fontsize: 60% 70% 80% 90%

நாடாளுமன்றத்தை முடக்குவோம்: பாஜக எச்சரிக்கை

Bookmark and Share

விலைவாசி உயர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் வரையில் அவையை இயங்க விடமாட்டோம் என்று பாரதிய ஜனதா கட்சி எச்சரித்துள்ளது.

ஒத்தி வைப்புத் தீர்மானத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைக்கு இதர முக்கிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

“விலைவாசி உயர்வுப் பிரச்சினை, பாப்ளி அணை விவகாரம் என பல விஷயங்களில் மத்திய அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருவதில் எந்தத் தவறும் இல்லை,” என்றார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.

இதனிடையே முன்பே நாடாளுமன்ற அவையில் விவாதிக்கப்பட்ட பழைய பிரச்சினைகள் குறித்து மீண்டும் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கத் தேவையில்லை என்று சபாநாயகர் மீராகுமார் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறியிருப்பதாகத் தெரிகிறது. எனினும் ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு உண்டு.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி இன்று (புதன்கிழமை) விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தையே எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பது மத்திய அரசுக்கும் காங்கிரசுக்கும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838