மலேசியாவில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் (மஇகா) ஆண்டுப் பொதுக்கூட்டம் இன்று தொடங்குகிறது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் 3,000 பேராளர்களிடம் முக்கிய கேள்விக்குறியாக இருப்பது திரு சாமிவேலு எப்போது பதவி விலகுவார்? அவருக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பது யாராக இருக்கும்? என்பதுதான்.
இக்கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் விதத்தில் திரு சாமிவேலு இக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவி விலகுவது பற்றி திரு சாமிவேலு அறிவிப்பார் என்றும் ஆனால் எந்தத் தேதி என்பதை அவர் குறிப்பிட மாட்டார் என்றும் ஓய்வு பெற்ற மஇகா தலைவர் ஒருவர் கூறியதாக மலேசிய இணையப் பக்கத் தகவல் கூறியது.
திரு சாமிவேலு பதவி விலகிய பின்னர் மஇகா தலைவர் பொறுப்பை ஏற்பவர் கட்சியை ஒற்றுமைப்படுத்தி, நல்லவிதமாக வழிநடத்திச் சென்று அடுத்த தேர்தலில் வலுவான கட்சியாக விளங்க வழிவகுப்பாரா? அல்லது கட்சி பிளவு படுமா? அல்லது அரசியலிலிருந்து அக்கட்சி மறைந்து போகுமா? என்ற பல்வேறு கேள்விகள் கட்சிப் பேராளர்களிடம் நிலவுவதாகத் தெரிகிறது.
2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி விலகப் போவதாக மூன்று மாதங்களுக்கு முன்பு திரு சாமிவேலு அறிவித்திருந்தார்.
ஆனால் இது நடைமுறைக்கு வருமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அக்கட்சியை புதிப் பொலிவு பெறச் செய்வதற்கும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் இந்தியர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் சில காலம் பிடிக்கும் என்பதால் திரு சாமிவேலு குறிப்பிட்டுள்ள காலக் கட்டத்தில் அவர் பதவி விலகுவது சாத்தியமாகுமா என்ற ஐயம் பலரிடம் நிலவுகிறது.
திரு சாமிவேலு முன்னதாகவே பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருவதால் அவர் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே பதவி விலக ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அக்கட்சியின் துணைத் தலைவர் ஜி. பழனிவேல், திரு சாமிவேலு பதவி விலகிய பிறகு அக்கட்சியை புதுப் பொலிவு பெறச் செய்ய திட்டம் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.