Thursday, November 10th, 2011
சந்தேகம் வேண்டாம்: சூர்யா
‘7ஆம் அறிவு’ வெற்றியா இல்லையா என்று அனைத்துலக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருத்த விவாதங்களும் பெரும் கூச்சல்களும் இடம்பெற்றுள்ள நிலையில், அதீத பெருமிதத்தோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் சூர்யா.
வழக்கம்போல் கேள்விக்கணைகள் பறந்து வர, கோபப்படாமல், அவசரப்படாமல் தனக்கே உரிய நிதானத்துடன் சூர்யா பதில் அளித்ததுதான் ஹைலைட்.
“என்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றியும் முந்தைய படத்தின் வெற்றியை முறியடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். இதை நீங்கள் பேராசை என்று நினைத்தாலும் சரி, நியாயமான ஆசை என்று சொன்னாலும் சரி. இந்தப் படத்திலும் அதுதான் நடந்திருக்கு. ‘சிங்கம்’ படத்தின் வசூலை முதல் பத்து நாட்களிலேயே ‘7ஆம் அறிவு’ சாதித்துக் காட்டியிருக்கிறது. அந்த மகேசன் தீர்ப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். மக்களின் தீர்ப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சூர்யாவின் பேச்சு தொடக்கத்தில் ஒரு அரசியல்வாதியைப் போல் இருந்தது.
அதன் பிறகு படத்தைப் பாராட்டியவர்கள் குறித்த விவரங்களைக் குறிப்பிட்டார்.
“ரஜினி சார் குடும்பத்தோடு வந்து படம் பார்த்துவிட்டு பாராட்டினார். கமல் சார் வரும்போது நான் இல்லை. ஆனால் படத்தை பார்த்துட்டு, ‘பையன் ஃபுல் ஃபார்ம்ல இருக்கான்’னு சொன்னாராம். இதைக் கேட்டபோது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது” கமலின் வாரிசு பற்றியும் கேள்விகள் பறந்தன.
“இந்தப் படத்தில் ஸ்ருதிக்கு கொடுக்கப்பட்ட கனமான பாத்திரத்திற்கு பொருத்தமான நடிகை என்று தன் நடிப்பில் அவர் நியாயப்படுத்தி இருப்பதாக உங்களால் சொல்ல முடியுமா?” - இதுதான் கேள்வி.
“நான் நடிக்க வந்த புதிதில் எப்படி நடித்தேனோ, அதைவிட அவங்க சிறப்பாக செய்திருக்காங்க. எங்க ரெண்டு பேருக்கும் இடையிலான காதல் காட்சிகளில் அவ்வளவு இயல்பான நெருக்கம் இல்லைன்னு இங்கே சில பேர் சொன்னீங்க. உண்மையில் படப்பிடிப்பு தொடங்கிய முதல் சில நாட்கள் அவங்களைப் பார்க்கும் போதெல்லாம் கமல் சாரை நேரில் பார்ப்பது போலவே இருந்தது. அப்புறம்தான் மெல்ல மெல்ல அந்தப் பயம் நீங்கியது. இந்தக் கதைக்கு அவங்களை நாயகியாக தேர்வு செய்ததற்கு காரணமே அவர் அளித்த சில தைரியமான பேட்டி கள்தான். அதற்காக நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடித்த எல்லா காட்சியுமே இயல்பாக இல்லைன்னு சொல்லிவிட முடியாது.”
“இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார்?”
“அவர் பேசவில்லை. அவங்க மனைவி பார்த்துட்டு பாராட்டினாங்க.”
“நீங்க ‘வேலாயுதம்’ பார்த்தீங்களா?”
“என் படத்தையே திரும்ப திரும்ப பார்த்துட்டு இருக்கேன். பொதுவா நான் நடிச்ச படத்தை சில நாட்கள் திரையரங்குக்கு போய் பார்க்க மாட்டேன். அவ்வளவு பதற்றமாக இருக்கும். இனிமேதான் ‘வேலாயுதம்’ பார்க்கணும்.
ஆனா ரெண்டு படமும் நல்லா போயிட்டு இருக்கு. அதுதான் வேணும். ஒரு கமர்ஷியல் படம் வரும்போது இன்னொரு அழுத்தமான கதையம்சம் உள்ள படமும் வரணும். ரெண்டுமே ஓடணும். அதுதான் சினிமாவுக்கு நல்லது.”
“போதி தர்மர் தமிழரான்னு ஒரு பிரச்சினை வந்திருக்கே?”
“போதி தர்மர் விஷயத்தை ஏதோ விளையாட்டா எடுத்து பண்ணலை. அதுக்காக நிறைய ஆராய்ச்சி செய்திருக்கோம். முருகதாஸ் சாரும், உதவி இயக்குநர்கள் 15 பேரும் கடுமையாக ஆய்வு செய்த பிறகுதான் படத்தை எடுத்திருக்கோம். விக்கிபீடியாவில் கூட அவர் தமிழர்தான் என்று குறிப்பு இருக்கு. அதனால் யாரும் சந்தேகப்பட வேண்டாம்” என்று திட்டவட்டமாக சொல்லி பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார் சூர்யா.