fontsize: 60% 70% 80% 90%

தாய்லாந்தில் பிரமாண்டமான எதிர்ப்பு ஊர்வலம்

Bookmark and Share

பேங்காக்
வெள்ளிக்கிழமை தொடங்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் வார இறுதியில் பெரிய அளவில் உருவெடுக்கும் என்று எதிர்பார்த்து தாய்லாந்து அரசாங்கம் ஆயத்தமாகிறது.
வார இறுதியில் 150,000 பேர் வரை தெருக்களில் போராட்டம் நடத்தக்கூடும் என்று எதிர் பார்க்கப்படு வதால், 50,000 பாதுகாப்புப் படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் பனிடன் வட்டநயகோர்ன் தெரிவித்தார்.
பெரிய அளவில் நடைபெறவிருக்கும் எதிர்ப்புப் போராட்டம் அமைதியான முறையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தேவை ஏற்பட்டால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பயன்படுத்தப்படும் என்று ராணுவப் பேச்சாளர் கர்னல் சன்சர்ன் காவ்கும்னர்ட் தெரிவித்தார்.
“வன்செயலில் ஈடுபடவேண்டாம் என்று போராட்டக்காரர்களுக்கு முடிந்தவரையில் எடுத்துச் சொல்வோம். ஆனால், நிலைமை மோசமானால், கண்ணீர்ப்புகை பயன்படுத்துவோம்” என்றார் அவர்.
“சிவப்பு சட்டை” போராட்டக்காரர்களில் முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவாத்ராவின் ஆதரவாளர்களும் அடங்குவர். தாய்லாந்தில் ஒரு முழு தவணைக்காலம் பதவி வகித்த ஒரே பிரதமரான தக்சின், 2006ம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டால். ஆனால், இன்றுவரை அவர் மக்களிடையில் பிரபலமாக இருந்து வருகிறார்.
தற்போதைய பிரதமர் அபிசித் விஜஜீவா ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று கூறும் போராட்டக்காரர்கள், புதிய தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோருகிறார்கள்.
தக்சின் வெளியேற்றப்பட்ட பிறகு, தாய்லாந்தில் அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டது. ஆகக் கடைசியாக, தக்சின் வெளியேற்றப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் பல்லாயிரக்கணக்கான சிவப்புச் சட்டை போராட்டக்காரர்கள் தலைநகர் பேங்காக்கில் ஒன்று திரண்டனர்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838