ஜகார்த்தா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தோனீசிய வருகைக்கு ஒரு வாரம் முன்னதாக, இந்தோனீசியப் போலிசாரும் ராணுவமும் சனிக்கிழமையன்று பயங்கரவாதத் தடுப்புப் பயிற்சிகளை நடத்தின.
தலைநகரிலுள்ள அனைத்துலக விமான நிலையம், பங்குச்சந்தை கட்டடம், சொகுசு ஔட்டல்கள், ஜகார்த்தாவுக்கு வடக்கே அமைந்துள்ள கடற்பகுதி போன்ற பல்வேறு இடங்களில் பயங்கரவாதத் தடுப்புப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
“பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களைக் கையாளும் திறனை ராணுவத்தினரும் போலிசாரும் வளர்த்துக்கொள்ள இப்பயிற்சிகள் உதவும் என்று நம்புகிறோம்” என்றார் இந்தோனீசிய ராணுவப் பேச்சாளர் சகோம் தம்போன்.
உலகிலேயே ஆக அதிக முஸ்லிம்கள் வாழும் இந்தோனீசியாவுக்கு அதிபர் ஒபாமா வருகை மேற்கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகப் பயிற்சிகள் நடத்தப்பட்டது “தற்செயலானதே” என்று அவர் கூறினார்.
இந்தோனீசிய அதிபர் சுசிலொ பம்பாங் யுதயோனோவின் அழைப்பை ஏற்று வருகை மேற்கொள்ளும் அதிபர் ஒபாமா, 1967ம் ஆண்டுக்கும் 1971ம் ஆண்டுக்கும் இடையில் சிறுவனாக இருந்தபோது ஜகார்த்தாவில் வாழ்ந்தார்.
அவர் மார்ச் 21ம் தேதி அமெரிக்காவிலிருந்து புறப்படுவார். குவாம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் அவர் செல்வார்.
- ஏஎப்பி