fontsize: 60% 70% 80% 90%

முன்னாள் வங்கி அதிகாரிக்கு $10,000 அபராதம்

Bookmark and Share

சிங்கப்பூரிலுள்ள யுபிஎஸ் வங்கியில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராக வேலை செய்து கொண்டிருந்தபோதே, தனியார் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய நண்பர்களிடமிருந்து நிதி திரட்டினார் மார்க் ஆன்ட்ரூ ராபர்ட்சன்.
ஆனால், அவர் திட்டமிட்டபடி முதலீட்டுத் திட்டம் நிறைவேறவில்லை.

அதனால், கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின்கீழ் போலி பத்திரம் தயாரித்ததற்காக ராபர்ட்சனுக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக அவருக்கு மேலும் $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான 41 வயது ராபர்ட்சன், யுபிஎஸ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப அடிப்படை வசதிகள் பிரிவின் இணை இயக்குநராகப் பதவி வகித்தபோது, பெர்டோமோ சிகார்ஸ் ஏஷியா நிறுவனத்திற்காக முதலீடுகள் திரட்டினார்.

இந்நிறுவனம் பேங்காக்கில் ஆடவர் மன்றம் நடத்துகிறது.

நிறுவனத்தில் ஆறு மாதகாலம் முதலீடு செய்வோருக்கு 15 விழுக்காடு வட்டி தருவதாக நிறுவனம் உறுதியளித்தது.

தனது இந்தோனீசிய மனைவியின் இரு நண்பர்களிடம் முதலீட்டுத் திட்டத்திற்கு நிதி திரட்டினார் ராபர்ட்சன். குமாரி சுகந்தி கண்ணாயிரம் $200,000 தொகையும், குமாரி ரத்னா கில்லிலாண்ட் $80,000 தொகையும் தந்தனர். இந்த முதலீட்டை யுபிஎஸ் வங்கி ஆதரிப்பதாகவும் குமாரி கில்லிலாண்டிடம் ராபர்ட்சன் கூறினார்.

ஜூலை 2008ல், வங்கியின் பெயருடன் போலி வைப்புச் சான்றிதழைத் தயாரித்து குமாரி கில்லிலாண்ட்டிடம் கொடுத்தார் ராபர்ட்சன்.

முதலீட்டுக்கு பெர்டோமோ தரும் 15 விழுக்காடு வட்டியில் மூன்று விழுக்காட்டைத் தான் வைத்துக் கொண்டு, முதலீடு செய்த பெண்களுக்கு 12 விழுக்காடு வட்டி தருவது ராபர்ட்சனின் திட்டம்.

ஆனால், இதை அவர் தெரிவிக்காததால், ராபர்ட்சன் கையாடல் செய்ததாகச் சட்டப்படி கருதப்படுகிறது.

குமாரி கண்ணாயிரத்திடம் கொடுக்கவேண்டிய வட்டியில் $2,980 எடுத்துக்கொண்டதாக ராபர்ட்சன் ஒப்புக்கொண்டார்.

மேலும் $3,500 கையாடல் செய்த குற்றச்சாட்டுகளை மாவட்ட நீதிபதி சர்ஜித் சிங் தீர்ப்பளிக்கும்போது கவனத்தில் கொண்டார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838