சுற்றுப்பயணிகளை விரட்டும் அமெரிக்க மூட்டைப் பூச்சிகள்
நியூயார்க்: நியூயார்க் நகரம் இப்போது மூட்டைப் பூச்சி நகரமாக மாறிக் கொண்டு வருகிறது.
வீடுகளின் படுக்கைகளில் மட்டும் கடித்துக் கொண்டிருந்த மூட்டைப் பூச்சிகள் தற்போது அமெரிக்காவின் சின்னங்களாகக் கருதப்படும் எம்பையர் ஸ்டேட் கட்டடம், ப்ளூமிங்டேல் மற்றும் லிங்கன் சென்டர் போன்ற இடங்களிலும் மேய ஆரம்பித்து விட்டன.
அதுபோதாதென்று அங்குள்ள விடுதிகள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களிலும் மூட்டைப் பூச்சிகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனவாம்.
விடுமுறை நாட்களை உல்லாசமாகக் கழிப்பதற்கு நியூயார்க் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகள் மூட்டைப் பூச்சிக்கு அஞ்சி விடுமுறையைக் கழிக்க வேறு இடத்தைத் தேர்வு செய்யத் தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிள் விதையைப் போன்ற காட்சி தரும் இந்த மூட்டைப் பூச்சிகள் கடந்த சில ஆண்டுகளாக நியூயார்க் மட்டுமன்றி அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளதாகக் கூறப் படுகிறது.
மூட்டைப் பூச்சியால் அமெரிக்காவின் கௌரவம் பாதிக்கப் படுவதோடு அந்நாட்டின் சுற்றுலாத் துறை பில்லியன் கணக்கான டாலர் வருமானத்தை இழக்கும் என்று கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் விமானப் பயணங்கள் அதிகரித்து விட்டதும் பல பூச்சிக் கொல்லி மருந்து கள் தடை செய்யப்பட்டதுமே இந்த மூட்டைப் பூச்சி பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஏபி


