சென்னையில் மைய பகுதியில் சுமார் 150 மில்லியன் வெள்ளி (ரூ.450 கோடி) செலவில் பிரமாண்டமான முறையில் எழுந்துள்ள புதிய சட்டசபை வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை திறந்து வைத்தார்.
பலத்த பாதுகாப்பு, வெகு சிறப்பு ஏற்பாடுகளோடு, முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் திறப்பு விழா நடந்தது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர முதல்வர் ரோசய்யா, புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் உள்ளிட்ட ஏராள தலைவர்களும் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவுக்காகச் சென்னை ஔமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 8,000 பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலை சென்னை வந்த திரு மன்மோகன் சிங்கையும் சோனியாவையும் விமான நிலையம் சென்று முதல்வர் கருணாநிதி வரவேற்றார்.
வரவேற்புக்குப் பின்னர் பிரதமரும், சோனியாவும் புதிய தலைமைச் செயலக வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சட்டமன்றத்தைத் திறந்து வைத்ததற்கு முன்னதாகப் பிரதமர் மன்மோகன் சிங் மரக் கன்றுகளை நட்டார். பின்னர் பிரதமரும், சோனியாவும் சட்டசபை வளாகத்தைப் பார்வையிட்டனர்.
சட்டமன்றத் திறப்பு விழாவுக்காகவே சென்னை வந்த இரு தலைவர்களும் நேற்றே டெல்லி புறப்பட்டனர்.
இந்த நிதியாண்டுக்கான பட்ëஜட், புதிய சட்டசபையில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று கருணாநிதி விரும்பினார். அதற்கேற்ப, சட்டமன்றக் கட்டடம் மிகவும் வேகமாகக் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.
இதில், வரும் 19-ந் தேதி வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அந்தத் திட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் இருக்கும் என்று நம்பப் படுகிறது.