சிறுமி ஃபாத்திமா லத்தீபிற்கு சிங்க நடனம் என்றால் பயம். சீனர்களின் இறுதி ஊர்வலம் வந்தால் அந்த இடத்திலேயே நிற்க மாட்டார்.
தற்போது மரீன் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டாக்டர் ஃபாத்திமா லத்தீப், அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு தமது தொகுதியில் நடைபெற்ற சீன திருவிழா ஒன்றை காணச் சென்றார்.
நேற்று மாலை கேலாங் ஈஸ்ட் { சிவன் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவை 3 மணி நேரம் அமர்ந்து பார்த்தார்.
இவ்வாறு மற்ற மதத்தினரின் நிகழ்ச்சி களிலும் சடங்குகளிலும் பங்கேற்பது, பிற மதங்களையும் நம்பிக்கைகளையும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது என்றார் டாக்டர் லத்தீப்.
இன, மத வேற்றுமைகளைக் களைந்து நல்லிணக்கம் வளர்க்க இந்தப் புரிந்துணர்வு அவசியம் என்பதை 100க்கும் மேற்பட்ட இளையர்களிடம் அவர் நேற்று வலியுறுத்தினார்.
மலாய் இளையர் இலக்கிய சங்கம் ஏற்பாடு செய்த இளையர் கருத்தரங்கின் தொடக்க விழாவில் டாக்டர் லத்தீப் சிறப்புரை ஆற்றினார்.
“ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு அந்த நிகழ்ச்சியைப் பற்றி தகவல்களைத் திரட்டுவேன்.
“இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பொங்கல் விழாவுக்கு அழைக்கப்பட்ட போது, பொங்கல் பற்றி நன்று அறிந்துகொண்டு சென்றேன்.
“இப்போது பொங்கல் விழா பற்றி எனக்குத் தெரியும். இதன் மூலம் இந்தியர் களின் கலாசாரத்தைப் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது,” என்றார் அவர்.
தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர் லத்தீப், “இன, மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை நாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார்.
பட்டக் கல்வி பயிலும் இளையர்களுக்காக மலாய் இளையர் இலக்கிய சங்கம் ஆண்டுதோறும் இக்கருத்தரங்கை நடத்துகிறது.
இந்த ஆண்டுக் கருத்தரங்கு “பல இன பொது புரிந்துணர்வை பின்பற்றுதல்,“ என்ற கருத்தை மையமாகக்கொண்டு நடைபெற்றது.
உள்ளூர் மாணவர்களுடன், மலேசியாவின், டெக்னாலஜி பெட்ரோனாஸ் பெராக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இளையர்களும் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் பேசிய நியமன நாடாளு மன்ற உறுப்பினர் திரு விஸ்வா சதாசிவன், “சிங்கப்பூரின் நல்லிணக்கத்தையும் அமைதியையும் கிள்ளுக்கீரையாகக் கருதக் கூடாது,” என்றார்.
தமது ஐந்து வயதில், 1964ம் ஆண்டு நேரில் பார்த்த அடிதடி சம்பவம் மனதை விட்டு இன்னும் அகலவில்லை என்ற அவர், நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் கட்டிக்காப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்றார்.
இளையர் மனதில் இன, சமயப் புரிந்துணர்வை கதை வடிவில் பதிய வைக்க வேண்டும் என்பது
திரு விஸ்வாவின் பரிந்துரை.
அது பெற்றோரால் மட்டுமே முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
மூன்று நாள் கருத்தரங்கின் ஔர் அங்கமாக, இளையர்கள் சிங்கப்பூரின் 4 முக்கிய இனத்தவர்களின் வழிப்பாட்டு இடங்களைப் பார்வையிட்டனர்.
இனம், மதம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து இளையர்களிடையே பொதுவான ‘மனிதத் தன்மையை’ அடையாளம் காண வேண்டும் என கருத்தரங்கில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
கருத்தரங்கில் பல விஷயங்களை அறிந்துகொண்டதாகக் கூறினார் மதராஸா பள்ளியில் புகுமுக இரண்டாம் வகுப்பில் பயிலும் திரு முகமது ரஹமத்துல்லா இடிரிக்.
“பேரிடர் சமயத்தில் இனம், மதம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. உயிரைக் காப்பாற்றுவதுதான் முக்கியமாக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.