத்திலும் தென்படுகிறது.
கட்டுக்கோப்பான ஆட்சி, கவனமாகத் திட்டமிடல், மக்கள் வளத்திலும் உள்ளமைப்பு வசதிகளிலும் கவனம் செலுத்துதல் ஆகியவை ஒருங்கே அமைந்திருப்பதால்தான் சிரமமான ஓரிரு ஆண்டுகள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் எப்போதுமே உபரியைக் காட்டி வந்திருக்கிறது இந்த அரசாங்கம். அதனால்தான் நாம் வேதனை நோக்கி வீழாமல் சாதனை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறோம்.


