தாய்லாந்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தி வரும் சிவப்பு நிற சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தாய்லாந்துப் பிரதமர் அபிசித் விஜஜிவா தெரிவித்துள்ளார்.
“ஆர்ப்பாட்டங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும்போது அரசாங்கம், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த எந்த ஆட்சேபனையும் இல்லை,” என்று திரு அபிசித் கூறினார்.
தாய்லாந்து ராணுவத் தளத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் திரு அபிசித் பேசினார். பேச்சின் விவரம் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சினின் ஆதரவாளர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக பேங்காக்கில் அரசாங்கத்திற்கு எதிராக பேரணி நடத்தி வருகின்றனர்.
பிரதமர் அபிசித் பதவி விலக வேண்டும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும், புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்கப்போவதில்லை என்றும் தான் பதவி விலகப் போவதில்லை என்றும் அபிசித் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுவரை பேரணி அமைதியான முறையில் நடந்த போதிலும் மனித ரத்தத்தை சேகரித்து அரசாங்க அலுவலகங்களுக்கு முன்பு ஊற்றியது போன்ற அதிர்ச்சி தரும் தந்திரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் ஆர்ப்பாட்டக்காரர்கள், கால வரம்பற்ற ஆர்ப்பாட்டத்தை தொடரப் போவதாக சூளுரைத்துள்ளனர். பேங்காக்கில் பேரணி தொடங்கியபோது சுமார் 100,000 பேர் அதில் கலந்து கொண்டனர். தற்போது சுமார் 40,000 பேரே அங்கு இருப்பதாக போலிசார் கூறினர்.
ஆடல், பாடல் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் பேரணிக்கு அதிகமானோரை ஈர்க்க முயன்று வருவதாக ஆர்ப்பாட்டத் தலைவர்கள் கூறினர். வேலை, தொழில் ஆகிய காரணங்களுக்காக பலர் வீடு திரும்பியிருப்பதாகவும் அவர்கள் இந்த வார இறுதியில் மீண்டும் பேங்காக் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்களின் தலைவர் ஒருவர் கூறினார்.