சிங்கப்பூரின் உயிரியல்மருத்துவ அறிவியல் துறை இந்த ஆண்டில் 5 முதல் 10 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 13,000 ஊழியர்களைக் கொண்டிருக்கும் இத்துறை மேலும் வளரும் என பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆண்டு இறுதி ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
கடந்த 2008ல் $20.2 பில்லியனாக இருந்த இத்துறையின் உற்பத்தி 2015ம் ஆண்டு வாக்கில் $25 பில்லியனை எட்டும் என கழகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
2009ம் ஆண்டில் உயிரியல் மருத்துவ அறிவியல் துறை $1.2 பில்லியன் மொத்த சொத்து முதலீட்டையும் $700 மில்லியன் மொத்த வர்த்தக செலவையும் ஈர்த்ததாக அறிக்கை தெரிவித்தது.
இவை முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது 1,600க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய உயிரியல்மருத்துவ அறவியல் துறை நிறுவனங்கள் சிங்கப்பூருடனான தமது பங்காளித் துவத்தை வலுப்படுத்தியுள்ளதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் கூறியது.
இதற்கிடையே இந்த வட்டாரத்தின் உயிரியல்மருத்துவ அறிவியல் துறை நிபுணர்கள் நாடும் முதல் இடமாக சிங்கப்பூர் திகழ்வதாக மற்றொரு ஆய்வு காட்டுகிறது.
சிறந்த வாழ்க்கைத் தரம், உயர் பாதுகாப்பு, சாதகமான வரிக் கொள்கைகள் ஆகியவை சிங்கப்பூர் முதலிடம் பெறுவதற்குக் காரணம் என ஆட்சேர்ப்பு ஆலொசனை நிறுவனமான ஆர்எஸ்ஏ சிங்கப்பூர் மேற்கொண்ட அந்த ஆய்வு குறிப்பிட்டது.
இரண்டாவது இடத்தை சீனாவும் மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியாவும் பெற்றுள்ளன.