முக்கியம் முத்தரப்பு நம்பிக்கை: பிரதமர்
அரசாங்கம், தொழிற்சங்கங்கள், முதலாளிகள் முத்தரப்புகளுக்கும் இடையிலான நம்பிக்கைதான் சிங்கப்பூரை ஒன்றிணைக்கிறது. அந்த நம்பிக்கைச் சிங்கப்பூருக்கு மிகவும் அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி இருக்கிறார். நிச்சயமில்லாத வருங்கால உலகச் சூழலில் சிரமமான சவால்களைச் சிங்கப்பூர் சமாளிக்க அந்த நம்பிக்கைதான் மிக முக்கியம் என்று அவர் தெரிவித்தார். தேசியச் தொழிற்சங்கக் காங்கிரசின் தேசியப் பேராளர்கள் மாநாட்டில் பிரதமர் நேற்று உரையாற்றினார்.
சவால்மிக்க காலங்களில் கடினமான முடிவுகளை எடுக்கும்போது ஊழியர்கள், முதலாளிகள், அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரும் ஒருவர் மற்றொருவரின் நிலை பற்றி கவனத்தில் கொண்டு ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார் திரு லீ. நம்பிக்கை என்பது வெறும் போட்டித்திறன் அனுகூலம் அல்ல என்ற பிரதமர், அது சிங்கப்பூரை ஒன்றுசேர்த்து வைத்து இருக்கும் ஆதார நன்னெறி என்றார்.



