பிரபாகரன் மரணம்: இந்தியா ஒப்புதல், வழக்கில் இருந்து நீக்கம்

Wednesday, October 27th, 2010

இலங்கை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டதை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருந்த பிரபாகரனின் பெயரை இந்திய அரசு நீக்கிவிட்டது.

புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பெயரும் நீக்கப்பட்டு உள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு, மே 21-ல்  திருப்பெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில்  பிரபாகரன் முதன்மைக் குற்றவாளியாகவும், பொட்டு அம்மான் அடுத்த குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கையில்  2009 இறுதிப் போரில் பிரபா          கரனும் பொட்டம்மானும் கொல்லப் பட்டதாகக் கூறி, ஒரு கடிதத்தை நீதிபதி ஒருவரின் அத்தாட்சியுடன்  இலங்கை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இந்திய அரசு அதனை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.

இந்த நிலையில், இப்போது இந்த இருவரது பெயரையும் ராஜீவ் கொலை குற்றவாளிகள் பட்டியலி லிருந்து நீக்கிவிட்டதாகவும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணா மூர்த்தி இதுகுறித்து வெளியிட்டு உள்ள குறிப்பில், "முதன்மைக் குற்றவாளி பிரபாகரன், 2வது  குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகிறது,” என்று கூறியுள்ளார்.

இந்தியக் குற்றவியல் சட்ட அடிப்படையில் ஒரு குற்றவாளியின் மரணத்துக்குப் பிறகு அவர் மீதான குற்றச்சாட்டுகள் தானாகவே காலாவதியாகி வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார்.