fontsize: 60% 70% 80% 90%

சிங்கப்பூர்: மூன்று மசோதாக்கள் தாக்கல்

அரசமைப்புச் சட்டத்தையும், அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் சட்டங்களையும் திருத்த மூன்று மசோதாக்கள் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நடத்தப்படவேண்டிய அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் முறையில் மாற்றங்கள் செய்ய இது வழிவகுக்கும்.
பிரதமர் திரு லீ சியன் லூங், அரசியல் முறையில் செய்யப்படக் கூடிய பல்வேறு மேம்பாடுகளைச் சென்ற ஆண்டு மே மாதம் பரிந்துரைத்தார்.
குழுத்தொகுதிகளின் அளவைக் குறைத்தல், தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தை நிரந்தரமாக்குதல் ஆகியவை அவரது பரிந்துரைகளில் அடங்கும்.
சிங்கப்பூரர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கவும், நாடாளுமன்றத்தில் மேலும் பலதரப்பட்ட கருத்துகள் வெளிப்பட வாய்ப்பளிக்கவும் இந்த மாற்றங்கள் வழிகோலும் என்றார் திரு லீ.
ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள், எத்தனை குழுத் தொகுதிகளும் தனித் தொகுதிகளும் இருக்கும் என்பதை நிர்ணயிக்காது.
தொகுதிகளின் எண்ணிக்கையைத் தொகுதி எல்லைகள் பரிசீலனைக் குழு நிர்ணயிக்கும்.
பிரதமர் லீ 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் குறிப்பிட்ட “வாக்குக்கு முந்திய ஓய்வு நாளை” அமல்படுத்த, அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் சட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள் வழிவகுக்கும்.
வாக்களிப்பு நாளுக்கு முதல் நாள் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் ஓய்வு நாள் விதிக்கப்படும். இந்நாளில் கட்சி அரசியல் ஒளிபரப்புகள் தவிர்த்து, வேறெந்த வகையான தேர்தல் பிரசாரங்களும் நடத்தக்கூடாது.
சமூகத்தில் புதிய ஊடகங்களின் தாக்கம் குறித்த ஆலோசனை மன்றம் (AIMS) செய்த பரிந்துரைக்கு ஏற்ப, தனிப்பட்டவர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை இணையத்தில் வெளியிட அனுமதிக்கப்படும். ஆனால், வெளிநாட்டவர்களுக்கு இந்த அனுமதி கிடையாது.
மேலும், தேர்தலைக் குலைக்கக்கூடிய எந்தவித இடரையும் சமாளிக்க, பல்வேறு வகையான நடவடிக்கைகளும் மாற்றத்தில் உள்ளடக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, நாடாளு மன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர்கூட தேர்ந்தெடுக்கப் படாமல் தேர்தல் முற்றிலும் தோல்வியடைந்தால், தேர்தல் சட்டப்பத்திரத்தை அதிபர் ரத்து செய்துவிட்டு, புதிய சட்டப் பத்திரத்தை வெளியிடலாம்.
வேட்பாளர் பதிவு நேரத்தை மாற்ற அல்லது வாக்குச் சாவடியில் முன்கூட்டியே வாக்களிப்பை நிறுத்த தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப் படலாம். வெளிநாடுகளிலுள்ள வாக்குச் சாவடிகளுக்கும் இது பொருந்தும்.
தேர்தல் செலவு விதிகளைச் சீர்ப்படுத்தி, அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் சட்டங்களின்கீழ் இடம்பெறும் குற்றங்களைத் திருத்துவதும் மற்ற மாற்றங்களில் உள்ளடங்கும்.
தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838