தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் தக்சின் ஆதரவாளர்களின் பேரணிகளை எதிர்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் 50,000 வீர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்தராவின் ஆதரவாளர்கள் இன்று முதல் பெருமளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அவருக்கு எதிரான தீர்ப்பு ஒன்றில் தாய்லாந்தின் உச்சநீதிமன்றம் முடக்கி வைக்கப்பட்ட தக்சினின் சொத்துகளில் 1.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலானவற்றை அரசாங்கம் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் தாய்லாந்தின் துணைப் பிரதமர் சுத்தேப் தவுக்சுபான் 30,000 ராணுவ வீரர்கள், 10,000 போலிசார் மற்றும் 10,000 தொண்டூழியர்கள் பணியில் நேற்றே அமர்த்தப்பட்டு விட்டதாகக் கூறியதாக ஏஎப்பி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
“ஆர்ப்பாட்டக்காரர்கள் ராணுவத் தளங்களிலோ போலிஸ் நிலையங்களிலோ அத்துமீறி நுழைந்தால் நாங்கள் அவர்களை பயங்கரவாதிகளாகக் கருதி ஆயுதப் பலப் பிரயோகம் செய்து நசுக்குவோம்,” என்றார் தாய்லாந்துத் துணைப் பிரதமர்.
முன்னாள் பிரதமர் தக்சின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்ள தாய்லாந்து அரசாங்கம் ராணுவத்தினரை ஈடுபடுத்தவும், ஊரடங்கை அறிவிக்கவும், கூட்டங்களுக்குத் தடை விதிக்கவும் தயாராக உள்ளது.
இதற்கு ஏதுவாக, நாட்டின் கடுமையான உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆர்பாட்டக்காரர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்ய பேங்காக்கிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சிவப்புச் சட்டைக்காரர்கள் என்று வர்ணிக்கப்படும் தக்சின் ஆதரவாளர்கள் தங்களுடைய ஆர்ப்பாட்டங்களில் ஏறக்குறைய 600,000 பேர் கலந்துகொள்வர் என்று கூறுகின்றனர்.