fontsize: 60% 70% 80% 90%

சட்டம் வலியுறுத்தும் தந்தையின் பொறுப்பு

தாயோடு சோறு போகும் தந்தையோடு கல்வி போகும் என்பது வாய்மொழி.
ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் தாய், தந்தை இருவருமே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
குழந்தைக்கு உணவூட்டி, நல்லபடியாக வளர்க்கும் பொறுப்பைப் பாரம்பரியமாகத் தாய் மேற்கொள்கிறார்.
குழந்தையின் கல்வி மற்றும் சமூக அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு தந்தை பொறுப்பாகிறார். இதுவும் வழிவழியாக வந்த வழமை. ஏனெனில் பொதுவாக பொருளீட்டுவது தந்தையின் கடமையாக இருந்துள்ளது. ஒரு பிள்ளை கல்வி மற்றும் ஏனைய துறைகளில் வளர்ச்சி அடைய பொருளாதார ஆதரவும் தேவைப்படுகிறது.
பெரும்பாலும் கணவன் - மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் இன்றைய சூழ்நிலையில் இந்நிலைமை மாறுபட்டாலும் குடும்பத்தைப் பராமரிக்கும் முக்கிய பொறுப்பைக் கணவன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
திருமணம் முறிவடைந்தாலும் தந்தையாக ஒரு கணவரின் பொறுப்பு தொடர வேண்டும்.
பல தந்தைமார்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதால், பிள்ளையைப் பராமரிக்கும் பொறுப்பைச் சட்டபூர்வமாக்கும் கட்டாயத்துக்கு அரசாங்கம் வந்துள்ளது.
அடுத்த 2011ம் ஆண்டு முதல் பராமரிப்புத் தொகை நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தும் சட்டம் நடப்புக்கு வருகிறது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் விவரித்த சமூக வளர்ச்சி இளையர் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பராமரிப்புத் தொகை கட்டத் தவறும் போக்கைத் தடுத்து, தொகை கட்டப்படுவதை உறுதிப் படுத்துவது நடவடிக்கைகளின் நோக்கம் என்றார்.
இதன்மூலம் விவாகரத்தான பெண்கள், தங்களுக்கும் தங்களது பிள்ளைகளுக்குமான பராமரிப்புத் தொகையைத் தடங்கல் இன்றிப் பெற முடியும்.
பராமரிப்புத் தொகை கட்டத் தவறும் கணவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சமூக சேவை செய்வது, நிதி நிர்வாக ஆலொசனைக்குச் செல்வது, வங்கி உத்தரவாதத் தொகையை ஒதுக்குவது போன்றவற்றை அவர் செய்யக்கூடும்.
சென்ற 2009ல் பராமரிப்பு உத்தரவு மீறல் தொடர்பாக
3,585 பேர் மீது கீழ் நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யப்பட்டது. 2008ம் ஆண்டைவிட இது 10% அதிகம்.
விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
கடந்த 20 ஆண்டுகளில், ஐந்து ஆண்டுக் காலத்தில் திருமணம் முறிவது இரு மடங்காகி உள்ளது.
இந்நிலையில் பராமரிப்பு உத்தரவை மீறுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.
தேசிய அளவில் உள்ள இந்தப் பிரச்சினை இந்திய சமூகத்தையும் பாதித்துள்ளது. ஒற்றைப் பெற்றோர் பிரச்சினை நம் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று.
எனினும், வெளிப்படையாக உதவிகோர இந்திய சமூகத்தினர் இன்னமும் தயங்குகின்றனர். சட்ட, சமூக உதவிகள் தேவைப் படுவோர் அவற்றைப் பெற சமூக அமைப்புகள் உதவ வேண்டும்.
ஒரு தந்தையின் பொறுப்பை வலியுறுத்த சட்ட நடவடிக்கை தேவைப்படுவது வருத்தத்துக்கு உரியது. ஆனால் அதுவே வழியாக இருக்கிறது.
அதேநேரத்தில் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பும் அரசாங்கத்துக்கு உள்ளது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838