தென்கிழக்காசிய வட்டாரத்தில் அமெரிக்கா அதன் வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேலும் ஆழமாக்கவேண்டும் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் வலியுறுத்தியிருக்கிறார்.
“பல ஆசியான் நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து முக்கிய வியூகப் பங்காளியாக இருந்தாலும், வர்த்தக, முதலீட்டு உறவுகளில் அமெரிக்காவைச் சீனா மிஞ்சுகிறது” என்று வாஷிங்டனில் உள்ள வியூக, அனைத்துலகக் கல்வி நிலையத்தில் (CSIS) ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளில், ஆசியானின் வர்த்தகப் பங்காளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா, இப்போது 4வது இடத்தில் உள்ளது.
ஆசியான் வட்டாரத்துடனான வர்த்தக ஒருங்கிணைப்பிலும் அமெரிக்கா பின்தங்கியிருக்கிறது. ஜப்பான், சீனா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் ஆசியானுடன் தடையற்ற வர்த்தக உடன்பாடுகள் செய்துவிட்டன.
இதற்கிடையே, ஆசியானின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகச் சீனா இடம்பிடித் திருக்கிறது. சீனாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு இவ்வாண்டு நடப்புக்கு வந்தது.
இதன்வழி, மக்கள் தொகை அடிப்படையில், உலகின் ஆகப்பெரிய தடையற்ற வர்த்தக வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
உயர் நிர்வாக அதிகாரிகளையும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பதற்காகத் திரு டியோ இவ்வாரம் அமெரிக்கத் தலைநகருக்கு வருகை மேற்கொண்டுள்ளார். திங்கட்கிழமை சிங்கப்பூர் தூதரகத்தில் அமெரிக்காவிலுள்ள சுமார் 100 சிங்கப்பூரர்களையும் அவர் சந்தித்தார்.