fontsize: 60% 70% 80% 90%

டொயோட்டா மீது கலிஃபோர்னியா வழக்கு

Bookmark and Share

லாஸ் ஏஞ்சல்ஸ்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில அரசாங்க வழக்குரைஞர்கள் டொயோட்டா நிறுவனத்தின்மீது வழக்கு தொடுத்துள்ளனர். ஜப்பானின் டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனம், வாகனங்களில் கோளாறுகள் இருப்பதை அறிந்திருந்தும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களை விற்றதாகக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டது.
உலகின் ஆகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, வாகனங்களின் பிரேக்கிலும் ஆக்சலரேட்டரிலும் உள்ள பிரச்னைகளால் பல மில்லியன் வாகனங்களை மீட்டுக் கொண்டுள்ளது.
வாகன விபத்துகளில் நேர்ந்த ஐந்து மரணங்களுக்கு ஆக்சலரேட்டர் பிரச்னையே காரணம் என்று கலிஃபோர்னிய அதிகாரிகள் கூறுகின்றனர். அதோடு மேலும் பல விபத்துகளையும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வழக்கு ஆவணங்கள் இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறி டொயோட்டா நிறுவனம் கருத்துரைக்க மறுத்துவிட்டது.
பற்பல கார் மாடல்களின் ஆக்சலரேட்டரில் கோளாறு இருப்பது தெரிந்திருந்தும், டொயோட்டா நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் சொல்லவில்லை என்று கலிஃபோர்னிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் இதுவரை ஆறு மில்லியன் வாகனங்களை டொயோட்டா நிறுவனம் மீட்டுக் கொண்டுள்ளது.
டொயோட்டா நிறுவனத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். இந்த வழக்குகளால் நிறுவனத்திற்குப் பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் அமெரிக்கத் தலைமையகம் கலிஃபோர்னியா நகரில் இருப்பதால், அதற்கு எதிராக வழக்கு தொடுக்கமுடியும் என்று வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். அமெரிக்கப் பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்டிருக்கும் முதல் வழக்கு இது என்று நம்பப்படுகிறது.
- பிபிசி

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838