fontsize: 60% 70% 80% 90%

நிர்வாகப் பிரிவினருக்கு அதிக பயிற்சி வாய்ப்புகள்

பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுணுக்கர்கள் (PMETs) ஆகியோர் அடுத்த ஐந்தாண்டு களில் அதிகமான தொடர் கல்வி, பயிற்சி வாய்ப்புகளைப் பெறவிருக்கிறார்கள்.
இவர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளின் எண்ணிக்கை தற்போதைய 50,000ல் இருந்து 2015ம் ஆண்டுக்குள் 240,000 ஆக ஐந்து மடங்கு அதிகரிக்கப்படும் என்று மனிதவளத் துணை அமைச்சர் லி ய~ ஷியான் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
“அதாவது, மூன்று பயிற்சி வாய்ப்பு களில் ஒன்று இவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது மிகப் பெரிய முயற்சியாக இருந்தாலும், அவசிய மான ஒன்றாகும்” என்று மனித வள அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அவர் நாடாளு மன்றத்தில் கூறினார்.
நிர்வாகப் பிரிவினருக்கான தொடர் கல்வி, பயிற்சித் திட்டத்தில் அடிப்படை தரநிலை மாற்றங்கள் செய்யப்படும் என்றும் திரு லி தெரிவித்தார்.
நிர்வாகப் பிரிவினர் புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளவும், தங்களது நிபுணத்துவத் திறனை வளர்த்துக் கொள்ளவும் இந்த மாற்றம் உதவும். இதனால், ஊழியர்களும் எப்போதும் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும் என்றார்.
தொடர் கல்வி, பயிற்சித் திட்டம் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், ஊழியர்களுக்கு வாழ்நாள் கல்வியும் திறன் மேம்பாடும் வழங்குவதில் அரசு உறுதி யாகச் செயல்பட்டு வருவதாகத் திரு லி சொன்னார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838