இங்கிலாந்து காற்பந்து கிளப் இந்தியர் வசமாகிறது
இங்கிலாந்தின் பிரபல காற்பந்து பிரிமியர் லீக் கிளப் ஒன்று இந்தியர் வசமாக இருக்கிறது.
இந்தியாவின் வெங்கி குழுமம் பிளாக்பர்ன் ரோவர்ஸ் கிளப்பை வாங்க இருக்கிறது என்றும் அநேகமாக இந்தக் கொள்முதல் அடுத்த மாதம் வெற்றிகரமாக முடிவடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வெங்கி குழுமம் கால்நடை பண்ணைத் தொழில், மருந்துத் தொழில் துறைகளில் முன்னணி நிறுவனம். அது ரோவர்ஸ் மற்றும் காற்பந்து சங்கத்துடன் பல சுற்றுப் பேச்சை முடித்துள்ளது.
இந்த விற்பனையும் கொள்முதலும் வரும் நவம்பர் மாதம் முடிவுறும் என்று இரு தரப்புகளும் நம்புவதாக ரோவர்ஸ் தலைவர் ஜான் வில்லியம்ஸ் தெரிவித்தார்.
இந்தக் கொள்முதல் மதிப்பு சுமார் 95 மில்லியன் வெள்ளி (ரூ 324 கோடி) என்று கூறப் படுகிறது.
இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த வெங்கி குழுமத்தின் தலைவர் தேசாய், “எங்கள் நிறுவன இயக்குநர்கள் வெங்கடேஷ் ராவ், பாலாஜி ராவ் ஆகியோர் இப்போது இங்கிலாந்தில் உள்ளனர்.
“பிளாக்பர்ன் ரோவர்ஸ் கிளப்பை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
“பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருக்கிறது,” என்றார்.
காற்பந்து கிளப்புகள் மோதும் போட்டி உலகில் மிகவும் பிரபலம் பெற்றது. இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் காற்பந்து கிளப்புகள் மிகவும் புகழ் பெற்றவை.
முன்னணி வீரர்களை காற்பந்து கிளப்புகள் கோடிக் கணக்கான பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்வது வழமை.
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் கிளப்புகளில் ஒன்று பிளாக்பர்ன் ரோவர்ஸ்.
பிரிட்டனில் பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்து கிளப் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ளது.
இந்த கிளப்பை வாங்க பேச்சு நடத்திவரும் இந்தியாவின் நிறுவனம், மும்பைக்கு அருகே புனேயில் தளம் கொண்டு செயல்படுகிறது.
ஐரோப்பிய காற்பந்து கிளப் இந்திய நிறுவனம் வசம் வருவது இதுவே முதல்.


