இந்தியாவுடனான உறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புட்டின், இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு நேற்று புதுடில்லி சென்றார்.
புதுடெல்லி விமான நிலையத்தில் புட்டினுக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நேற்று இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலையும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் சந்தித்தார். இந்த வருகையின்போது முக்கிய அம்சமாக 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள விண்வெளி, மின்சாரம், பாதுகாப்புத்துறை, போன்ற துறை சார்ந்த 12 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் படவுள்ளன.
மிக்-29 போர்விமானங்கள், அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற அணுசக்திப் போர்க்கப்பல் போன்றவற்றை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தமும் இதில் அடங்கும். அணுசக்தி துறையில் பல முக்கிய உதவிகளை ரஷ்யாவிடம் பெற இன்று போடப்படும் ஒப்பந்தங்கள் உதவும் என்று தெரிகிறது. ரஷியாவிடம் இருந்து இந்தியா விமானம் தாங்கி கப்பல் ஒன்றை வாங்கி உள்ளது.
விக்ரமாதித்யா என பெயரிடப் பட்டுள்ள அந்த கப்பல், விலை நிர்ணயத்தில் கடந்த சில மாதங்களாக சிக்கல் நீடிக்கிறது. இந்தச் சந்திப்பின்போது அதற்குத் தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கு இடையேயான விசா நடைமுறைகளை எளிமையாக்குவது குறித்தும் புட்டின்-மன் மோகன்சிங் புதிய ஒப்பந்தம் செய்கிறார்கள். அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை தயாரித்து விற்பது தொடர்பாகவும் அவர்கள் ஒப்பந்தம் செய்ய உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதுதவிர இரு நாடுகளும் இணைந்து ஐந்தாம் தலைமுறை விமானத்தை உருவாக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாக வுள்ளது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகளை கட்டித் தரும் ஒப்பந்தத்திலும் ரஷ்யா கையெழுத்திடவுள்ளது.
மன்மோகன் சிங்கும், புடினும் சந்தித்துப் பேசும்போது தலிபான்கள் பிரச்சினை குறித்தும் விவாதித்தனர்.