fontsize: 60% 70% 80% 90%

அழகிரி விலகமாட்டார்: ஸ்டாலின்

இந்தியாவின் மத்திய உரம், ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி, விரைவில் பதவி விலகப் போகிறார் என்று செய்தி வெளியாகி ஒரே பரபரப்பாகி இருக்கிறது.

ஆனால் அத்தகைய பேச்சு எல்லாம் வெறும் புரளி என்று தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பெரும் புள்ளிகள் எல்லாரும் உடனடியாக மறுத்துவிட்டனர்.

அமைச்சர் அழகிரி, மத்திய அமைச்சரவையில் சொல்லும் படியாக எதையும் சாதிக்க வில்லை. ஆனால் மாநில அளவில் இடைத் தேர்தல்களில் புதிய பாணியையே புகுத்தி பெரும் சாதனைகளை நிகழ்த்தி திமுக தலைவர் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

கடந்த 2008 முதல் அமைச்சராக இருந்துவரும் அழகிரிக்குப் புதுடெல்லியில் அவ்வளவாக நாட்டம் இல்லை என்றும் மாநில அரசியலில் திமுக கட்சியைத் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதே அவருடைய லட்சியம் என்றும் கூறப்படுகிறது.
அதே வேளையில், அழகிரியின் தம்பியும் தனது மகனுமான ஸ்டாலினை அடுத்த முதல்வராக்க திமுக தலைவர் கருணாநிதி திட்டம் வகுக்கிறார்.

இதில் அழகிரிக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. திமுகவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்க அழிகிரி விரும்புகிறார். திமுக, ஸ்டாலின் கைக்குப் போனால், ஸ்டாலினின் உறவினரும் ஆதரவாளருமான தயாநிதி மாறன் திமுகவைக் கைப்பற்றி விடுவார் என்று அழகிரி அஞ்சுகிறார்.

திமுக தன் கட்டுப்பாட்டில் வரும்போது, முதல்வர் பதவியை வேண்டுமானால் தன் தம்பிக்கு விட்டுத்தர அழகிரி தயாராக இருக்கிறார் என்று தெரிகிறது.

இதை மனதில் வைத்தே, திமுக தலைவர் கருணாநிதிக்கு அடுத்த தலைவரை ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கத் தேர்தல் நடந்தால் தான் போட்டிபோடப் போவதாக அழகிரி பகிரங்க அறிவிப்பு விடுத்து இருக்கிறார்.
இதற்கிடையே தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அதில் சித்து வேலைகளைக் காட்டி வெற்றிக் கனியைப் பறிக்க அழகிரியின் தீவிர ஈடுபாடு அவசியம் என்று திமுக தலைமை நம்புகிறது.
ஆகையால் மத்தியில் இருந்து அழகிரி விலகி மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதை திமுக தலைவர் வரவேற்கக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் சொல்கிறார்கள்.
மாநிலத்தில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கருணாநிதி தலைமையில் மீண்டும் திமுக அமைச்சரவை அமைந்தால், அதில் பொதுப் பணித்துறையை அழகிரி பெறுவார் என்று திமுக கட்சி வட்டாரக் கணிப்புகள் கூறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சரவையில் இருந்து அழகிரி விலகும் பட்சத்தில், திமுக எம்பியும் திமுக தலைவரின் புதல்வியுமான கனிமொழி அல்லது டிஆர் பாலு அமைச்சராகக்கூடும்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838