fontsize: 60% 70% 80% 90%

பட்டப்படிப்பு கட்டணம் உயர்வு

தங்கள் கட்டணங்கள் இவ்வாண்டு 4 முதல் 18% உயரவுள்ளதாக சிங்கப்பூரின் மூன்று அரசு தேசியப் பல்கலைக் கழகங்களும் நேற்று அறிவித்தன.
நிரந்தவாசிகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் கட்டண உயர்வு இன்னும் அதிகமாக இருக்கும்.
தேசியப் பல்கலைக் கழகத்தின் கட்டடக் கலை வடிவமைப்பு மற்றும் வர்த்தகத் துறை மாணவரின் கட்டணங்கள் 7% உயரும்.
சட்டம் மற்றும் மருந்தகத் துறையின் கட்டணங்கள் 10% உயரும். மற்ற அனைத்து துறைகளில் சேரும் உள்ளூர் மாணவர்களின் கட்டணங்கள் 4% கூடும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் வர்த்தகம் அல்லாத துறைப் படிப்புக் கட்டணம் 8% உயர இருக்கிறது.
அதே நேரத்தில் வர்த்தகத் துறைகளுகளின் கட்டணம் 18% உயரும்.
அனைத்துலகத் தரத்துக்கு ஒப்பாக இந்த புதிய கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளன என்று விவரித்தார் தேசியப் பல்கலைக் கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் டான் எங் சை.
“ பல்கலைக் கழகத்தின் அன்றாட செலவுகளின் பெரும்பகுதிக்கு கல்வி அமைச்சு தொடர்ந்து உதவி புரியும்,’’ என்றார் அவர்.
சிங்கப்பூர் நிரந்தரவாசி களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் துறைக்கேற்ப மாறுபட்ட உயர்வுகளையும் இரு பல்கலைக்கழகங்களும் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தும்.
நிரந்தவாசிகளுக்கான கட்டணம் $720 முதல் $2,810 வரை உயரும். வெளிநாட்டு மாணவர் களுக்கான கட்டணம் $800 முதல் $3,120 வரை உயரும்.
தவிர நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் வர்த்தகம் மற்றும் வர்த்தகம் அல்லாத துறை களின் கட்டணங்களும் முதல் ஆண்டிலேயே வேறுபடும்.
முன்னதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் முதல் ஆண்டின்போது ஒரே கட்டணத்தைக் கட்டி வந்தனர்.
இரண்டாம் ஆண்டில் தான் மாணவர்கள் பயிலும் துறைக்கேற்ப கட்டணம் வேறுபடும்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் கட்டணங்கள் இவ்வாண்டு 3% உயரும்.
சட்டத் துறைக்குக் கட்டணம் $10,920க்கு உயரும், மற்ற அனைத்து இளங்கலைப் படிப்புக்குக் கட்டணம் $9,890.
படிப்பு முடியும் நான்கு ஆண்டுகளுக்கும் அந்த கட்டணம் மாறாது.
இவ்வாண்டுக்கான பலதுறைத் தொழிற் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களின் கட்டணங்கள் அண்மையில் உயர்ந்தன.
நிதிப் பிரச்சினைகளால் எந்த சிங்கப்பூரருக்கும் பட்டப்படிப்பு வாய்ப்பு கிடைக்காமல் இருக்காது என்றும் வசதி குறைந்த மாணவர்களுக்காக பல உதவித் திட்டங்கள் இருக்கின்றன என்று மூன்றூ பல்கலைக் கழகங்களும் உறுதியளித்தன.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838