பென்கூலன் ஸ்திரீட்டில் உள்ள தனியார் அடுக்குமாடியின் 5வது மாடியில் இருக்கும் வீடு ஒன்றில் பிலிப்பினோ மாது ஒருவரின் உடல் நேற்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் வரவேற்பு அறையில் மல்லாந்த நிலையில் கிடந்த அந்த உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இந்த சம்பவம் குறித்து அதிகாலை 3.20 மணிக்கு தகவல் கிடைத்த போலிசார், 10 நிமிடங்களில் விரைந்து வந்தனர்.
மரணமடைந்த மாதின் வீட்டில் இருந்து சத்தம் வந்ததைத் தொடர்ந்து அண்டை வீட்டுக்காரர் ஒருவர் அடுக்குமாடியின் பராமரிப்பாளரிடம் தெரிவித்தார்.
மாதின் வீடு அருகே சென்ற பராமரிப்பாளர், வாசல் கதவு திறந்திருப்பதைப் பார்த்தார்.
உள்ளே சென்றபோது மாதின் உயிரற்ற உடலைக் கண்டார்.
மாது தனியாக வசித்து வந்தார் என்று நம்பப்படுகிறது. அந்த வீடு வலுக் கட்டாயமாக திறக்கப்பட்ட அறிகுறிகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.