இணையத் தளங்கள் வரம்பு மீறினால் நடவடிக்கை: கபில் சிபல்

Wednesday, December 7th, 2011
இணையத் தளங்கள் வரம்பு மீறினால் நடவடிக்கை: கபில் சிபல்

இணையத் தளங்கள் வரம்பு மீறினால் நடவடிக்கை: கபில் சிபல்

இந்தியாவில் ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்ற சமூக இணையத் தளங்கள் இந்தியத் தலைவர்கள் மற்றும் சமயம், இனம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டாலோ வெளியிட வழி வகுத்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளார்.
“கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இறையாண்மைக்கு அப்பாற்பட்ட கருத்துகள் இணையத்தில் உலா வருகின்றன. இதுபோன்ற சமூக இணையத் தளங்களை சமூக ஆர்வலர்களும் பயன்படுத்தி வருகின்றனர். சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் கூட பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் தங்களுக்குச் சாதகமான கருத்துகளை இந்த இணையத் தளங்களில் பதிவு செய்கின்றனர். இதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் ஆகாது,” என்று கூறியுள்ளார் இந்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் நேற்று அமைச்சர் கபில் சிபல், சமூக இணையத் தளங்களின் இந்தியப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கபில் சபல், சமூக இணையத் தளங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சையைக் கிளப்பும் கருத்துகள், கார்ட்டூன்கள், புகைப்படங்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே இதுபோன்ற கருத்துகளை நீக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் கூறினார்.