கொழும்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் அழியவில்லை.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புலிகள் அமைப்பு அழியாமல் பாதுகாத்து வருவதாக இலங்கை அதிபர் கூறியிருக்கிறார்.
“எல்லாம் இன்னும் முடிந்துவிடவில்லை. செயல்படா உறுப்பினர்களும் ஆர்வமுள்ள தரப்பினரும் இன்னும் இருக்கிறார்கள், குறிப்பாக இலங்கைக்கு வெளியில்” என்று திரு மகிந்த ராஜபக்சே கூறினார்.
வெளிநாட்டுத் தமிழர்கள் சிலர் ஈழத்தை வைத்து வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் சொன்னார்.
“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக வெளிநாட்டில் பணம் திரட்டி வந்தவர்கள் தங்களது வயிற்றுப் பிழைப்பை இழந்துவிட்டார்கள். தமிழர்கள் இப்போது நிதி வழங்க முன்வருவதில்லை என்பது இதற்குக் காரணம். எனவே, அவர்களைக் கவரவும் செயலில் இறங்கவும் இங்கு ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்,” என்றார் அவர்.
ஆனாலும், வெளிநாட்டிலுள்ள தமிழர்களில் பெரும்பாலொர் இலங்கையில் அமைதி நிலைநாட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும்
திரு ராஜபக்சே குறிப்பிட்டார். அவர்களில் சிலர் இலங்கைக்குத் திரும்பிவந்து வாழவும் முதலீடு செய்யவும் விரும்புகின்றனர். இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரும் இப்போதெல்லாம் நிம்மதியாக வாழ்கிறார்கள்.
பொதுக்கூட்டம் ஒன்றில், தனக்கு ஆதரவான தமிழ் வழக்கறிஞர் ஒருவர் எழுந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அதன்வழி தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்றும் கேட்டுக் கொண்டதாகத்
திரு ராஜபக்சே விவரித்தார்.
ஆனால், இவ்வாறு செய்யக்கூடாது என்று இளம் தமிழ் ஆடவர் ஒருவர் கூட்டத்தில் கூறினார்.
“தயவுசெய்து மறுபடியும் எங்களைப் பிரிக்காதீர்கள்.
“எங்கள் அனைவரையும் ஒரே நிழலின்கீழ் வைத்திருப்பதே நல்லது,” என்று அவ்விளைஞர் சொன்னதாக அதிபர் தெரிவித்தார்.
தமிழர்களை மத்திய வட்டத்திற்குள் கொண்டு வர குறிப்பிட்ட சில திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்வ தாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாவட்டத்தில், 500 தமிழர்கள் போலிஸ் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக் கொண்ட வடக்கில், மேலும் 450 தமிழர்களுக்குப் போலிஸ் வேலை தரப்பட்டிருக்கிறது.
முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரிலிருந்து தலையெடுக்கும் இலங்கை, வட்டார விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மையமாகத் திகழவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சராசரி தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் விரும்புகிறது.
அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவத் தலைவர் சரத் பொன்சேகாவை வீழ்த்தி, இரண்டாவது தவணைக் காலம் அதிபராகப் பதவி ஏற்றிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வெளியிட்ட இலக்கு இது.
“இந்நாட்டை கல்வித்துறை, கப்பல்துறை, விமானத்துறை, தொடர்புத்துறை, பயணத்துறை மையமாக உருவாக்க விரும்புகிறேன்” என்று ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிடம் அவர் சொன்னார்.
நீதிமன்ற தண்டனையை எதிர்நோக்கும் ëஜனரல் பொன்சேகா, தனது அரசியல் எதிரிகள் மற்றும் தென் இலங்கையிலிருந்து அழைப்பின்றி வந்த தலையீட்டாளராக இவரைக் கருதும் கொழும்பு நகரின் உயர்மட்டத்தினர் ஆகியோ ரையும் அதிபர் ராஜபக்சே ஏளனமாகப் பேசினார்.