மாஸ்கோ
புதிய அணுவாயுதக் களைவு உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை கருத்துப் பிணக்கால் தடைபட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தபோதிலும், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை திட்டமிட்டபடி தொடர்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
“கூடிய விரைவில் புதிய உடன்பாட்டில் கையெழுத்திடும் சாத்தியத்தை நிறைவேற்றுவதே இருதரப்பினரும் கொண்டுள்ள நோக்கம்,” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஆன்ட்ரே நெஸ்டரன்கோ செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் இவ்வாரம் ஜெனீவாவில் சந்தித்து உடன்பாடு குறித்து பேச்சு நடத்தினர். சென்ற 1991ம் ஆண்டு, கெடுபிடிப்போர் காலத்தில் செய்யப்பட்ட “வியூக ஆயுதக் குறைப்பு உடன்பாடு” (START) டிசம்பர் மாதம் காலாவதியாகிவிட்டது. அதற்குப் பதிலாகப் புதிய உடன்பாடு செய்யவே இரு நாடுகளும் பேச்சு நடத்துகின்றன.
மாற்று உடன்பாட்டின் நிறைவேற்றத்திற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. அணுவாயுதங்களற்ற உலகை நிலைநாட்டும் ஒபாமாவின் இலக்கு நிறைவேற புதிய உடன்பாடு உதவும்.