fontsize: 60% 70% 80% 90%

தேக்கா சந்தையில் மீண்டும் மின் தடை

- தமிழவேல் -

தேக்கா சந்தையில் நேற்று நண்பகல் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையினால் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது மின்தடை இது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகுதான் மின்சாரம் திரும்பியது.
நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மின்சாரம் திரும்பிய போதும் அது தங்களுக்கு மிகுந்த அசௌகரியத்தையே தந்தது என்று பல தேக்கா கடைக்காரர்கள் வருந்தினர்.
“இருட்டில் இறைச்சி வெட்டுவது மிகவும் சிரமம், இறைச்சி அரைக்கும் இயந்திரமும் வேலை செய்யவில்லை. மின்சாரம் திரும்பும் வரை வியாபாரமும் பாதிக்கப்பட்டது,’’ என்றார் இறைச்சி கடை உரிமையாளர் திரு உசேன் பாய்(38).
“நான் கண்டிப்பாகக் கட்டுமானக் குத்தகைதாரர்கள் மீதுதான் தவறு என்பேன், ஒன்றரை ஆண்டு களுக்கு மேல் தேக்கா சந்தையை புதுப்பித்தார்களே, என்ன செய்தார்கள்?’’ என்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
தமது தந்தை காலம் முதல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இறைச்சிக் கடை தேக்கா சந்தையில்தான் உள்ளது என்று தெரிவித்த திரு உசேன், மின்சாரத் தடை பல பாதுகாப்புப் பிரச்சினை களையும் தருகிறது என்று விவரித்தார்.
“நாங்கள் இறைச்சி வெட்டும் போது மட்டுமல்ல, பொதுமக்கள் நடக்கும்போதும், இருட்டு காரணமாக தரையில் ஈரம் இருக்கிறதா என்பதைப் பார்க்க முடியாது. மேலும் எங்கள் குளிர் பதன வசதியும் தடைபட்டுப் போகிறது,’’ என்றார் திரு உசேன்.
தேக்கா சந்தை புதுப்பிக்கப் பட்டதற்கு முன் இது போன்ற மின்சாரத் தடைகள் ஏற்பட்டதில்லை என்றும் அவர் கூறினார்.
மின்தடை ஏற்பட்டுச் சுமார் அரை மணி நேரம் கழித்துச் சிறிது நேரத்தில் திரும்பிய மின்சாரம், மீண்டும் போய்விட்டது என்றும் அதன் பின்னர் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கழித்து மின்சாரம் தடையின்றி வந்தது என்றும் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
“வார இறுதியில்தான் அதிகமான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். அதுவும் நண்பகலில் மதிய உணவு உண்ணும் நேரத்தில் மின்சாரம் போனதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது,’’ என்று ஏ ஆர் ரஹ்மான் உணவு மற்றும் பானக் கடை உரிமையாளர் திரு முஜிபுர் ரஹ்மான் (38) தெரிவித்தார்.
கரும்புச் சாறு பிழியும் இயந்திரம், ‘ஐஸ்’ கட்டி இயந்திரம், என்று அனைத்தும் மின்தடையால் பாதிக்கப்பட்டன என்றார்.
அவருடைய உணவுக் கடையில் பணி புரியும் 63 வயது திரு அப்துல் காதர், மின்தடை ஏற்பட்டபோது வாடிக்கை யாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது என்று குறிப்பிட்டார்.
திரு ரஹ்மான் கடந்த 12 வருடங்களாக தேக்கா சந்தையில் கடை வைத்திருக்கிறார்.
கடந்த சன¬க்கிழமைதான் மூன்று மணி நேரம் தேக்கா சந்தையில் மின் தடை ஏற்பட்டது. இப்போது மீண்டும் சன¬க்கிழமை அதுவும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் மின் தடை ஏற்பட்டதும் மின்சாரம் திரும்புவதற்கு அதே போல நேரமாகுமோ என்று பல கடைக்காரர்கள் எண்ணியதாகத் தெரிவித்தனர்.
மின் தடை ஏற்பட்டதற்கு அளவுக்கு மீறிய மின்சார உபயோகம் காரணமாக இருக்கக் கூடும் என்று சில தேக்கா சந்தை கடைக்காரர்கள் கருதுகிறார்கள்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838