சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் ஆகாயப்படைகளும் நடத்திய கூட்டுப்பயிற்சி தாய்லாந்தின் கொரட் விமானத்தளத்தில் சனிக்கிழமை முடிவடைந்தது.
“கோப் டைகர்” என்றழைக்கப்படும் கூட்டுப்பயிற்சியில் 80 விமானங்களும், 36 ஆகாயவெளித் தற்காப்புச் சாதனங்களும் சுமார் ஆயிரம் அதிகாரிகளும் பங்கெடுத்தனர்.
“கோப் டைகர்” கூட்டுப்பயிற்சி 1994ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பங்குபெறும் ஆகாயப்படைகளின் செயல்திறனையும் நிபுணத்துவத்தையும் மேம்படுத்துவது பயிற்சியின் நோக்கம் என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
ஆகாயப்படை அதிகாரிகளுக்கு இடையில் அணுக்கமான புரிந்துணர்வை வளர்ப்பதும் பயிற்சியின் நோக்கமாகும்.
கூட்டுப்பயிற்சியின் பங்கேற்பாளர்கள், கொரட் நகரில் வாழும் மக்களுக்கு அடிப்படை சுகாதார, பல் மருத்துவப் பராமரிப்பு வழங்கும் மூன்று நாள் சமூக நடவடிக்கையிலும் பங்கெடுத்தனர்.