சிங்கப்பூரின் சட்டச்சேவைத் துறை பெரும் வளர்ச்சி அடைந்திருப்பதாகச் சட்ட அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்திருக்கிறார்.
தனது அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் பேசிய திரு சண்முகம், சட்டச்சேவை தொழில்துறை தாராளமயமாக்கப்பட்டது முதல் நல்ல வளர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறினார்.
சென்ற 2008ம் ஆண்டு சட்டச்சேவைத் துறை 4.2% வளர்ச்சியும், சென்ற ஆண்டு 4.3% வளர்ச்சியும் அடைந்தது.
சென்ற 2008ம் ஆண்டு 1.4% வளர்ச்சி அடைந்த சிங்கப்பூரின் பொருளியல், 2009ம் ஆண்டு 2% சுருங்கியது. ஆனால், சட்டச்சேவைத் துறை மட்டும் நல்ல வளர்ச்சி அடைந்ததாகத் திரு சண்முகம் சுட்டிக்காட்டினார்.
சட்டச்சேவை துறையில் கிடைக்கும் புதிய வாய்ப்புகளால், திறனாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சிங்கப்பூரிலுள்ள வழக்கறிஞர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 8% அதிகரித்தது.
அதேபோல, 2007ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடையில், சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டுச் சட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்குச் சுமார் 26% அதிகரித்தது.
தற்போது சிங்கப்பூரில் சுமார் 100 வெளிநாட்டுச் சட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மன்றம் கையாண்ட வழக்குகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 60% அதிகரித்து 160ஐ எட்டியது. இவற்றில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவை அனைத்துலக வழக்குகளாகும்.