எவரெஸ்ட்டை எட்டிப் பிடிக்கும் கனவு

Monday, December 12th, 2011

- து அழகிய பாண்டியன், மூத்த எழுத்தாளர் .

“Because it’s there” (ஏனெனில் அது அங்கிருக்கிறது) - மலையேற்றத் துறையில் ஈடுபடும் எவரும் நன்கு அறிந்திருக்கும் புகழ்பெற்ற மூன்று வார்த்தைகள் இவை.
“நீங்கள் ஏன் இமய மலையை ஏற விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்குப் பதிலாக ஜோர்ஜ் மல்லோரி என்ற ஆங்கில மலை ஏற்ற வீரர் உதிர்த்த வார்த்தைகள் அவை. 1924ல் உலகின் உச்சத்தைத் தொட வேண்டும் என்ற கனவைச் சுமந்து கொண்டு இமய மலையில் ஏறிய அவர் உயிரோடு திரும்பவில்லை.
75 ஆண்டுகள் கழித்து, 1999ம் ஆண்டில் ஜோர்ஜ் மல்லோரியின் பதப்படுத்தப்பட்ட உடல் எவரெஸ்ட்டின் உச்சியில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
இதுவரை இமயமலை பலநூறு உயிர்களைப் பலி வாங்கி இருந்தாலும், இயற்கையை வெல்ல வேண்டும் என்ற மனித வேட்கையை அதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் தான் ஒவ்வோர் ஆண்டும் ‘ஏனெனில் அது அங்கிருக்கிறது’ என்ற உணர்வோடு இமயத்தில் கால் பதிக்க முயல்கின்றனர் பலர்.
அவர்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் மருத்துவர் குமரன் ராசப்பன்.
ஜோர்ஜ் மல்லோரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட அதே 1999ம் ஆண்டு, ராஃபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை மூன்றில் படித்துக் கொண்டிருந்த குமரன், தமது பள்ளி மாணவர்களுடன் சமூகத் தொண்டூழியம் செய்ய நேப்பாளத்துக்குச் சென்றிருந்தார்.
அங்கு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை கண்களில் வெள்ளை மழை பொழிந்து கொண்டிருந்த இமயமலையின் அன்னபூர்ணா மலைத் தொடரைக் கண்டு மலைத்துப் போனார் குமரன்.
அந்தச் சின்ன வயதிலேயே, “அந்த அழகிய மலைகளில் ஏறினால் எப்படி இருக்கும்?” என்று தம்முடன் வந்திருந்த ஆசிரியரைக் கேட்டிருக்கிறார் குமரன்.
ஆசிரியர் சிரித்துக் கொண்டே, “அதற்குப் பல மாதங்கள் கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும்,” என்று கூறினார்.
அப்போது குமரனின் மனத்தில் விழுந்த அந்த விதை, சுமார் பத்து ஆண்டுக்குப் பிறகு விருட்சமாக வளர்ந்தது.
2008ல் அவர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த போது, ஆப்பிரிக்காவின் ஆக உயரமான கிளிமஞ்சாரோ மலையில் வெற்றிகரமாக ஏறினார்.
பின்னர் சீனா, திபெத், நேப்பாளம், இந்தோனீசியா, ஐஸ்லாந்து என பல்வேறு நாடுகளில் பல மலைகளில் ஏறிய குமரன், கடந்த மாதம் 12ம் தேதி நேப்பாளத்தின் “அமா டப்லாம்” என்ற மலையில் வெற்றிகரமாக ஏறிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.
“6812 மீட்டர் உயரம் கொண்ட அந்த மலை இமயமலையை விட சுமார் 2 கிலோமீட்டர் உயரம் குறைவு. இருந்தாலும், அது ஏறுவதற்கு எவரெஸ்ட் சிகரத்தை விட மிக மிகக் கடினமானது.” என்கிறார் குமரன்.
எனவேதான் எவரெஸ்ட்டைத் தொட்டு விடலாம் என்ற தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறார் அவர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னமெரிக்காவின் மூன்று உயரமான மலைகளில் ஏறிவிட்டு, ஏப்ரல் மாதம் இமயத்தை எட்டுவது இந்த இளம் மருத்துவரின் கனவு.
வாழ்நாள் கனவுக்காக தமது மருத்துவத்துறை எதிர் காலத்தை ஓராண்டுக்குத் தள்ளிப் போட்டிருக்கும் குமரனின்  தைரியத்தை அவரது நண்பர்களும்   சக மருத்துவர்களும் விரிந்த விழிகளுடன் பாராட்டுகின்றனர்.
டான் டோக் செங் மருத்துவ மனையிலிருந்து ஓராண்டு விடுப்பு பெற்று மலைகளில் ஏறிவரும் குமரன், சொந்தச் சாதனைக்காக மட்டும் இந்த முயற்சியில் இறங்கவில்லை.
“டான் டோக் செங் மருத்துவ மனையின் சமூக அறக்கட்டளைக்கு நிதி சேர்ப்பதும் என்னுடைய இலக்கு. இதுவரை அந்த அறக்கட்டளைக்காக 18,000 வெள்ளி நிதி சேர்ந்திருக்கிறது. இன்னும் நிறைய ஆதரவாளர் களைத் தேடி வருகிறேன்,” என்கிறார் சமூக அக்கறையுள்ள இந்த இளையர்.
அடுத்த ஆண்டு அவரது கனவு நனவானால், இமயத்தைத் தொட்ட முதல் சிங்கப்பூர் தமிழர் என்ற பெருமையும் சமூக அறக்கட்டளைக்கு நிதி சேர்த்தவாறே இமயத்தைத் தொட்ட முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையும் அவரைச் சேரும்.
இந்த இமய மலைக் கனவுக்கு இன்னும் குமரனுக்குத் தேவைப் படும் தொகை சுமார் 60,000 வெள்ளி. அதனால் பல ஆதரவாளர்களின் கதவுகளைத் தட்டி வருகிறார் குமரன்.
அப்படித் திறந்திருக்கும் ஒரு கதவு காயத்ரி உணவகம்.
அதன் உரிமையாளர் திரு சண்முகம், “தமிழர்கள் துணியாத ஒரு துறை மலையேறுதல். எனவே குமரனின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது. நமது சமூகம் அவருக்குத் தோள் கொடுக்க வேண்டும்.
எனது பங்கிற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கோல்ஃப் போட்டியை நடத்தி அவருக்கு நிதி சேர்த்துக் கொடுக்கவிருக்கிறேன்,” என்றார்.
டாக்டர் குமரன் இதுவரை மேற்கொண்டிருக்கும் மலையேற்ற சாகசங்கள் பற்றிய ஒலி, ஒளிப் பதிவுகளை climbeverest2012.wordpress.com என்ற வலைப் பக்கத்தில் அவர் தொடர்ந்து பதிந்து வருகிறார்.
அவரது சாகசங்களின் முக்கியமான தருணங்களை அந்தப் பதிவுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இவ்வளவு தன்முனைப்புடன் செயல்படும் குமரனிடம் உங்களுக்கு யார் முன்னுதாரணம் என்று கேட்டபோது சற்று சிந்தித்து விட்டு அவர் கூறிய வித்தியாசமான பதில், “நான் யாராவது ஒருவருக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்.”
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது நான்காவது மாரத்தான் நெடுந்தொலைவு ஓட்டத்தை முடித்திருக்கும் இந்த அசாதாரணமான தமிழ் இளையர் அவரது சீரிய முயற்சியில் வெற்றிக்கொடி நாட்டுவதற்குப் பங்களிப்பு செய்ய விரும்புவோர் அவரது வலைத்தளத்தில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.