மூன்று மணி நேரத்தில் $70,000 மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றல்

Saturday, September 10th, 2011
மத்திய போதைப் பொருள் ஒழிப்பு இலாகா அதிகாரிகள் கிட்டத்தட்ட $71,000 மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். வியாழக்கிழமை நடந்த மூன்று மணி நேர வேட்டையில் இவை பிடிபட்டன. இதன் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்பு இலாகா நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. அவர்களிடம் 200 கிராம் ‘ஐஸ்’, ‘யாபா’ மருந்துகளின் துகள்கள், 1,000க்கும் அதிகமான இரிமின்-5 மாத்திரைகள், 23 கிராம் கெட்டமின், 150 எக்ஸ்டஸி மாத்திரைகள் ஆகியவை இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது. புக்கிட் பாத்தோக் வெஸ்ட் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனையில் இருவருக்குப் பங்கு இருக்கக்கூடும் என சந்தேகப்பட்ட அதிகாரிகள் அவர்களைச் சோதனையிட்டனர். அவர்களிட் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் சில இருந்தன. பின்னர் அவர்களுக்காக போதைப் பொருட்களைக் கடத்துபவர்கள் புக்கிட் பாஞ்சாங்கில் ஒளிந்திருந்த வீட்டில் அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு போதைப் பொருள் கடத்து பவரும் மேலும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அங்கு பாதி தீயில் எரிந்திருந்த பெட்டியிலிருந்து சில போதைப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிக பட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15 பிரம்படிகளும் வழங்கப்படலாம்.