காம வீடியோ தொடர்பில் இவ்வளவு நாட்கள் வாய் மூடி இருந்த சாமியார் நித்யானந்தா, ஒருவழியாக தம் மவுனத்தைக் கலைத்து இருக்கிறார்.
வீடியோவில் காட்சி தந்தது தாம்தான் என்று முதல் தடவையாக ஒரு பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
அந்தப் பேட்டி, சாமியாரின் மூன்றாவது பேட்டி. சாமியாரிடம் முதல் பேட்டியை எடுத்த அவரது ஆசிரமப் பேச்சாளர் மூலமாக இந்த மூன்றாவது பேட்டியும் வெளியாகி இருக்கிறது.
நித்யானந்தா சாமியார், இரண்டாவது பேட்டியை அவரது பக்தர் ஒருவருக்கு அளித்திருந்தார்.
ஒரு பக்தையாகச் சாமியாருக்குத் தாம் தொண்டு செய்ததாகவும் அந்தத் தொண்டுகளில் அவருக்கு எண்ணெய்த் தேய்த்துவிட்டது உட்படப் பலவும் உண்டு என்றும் அத்தொண்டுகளையே வீடியோக்கள் காட்டின என்றும் ஏற்கனவே நடிகை ரஞ்சிதா ஒப்பபுக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமியாரின் மூன்றாவது பேட்டியில், அவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பதிலைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.
“அந்த வீடியோவில் இரண்டு பேர் உடையுடன்தான் இருக்கிறார்கள். இது சட்ட விரோதமான காரியம் இல்லையே?” என்று சாமியாரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த சாமியார் ஆமாம் என்பதைப்போல் சைகை காட்டினார்.
“இதில் யாரும் யாரையும் பலவந்தப்படுத்த வில்லை” என்றும் பேட்டியில் சாமியார் தெரிவித்துள்ளார்.
இதை வைத்துப் பார்க்கையில், வீடியோவில் நடிகையுடன் காணப்பட்டது தான்தான் என்பதை முதல் தடவையாகச் சாமியார் ஒப்புக்கொண்டு இருப்பது புரிந்தது.
“ஆசிரமம், ஆன்மீக நடவடிக்களில் ஈடுபட்டு வந்ததால் ஒரு சதித் திட்ட தாக்குதல் நடக்கப்போகிறது என்பது பற்றி ஆசிரமத்துக்குத் தெரியவில்லை.
“ஆசிரமத்தின் பொது உறவுத்துறை தலையில் இடி விழுந்த கதையானது.
“இந்த சதித்திட்ட தாக்குதல் பற்றி நாங்கள் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.
“இத்தகைய தாக்குதலை எப்படிச் சமாளிப்பது என்பதும் எங்களுக்குத் தெரியாது,” என்றும் மூன்றாவது பேட்டியில் சாமியார் சொல்லி இருக்கிறார்.
“நாங்கள் அமைதியானவர்கள். எளிமை யானவர்கள். பக்தர் வடிவில் எதிரி பதுங்கி இருப்பார் என்று ஒருபோதும் நாங்கள் நினைத்ததில்லை.
“பொதுத் தகவல் சாதனங்கள் எங்களைக் கலந்து கருத்து கேட்காமல் ஒருதலைபட்சமாகச் செய்திகளை வெளியிட்டன.
“மக்களை எட்டுவதில் எங்களைவிட பொதுத் தகவல் சாதனங்கள் மிகவும் சக்திமிக்கவை. ஆகையால் அதிகம் பேர் அச்செய்திகளை எல்லாம் நம்பிவிட்டனர்.
“நாங்கள் சட்ட ரீதியாக இந்த விவகாரத்தின் உண்மைகளைத் தெளிவுபடுத்தத் தீவிர முயற்சியில் இருக்கிறோம். சட்ட ரீதியாக நாங்கள் ஏதும் தவறு செய்யவில்லை என்பதை நிரூபித்த பிறகே என் தரப்பு நியாயங்களை விளக்கமாக எடுத்து சொல்வேன்,” என்று பேட்டியில் நித்யானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் இப்படிச் சொன்னாலும் பொது தகவல் சாதனங்கள் அவருடைய ஆசிரம தரப்புச் செய்திகளை, நடிகை ரஞ்சிதா பேட்டி உள்ளிட்ட பலவற்றையும் விலாவாரியாக வெளியிட்டுத்தான் இருக்கின்றன.
இதற்கிடையே சாமியார் இருக்குமிடம் இன்னமும் ரகசியமாகவே இருக்கிறது.
சாமியார் உயிருக்கு ஆபத்து மிரட்டல் இருப்பதால்தான் அவர் பதுங்கி இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மிரட்டல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும் ஆசிரமத்துக்குப் பாதுகாப்பு கோரி யாரும் கோரிக்கை விடுக்கவில்லை என்று கர்நாடகத் தரப்பு தெரிவித்துள்ளது. கூட்டம் நிரம்பி வழிந்த சாமியாரின் பெங்களூரு ஆசிரமத்தில் இப்போது வெறும் 20 பேர் மட்டுமே எஞ்சி இருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவித்துள்ளன.