தாமிழ்நாட்டின் முதல்வர் மு கருணாநிதி இந்தியாவுக்கே வழிகாட்டி யாகத் திகழ்கிறார் என்றும் அவரது தலைமையின் கீழ் இந்தியாவுக்கே எடுத்துக் காட்டாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்றும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமை பீடம் வெகுவாகப் பாராட்டி இருக்கிறது.
முக்கியமான பிரச்சினைகளில் முதலில் திரு கருணாநிதியின் ஆலோசனையைக் கேட்டே தான் செயல்படுவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
திரு கருணாநிதியின் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறி இருக்காது என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி பகிரங்கமாக அறிவித்தார்.
“ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானதில் இருந்தே, அந்த கூட்டணிக்கும், எனக்கும், பிரதமருக்கும் வலிமையும், நம்பிக்கையும் தரக்கூடிய முக்கிய தூணாக கருணாநிதிதான் விளங்கி வருகிறார்.
“அவரது ஆதரவையும், அறிவார்ந்த ஆலோசனைகளையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்,” என்றும் சோனியா காந்தி சொன்னார்.
மன்மோகன் சிங், சோனியா, கருணாநிதி மூவரும் கலந்து கொண்ட புதிய சட்டமன்றத் திறப்பு விழா காங்கிரஸ்- திமுக உறவை இன்னும் வலுவாக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் முக்கிய எதிர்த்தரப்பான அதிமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தான் தயார் என்று பகிரங்க அறிவிப்பு விடுத்ததும் அதையடுத்து கூட்டணி மாற்றம் ஏற்படும் என்றும் அண்மையில் செய்திகள் வெளியாயின.
ஆனால் அவை எல்லாம் பொய் என்பதைப்போல இந்த நிகழ்ச்சி அமைந்தது.
நிகழ்ச்சியில் பேசிய முதலவர் கருணாநிதி, திமுக- காங்கிரஸ் உறவைத் துண்டிக்க வேண்டுமென்று எவ்வளவோ முயற்சிகள் இடம்பெற்றதாகவும் ஆனால் பகை மூட்டும் அந்த முயற்சிகள் எல்லாம் தங்களிடையே உள்ள உறுதிபாடு காரணமாகவெற்றி பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தமிழக புதிய சட்ட மன்றத் திறப்பு விழா எதிர்காலத்திலும் இந்த இரு கட்சிகளின் கூட்டு தொடரும் என்பதை அரசியல் கட்சிகளுக்கு வெளிச்சம் போட்டு வலுவாக எடுத்துக் காட்டி இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.