fontsize: 60% 70% 80% 90%

முத்தரப்பும் ஒத்துழைப்போம்

Bookmark and Share

முதலாளிகள் செலுத்தும் மத்திய சேமநிதி (மசேநிதி) சந்தா விகிதம் 1% உயர்த்தப்பட்டு
15.5 விழுக்காடாக்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் மே தினப் பேரணியில் தெரிவித்த செய்தி ஊழியர்கள் அனைவருக்கும் ஓர் இனிப்பான செய்தியாக அமைந்தது.
முதல் காலாண்டின் வலுவான 13% பொருளியல் வளர்ச்சியால், ஊழியர்களுக்கு முதலாளிகள் செலுத்தும் மசேநிதிச் சந்தா விகிதத்தில் ஒரு பகுதியை உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்ததற்கு ஏற்ப, அரசு ஒரு விழுக்காட்டு உயர்வை அறிவித்தது.
பொருளியல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்தால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மொத்த மசேநிதிச் சந்தா விகிதம் அதிக பட்சமாக 36 விழுக்காட்டை எட்டக்கூடும் என்றார் பிரதமர்.
அதாவது, முதலாளிகளின் சந்தா விகிதம் 16 விழுக்காடாகி, ஊழியரின் சந்தா விகிதம் தொடர்ந்து 20 விழுக்காடாக இருக்கும். இந்த உயர்வுடன், ஒவ்வோர் ஊழியரின் மசே நிதிக் கணக்கிலும் மொத்தம் 35.5% சந்தா செலுத்தப்படும். இதில் 20% ஊழியரின் சம்பளத்தில் இருந்தும் மீதி 15.5% முதலாளியின் தரப்பிலிருந்தும் வரும்.
தங்கள் மசேநிதிச் சந்தாவில் ஒரு விழுக்காட்டு கூடுதல் பணம் போடப்பட உள்ளது என்று ஊழியர்களும், தங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு விட்டது என்ற மனநிறைவில் தொழிற்சங்கங் களும் மகிழ்ச்சியாக உள்ளன.
பொருளியல் மந்தநிலையின் போது வர்த்தகச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறிய முதலாளிகள் செலுத்தும் ஊழியர்களின் மசேநிதிச் சந்தா குறைக்கப்பட்டது
கடந்த ஆண்டு அரசு முதலாளிகளுக்கு வழங்கிய பல்வேறு நிதி உதவித் திட்டங்கள் மூலம் நன்மை அடைந்த முதலாளிகள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யாமல் வைத்து இருந்தனர்.
இப்போது நாட்டின் பொருளியல் மீண்டு வந்துள்ளது. தொடர்ந்து நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.
சிரமமான காலத்தின்போது, சம்பள வெட்டுகளை ஏற்றுக் கொண்டு நிறுவனங்களுக்கு நல்லாதரவு தந்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இப்போது அவர்களின் மசேநிதிக் கணக்குகளில் ஒரு விழுக்காட்டு சந்தா சேர்த்து முதலாளிகள் செலுத்துகின்றனர்.
இந்த நடவடிக்கையும் முதலாளிகளுக்குக் கூடுதல் செலவுகளைக் கொடுக்கும். அதற்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பொருட்டுதான், முதலாளிகள் மசேநிதிச் சந்தா ஒரு விழுக்காடு கூட்டப்படுவது படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதுவும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் பொருளியல் தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால், ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளம் போனஸ் போன்றவற்றை முதலாளிகள் வழங்கவேண்டியிருக்கும்.
ஆக, முத்தரப்புப் பங்காளித் துவம் சிறப்பாக விளங்கும் சிங்கப்பூரில் தங்கள் ஊழியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் முதலாளிகளுக்கு ஊழியர்கள் தங்களால் ஆன ஒத்துழைப்பை நல்கவேண்டும்.
அதுவே, மே தின உணர்வில் திளைத்திருக்கும் ஊழியர்கள் செய்யும் நன்றிக் கடனாக இருக்கும்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838