fontsize: 60% 70% 80% 90%

டால்ஃபின் வேட்டை பற்றிய விளக்கப்படம் ஜப்பானில் திரையிடக்கூடும்

Bookmark and Share

தோக்கியோ
ஜப்பானிய மீன்பிடி கிராமத்தில் டால்ஃபின்கள் கொடூரமான முறையில் வேட்டையாடப்படுவதைக் காட்டும் “The Cove” எனும் விளக்கப்படம் ஆஸ்கர் விருதை வென்றதைத் தொடர்ந்து, ஜப்பானில் படம் திரையிடப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இப்படத்தைப் பற்றி ஜப்பானியர்கள் பலரும் கேள்விப்படாததால், ஆகச்சிறந்த விளக்கப் படத்திற்கான ஆஸ்கர் விருதை இப்படம் வென்ற செய்தி அவர்களுக்கு வியப்பளித்தது.
முன்னாள் “நேஷனல் ஜாக்ரஃபிக்” புகைப்படக்காரர் இயக்கிய இந்த அமெரிக்கப் படம், ஜப்பானியத் திரையரங்குகளில் இதுவரை திரையிடப்படவில்லை. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தோக்கியோ அனைத்துலகத் திரைப்பட விழாவில் மட்டும் ஒரே ஒரு முறை இப்படம் திரையிடப்பட்டது.
ஜப்பானிலுள்ள டாய்ஜி எனும் மீன்பிடி நகர் தெரிவித்த எதிர்ப்பால், ஜப்பானியத் திரையரங்குகள் படத்தைத் திரையிட விரும்பவில்லை.
சுமார் 3,800 மக்கள் வாழும் இந்நகர், “வர்த்தகத்திற்காகத் திமிங்கிலத்தை வேட்டையாடும் பழக்கம் தோன்றிய இடம்” என்று கூறிக் கொள்கிறது. நகர மக்களின் அனுமதியின்றி படமெடுக்கப் பட்டதால், படத்தைத் திரையிடக்கூடாது என்று ஜப்பானிய பட விநியோகஸ்தர்களிடம் நகர அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
- வால் ஸ்திரீட் ஜர்னல்

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838