தமிழக அரசியலில் நாளை சனிக்கிழமை புதிய வரலாறு ஒன்று உருவாகப்போகிறது.
நகரின் முக்கிய இடத்தில் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகி வரும் புதிய சட்டமன்றக் கட்டடம் காலாகாலத்துக்கும் திரு கருணாநிதியின் பெயர் சொல்லும் வகையில் பல சிறப்பு அம்சங்களுடன் அமைகிறது.
நிலையான அரசியல் வடிவாகத் திகழ இருக்கும் அந்தக் கட்டடத்தை, முற்றிலும் கட்டி முடிக்காமலேயே முதல்வர் திறக்கிறார்.
முதல்வர் கருணாநிதியின் இந்த அவசர அரசியலுக்குப் பின்னணியில் பல வியூகங்கள் இருப்ப தாகக் குறப்படுகிறது.
திரு கருணாநிதி ஏராளத் திட்டங் களுக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் சொந்தக்காரர் என்றாலும் இந்தச் சட்டமன்றத் திட்டத்தில் அவர் காட்டும் அவசரம் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.
தள்ளாத 86 வயதிலும் முதல்வர், 60 தடவைகளுக்கும் மேலாக, நடு இரவிலும் பகலிலும் நேரடியாகச் சென்று சட்டமன்றப் பணிகளை முடுக்கி விட்டு இருக்கிறார்.
திராவிட கலாசாரத்தையும் அதி நவீன தகவல் தொழில் நுட்பத்தையும் தன்னிடத்தே கொண்டு அமைய இருக்கும் புதிய சட்டமன்றக் கட்டடம் இன்னமும் முழுமை யாகக் கட்டி முடிக்கப் படவில்லை.
இருந்தாலும் அதற்குள்ளாகவே அது நாளை சனிக்கிழமை திறப்பு விழா காண்கிறது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முன்னிலையில், திரு கருணாநிதி தலைமையில், பிரதமர் மன்மோகன் சிங் புதிய சட்டமன்றத்தை திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் திருமதி சோனியா, காங்கிரஸ்- திமுக உறவைப் பலப் படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று இரு கட்சிகளுமே நம்புகின்றன.
அப்படி அறிவிப்பு வெளியானால், அது அடுத்த தேர்தலில் திமுக காங்கிரஸ் அணிக்கு மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.
அந்த வெற்றி மூலம் திரு கருணாநிதியின் புதல்வர் ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்பதற்கான வழி ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. அதோடு புதிய மன்றத்தில் தாக்கலாக இருக்கும் புதிய வரவு செலவுத் திட்டம், ஸ்டாலின் முதல்வராக மிகவும் உறுதுணை யாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைவரின் மனம் கவர்ந்த வரலாற்றுத் திட்டங்களில் இரண்டு திட்டங்கள் மிகவும் முக்கியமானவை.
அவற்றில் ஒன்று சென்னையில் இருக்கும் வள்ளுவர் கோட்டம். 1974ல் அந்தக் கோட்டத்துக்கு அடிக்கல் நாட்டியவர் அப்போதைய முதல்வர் திரு கருணாநிதி.
ஆனால் 1976ல் பதவி போய்விட்டதால் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அவர் வெளியே நின்று பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மற்றொரு திட்டம், கன்னியாகுமரி வள்ளுவர் சிலை.
அதற்கு 1975ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் முடிவு எடுக்கப்பட்டு 1979ல் அடிக்கல் நாட்டப் பட்டது.
குமரி வள்ளுவர் சிலையை 2000ம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல்நாள்தான் திரு கருணாநிதி திறந்துவைத்தார்.
அப்படிப்பட்ட சூழல் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பது முதல்வரின் அவசரத்துக்கு ஒரு காரணம். அவருடைய வயது மற்றொரு காரணம்.
அண்ணா நூலகத் திறப்பு விழா, உலகத் தமிழ் மாநாடு, தேர்தல் என்று அடுத்தடுத்து முதல்வர் செய்து முடிக்க வேண்டிய பணிகள் பல இருப்பதும் அவசரத்துக்கு அடுத்தடுத்த காரணங்கள் என்று கூறப்படுகிறது.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க நாளைய திறப்பு விழாவுக்கு வரவேண்டும் என்று கட்சியினருக்குத் திரு கருணாநிதி அன்புக் கட்டளை பிறப்பித்து இருப்பதையடுத்து இன்று வெள்ளிக் கிழமையே தொண்டர்கள் சென்னையை நோக்கி புறப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படிப்பார்த்தாலும் புதிய சட்டமன்றக் கட்டடம் முதல்வரின் புதல்வர் ஸ்டாலின் அடுத்த முதல்வர் ஆவதற்கான கதவை அகல திறக்கும் என்பதே அரசியல் கணிப்பாக இருக்கிறது.